முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ராகுலுக்கு தண்டனை அளிக்கப்பட்ட விவகாரம்: கே.எஸ். அழகிரி தலைமையில் கும்பகோணத்தில் ரயில் மறியல்

வியாழக்கிழமை, 23 மார்ச் 2023      தமிழகம்
KS-Alagir 2023-03-23

Source: provided

கும்பகோணம்: காங்கிரஸ் கட்சி எம்.பி. ராகுல் காந்திக்கு தண்டனை அறிவிக்கப்பட்டதைக் கண்டித்து கும்பகோணம் ரயில் நிலையத்தில் காங்கிரஸ் கட்சியினர் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ராகுல் காந்தி கடந்த 2019-ம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தல் பிரச்சாரத்தில், கர்நாடக மாநிலம் கோலார் பகுதியில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் உரையாற்றியபோது பிரதமர் மோடியை விமர்சித்து கருத்து தெரிவித்தார். இது குறித்து சூரத் நீதிமன்றத்தில் அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு அங்கு நடைபெற்ற வந்த நிலையில், இவ்வழக்கின் விசாரணை நேற்று நீதிமன்றத்திற்கு வந்தது. வழக்கினை விசாரணை செய்த நீதிபதி, ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். எனினும், இந்த வழக்கில் ராகுல் காந்திக்கு ரூ.10,000 பிணையில் ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் சென்னை செல்வதற்காக, கும்பகோணம் ரயில் நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் கட்சி மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரி மற்றும் அவருடன் வந்த தஞ்சாவூர் வடக்கு மாவட்டத் தலைவர் டி.ஆர்.லோகநாதன், மாநகரத் தலைவர் மிர்சாவூதீன், மாநிலத் துணைத் தலைவர் ஜி.ராஜேந்திரன், மாநிலப் பொதுக்குழு உறுப்பினர் வி.தியாகராஜன் மற்றும் காங்கிரஸ் கட்சியினர், ராகுல் காந்திக்கு நீதிமன்றத்தில் தண்டனை விதித்துள்ளதை அறிந்ததும், அந்த தீர்ப்பைக் கண்டித்து முன்னறிவிப்பின்றி, திருச்சியிலிருந்து சென்னை செல்லும் சோழன் விரைவு ரயிலை மறித்து தண்டவாளத்தில் அமர்ந்து கண்டன முழக்கமிட்டனர்.

இதனையறிந்த ரயில்வே போலீஸார், அவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தியதின் பேரில், ரயில் மறியல் போராட்டம் கைவிடப்பட்டது. பின்னர், அதே ரயிலில் காங்கிரஸ் கட்சி மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரி, சென்னைக்கு சென்றார். இதனால் அங்கு சுமார் அரை மணி நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

பின்னர், காங்கிரஸ் கட்சி மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரி கூறியது: "ராகுல் காந்தியை இந்தியாவை விட்டு அப்புறப்படுத்தி, அவரை நசுக்கி அவரது வளர்ச்சியை பா.ஜ.க தடுக்க பார்க்கிறது. பாஜவினர் ஜனநாயகத்தை பாராளுமன்றத்தில் செயல்பட விடாமல் முடக்கி வருகிறார்கள். இவற்றைக் குறித்து கருத்து கூறினால் தேச விரோத செயலில் ஈடுபடுவதாக பா.ஜ.கவும், ஆர்.எஸ்.எஸ் அமைப்பினரும் குற்றச்சாட்டு எழுப்புகின்றனர்.

பா.ஜ.கவிற்கு எதிராக கருத்து கூறினால், அது தேச விரோதமாகுமா?, அதானிக்கு எதிரான குற்றச்சாட்டுகளை எடுத்துக் கூறினால் அதையும் தேச விரோதம் என அவர்கள் கூறி வருகிறார்கள். ஜெர்மனியில் ஹிட்லர் எவ்வாறு அடக்கு முறையை கையாண்டாரோ, அதே போல் இந்தியாவில் பா.ஜ.க. தனது அடக்குமுறையை செயல்படுத்தி வருகிறது. ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும் அவற்றை ராகுல் காந்தி தகர்த்து எறிவார் என்பதில் எங்களுக்கு எந்த ஐயமுமில்லை. இந்த தீர்ப்பதைக் கண்டித்து தமிழகம் முழுவதும் போராட்டம் நடைபெற்றது" எனத் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து