முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கலைஞர் நூற்றாண்டு இலச்சினை வெளியிட்டார் முதல்வர் ஸ்டாலின்

வெள்ளிக்கிழமை, 2 ஜூன் 2023      தமிழகம்
CM-1 2023-06-02

Source: provided

சென்னை : முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவினையொட்டி கலைஞர் நூற்றாண்டு இலச்சினையை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.

சென்னை, கலைவாணர் அரங்கத்தில் நேற்று முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவினையொட்டி செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட மேற்கு வங்க மாநில முன்னாள் ஆளுநர்  கோபாலகிருஷ்ண காந்தி முன்னிலையில், முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு இலச்சினையை முதல்வர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டார். 

மேலும், முன்னாள் முதல்வர் கருணாநிதி, தமிழ்நாட்டு மக்களின் நலனிற்காக ஆற்றிய பணிகள், நிறைவேற்றிய திட்டங்கள் குறித்த குறும்படத்தையும் முதல்வர் வெளியிட்டார். 

ஐந்து முறை தமிழகத்தின் முதல்வராக இருந்தவரும், 13 முறை சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு, 13 முறையும் வெற்றி பெற்றவரும், தமிழ்நாடு சட்டமன்ற மேலவை உறுப்பினராகவும், தமிழ்நாட்டின் அரசியல் தலைவராக மட்டுமல்லாமல், இந்திய அரசியலின் திசையைத் தீர்மானிப்பவராகவும் திகழ்ந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பன்முக ஆற்றலையும், அவர் படைத்தளித்த மக்கள் நலத் திட்டங்களையும் தமிழ்நாட்டின் வருங்காலத் தலைமுறையினர் என்றென்றும் நினைவில் போற்றும் வகையில் கலைஞரின் நூற்றாண்டு விழா மாநிலம் முழுவதும் தமிழ்நாடு அரசால் கொண்டாட முடிவு செய்யப்பட்டது.  

இந்த நூற்றாண்டு விழாவை தமிழக அரசின் சார்பில் சிறப்பாக கொண்டாடுவது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் 22.5.2023 அன்று தலைமைச் செயலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. 

இக்கூட்டத்தில், முதல்வர் மு.க. ஸ்டாலின், நவீனத் தமிழ்நாட்டை உருவாக்கிய சிற்பி  முன்னாள் முதல்வர் கருணாநிதியை பெருமைப்படுத்தும் விழாக்களாக மட்டுமல்லாமல், அவர் தமிழ்நாட்டு மக்களின் நலனிற்காக அறிவித்து, நிறைவேற்றிய திட்டங்களை இளைய சமுதாயத்தினர் அறிந்து கொள்ளும் வகையில் இந்த விழாக்கள் அமைய வேண்டும் என்றும், மாதந்தோறும் ஒவ்வொரு பொருளின் அடிப்படையில் இந்த விழாக்களை நடத்திட வேண்டும் என்றும், பெரிய அளவிலான விழாக்களாக மட்டுமல்லாமல், அனைத்துத் தரப்பினரும் பங்கெடுக்கும் விழாக்களாக இவற்றை நடத்த வேண்டும் என்றும் தெரிவித்தார். 

மேலும், அரசு நடத்துவதாக மட்டுமல்லாமல் பல்கலைக் கழகங்கள், கல்லூரிகள், மாணவர்கள், பெண்கள், அரசு ஊழியர்கள், பயனடைந்த மக்கள் ஆகியோர் இணைந்து கொண்டாடுவதாக  அமைய வேண்டும் என்று தெரிவித்தார்.

அதன் தொடர்ச்சியாக, நேற்று சென்னை, கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், முதல்வர் மு.க. ஸ்டாலின், கலைஞர் நூற்றாண்டு இலச்சினையை வெளியிட்டார். 

அதனைத் தொடர்ந்து,  முன்னாள் முதல்வர் கருணாநிதி, தமிழ்நாட்டு மக்களின் நலனிற்காக ஆற்றிய பணிகள், நிறைவேற்றிய திட்டங்கள் குறித்த குறும்படத்தை முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டார்.

முன்னதாக, செய்தி மக்கள் தொடர்புத் துறை சார்பில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவையொட்டி  அமைக்கப்பட்ட புகைப்படக் கண்காட்சியை திறந்து வைத்து முதல்வர் பார்வையிட்டார். 

இப்புகைப்படக் கண்காட்சியில் முன்னாள் முதல்வர் கருணாநிதி ஆட்சிக் காலத்தில் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள், சாதனைகள், அவற்றால் மக்கள் பெற்ற பயன்கள், இளமை காலம் முதல் அவர் மேற்கொண்ட அரசியல் பயணம், பல்வேறு அரசியல் மற்றும் முக்கிய தலைவர்களுடனான சந்திப்புகள் போன்றவை குறித்து காட்சிப்படுத்தப்பட்டு இருந்தன. இப்புகைப்படக் கண்காட்சி இம்மாதம் முழுவதும் மக்கள் பார்வையிட்டு பயன்பெறும் வகையில் நடைபெறும்.

இந்நிகழ்ச்சியில், அமைச்சர்கள் துரைமுருகன், உதயநிதி ஸ்டாலின், மு.பெ.சாமிநாதன், மா. சுப்பிரமணியன், பி.கே. சேகர்பாபு உள்ளிட்ட அமைச்சர் பெருமக்கள், பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் ஆர். பிரியா, நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், தலைமைச் செயலாளர் இறையன்பு, தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை செயலாளர் செல்வராஜ்,  துறைச் செயலாளர்கள், செய்தி மக்கள் தொடர்புத்துறை இயக்குநர் மோகன், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து