முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முதல்வர் ஸ்டாலினின் வெளிநாட்டு பயணம் குறித்து எடப்பாடி விமர்சனம்

வெள்ளிக்கிழமை, 2 ஜூன் 2023      தமிழகம்
Edappadi 2020 11-16

Source: provided

சென்னை : முதல்வர் மு.க.ஸ்டாலினின் வெளிநாட்டு பயணம் குறித்து அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார். 

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- 

முதல்வர் மு.க.ஸ்டாலின் சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் நாடுகளுக்கு சுற்றுலா சென்று வந்த நிலையில், இந்த சுற்றுலாவின் மூலம் ரூ. 3,233 கோடி முதலீட்டினை ஈர்த்ததாக சென்னை விமான நிலையத்தில் பேட்டி அளித்தார். 

பத்திரிகைகளில் 9 நாள் பயணத்தில், முதலில் ரூ.1,258 கோடி முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளன என்றும் பின்னர் ரூ.3,233 கோடி முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளன என்றும் செய்திகள் வந்துள்ளது.  இதில் எது உண்மை? எதை நம்புவது? 

மேலும் முதல்வர் புரிந்துணர்வு மேற்கொண்ட கொமாட்சு நிறுவனம் 2005-லேயே அம்மாவால் தமிழகத்திற்கு கொண்டு வரப்பட்டது. ஓம்ரான் நிறுவனம் ஏற்கனவே உத்தரப்பிரதேசத்தில் இயங்கி வருகிறது. அவர்களின் இந்திய சி.இ.ஓ.-க்களை அழைத்து, அவர்களிடமே இந்த முதலீடுகளை சுலபமாகப் பெற்றிருக்கலாம். அதைச் செய்யாமல் முதல்வர் சிங்கப்பூர்-ஜப்பான் வரை சென்றதைத்தான் தோல்வி என்கிறோம். 

கார் தயாரிப்பிற்கு தேவைப்படும் முக்கிய மூலப்பொருளான செமி கண்டக்டர் உற்பத்தி செய்யும் தொழிற்சாலை ஒன்றை இந்திய-வெளிநாட்டு (பாக்ஸ்கான்) கூட்டு நிறுவனம் சுமார் 1.54 லட்சம் கோடி முதலீட்டில் தமிழகத்தில் துவக்க இருந்த நிலையில் குஜராத்திற்கு சென்று விட்டது. 

அதேபோல், பாக்ஸ்கான் நிறுவனம் சுமார் 4 ஆயிரம் கோடி முதலீட்டில் 20 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கும் வகையில் தொடங்கப்பட இருந்த ஆப்பிள் ஐ போன் தொழிற்சாலை தி.மு.க. ஆட்சியின் பாராமுகத்தினால் கர்நாடகாவிற்கு சென்று விட்டது. 

அ.தி.மு.க. ஆட்சியில் ஏற்கெனவே போடப்பட்ட முதலீட்டு ஒப்பந்தங்களையும், இங்கே ஏற்கெனவே தொழில் செய்து வரும் நிறுவனங்களையும், மற்ற மாநிலங்களுக்கு செல்லவிடாமல் அவர்களது கோரிக்கைகளை நிறைவேற்றி, தொடர்ந்து அவர்கள் தமிழகத்திலேயே தொழில் தொடங்க வைக்குமாறு, முதல்வரையும், புதிதாகப் பொறுப்பேற்றிருக்கும் தொழில் துறை அமைச்சரையும் வலியுறுத்துகிறேன். இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து