முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வங்கதேசம் 310 ரன்கள் சேர்ப்பு

செவ்வாய்க்கிழமை, 28 நவம்பர் 2023      விளையாட்டு
Bangladesh-New-Zealand 2023

Source: provided

நியூசிலாந்து கிரிக்கெட் அணி வங்காளதேசத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி நேற்று ஆரம்பமானது. இதில் டாஸ் வென்ற வங்காளதேச அணியின் கேப்டன் நஜ்முல் ஹொசைன் சாண்டோ பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி வங்காளதேச அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக மஹ்முதுல் ஹசன் ஜாய் மற்றும் ஜாகிர் ஹசன் களமிறங்கினர். இதில் ஜாகிர் ஹசன் 12 ரன்கள் அடித்த நிலையில் அஜாஸ் படேல் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

அதபின் களமிறங்கிய கேப்டன் நஜ்முல் ஹொசைன் சிறிது நேரம் தாக்குப்பிடித்த நிலையில் 37 ரன்களில் ஆட்டமிழந்தார். ஒருபுறம் விக்கெட் சரிந்தாலும் மறுமுனையில் மஹ்முதுல் ஹசன் ஜாய் நிலைத்து விளையாடினார். அவருக்கு மொமினுல் ஹக் சிறிது நேரம் ஒத்துழைப்பு கொடுத்தார். மொமினுல் ஹக் 37 ரன்கள் அடித்து அவுட் ஆனார். அதன்பின் களமிறங்கிய வீரர்களில் யாரும் நிலைக்கவில்லை. வங்காளதேச அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 85 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 310 ரன்கள் எடுத்துள்ளது. தைஜுல் இஸ்லாம் 8 ரன்களிலும், ஷோரிபுல் இஸ்லாம் 13 ரன்களிலும் களத்தில் உள்ளனர். நியூசிலாந்து தரப்பில் அதிகபட்சமாக கிளென் பிலிப்ஸ் 4 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார்.

______________

பாண்டியா கூறியது என்ன ?

குஜராத் அணியின் கேப்டனாக செயல்பட்ட ஹர்திக் பாண்டியாவை மும்பை இந்தியன்ஸ் அணி வாங்கியது.  இந்நிலையில் மும்பை அணிக்கு திரும்பியது தொடர்பாக ஹர்திக் பாண்டியா கூறியதாவது,மும்பை அணிக்கு மீண்டும் வந்த உணர்வு மிகவும் சிறப்பானது. அவர்கள் என்னை 2013-ம் ஆண்டு முதல் கவனித்து வருகிறார்கள். 

இறுதியாக எனது முழு கிரிக்கெட் பயணமும் தொடங்கிய இடத்துக்கு திரும்பி வந்துள்ளேன். அவை என் வாழ்வின் முக்கியமான பகுதியாக இருந்தன.நான் என் வீட்டுக்கு திரும்பியது போல் உணர்கிறேன். நாம் ஒரு அணியாக வரலாற்றை உருவாக்கினோம். மீண்டும் ஒருமுறை மும்பை அணி வீரர்களுடன் சில அற்புதமான தருணங்களை உருவாக்க எதிர்பார்த்து இருக்கிறேன். மும்பை அணியில் மீண்டும் விளையாட ஆவலுடன் உள்ளேன்.இவ்வாறு அவர் கூறினார்.

______________

ஹாக்கி; பஞ்சாப் அணி சாம்பியன்

தமிழ்நாடு ஹாக்கி அமைப்பு சார்பில் 13-வது தேசிய சீனியர் ஹாக்கி சாம்பியன்ஷிப் போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடைபெற்றது. இந்த தொடரில் மொத்தம் 28 அணிகள் பங்கேற்றிருந்தன. முடிவில் அரியானா மற்றும் பஞ்சாப் அணிகள் இறுதி போட்டிக்கு முன்னேறின. இவ்விரு அணிகளுக்கு இடையிலான இறுதி போட்டி நேற்று நடைபெற்றது. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டம் வழக்கமான நேரத்தில் 2-2 என்ற கோல் கணக்கில் சமனில் முடிந்தது. 

இதைத்தொடர்ந்து முடிவை அறிய கடைபிடிக்கப்பட்ட பெனால்டி ஷூட் அவுட்டில் பஞ்சாப் வெற்றி பெற்று தங்கப்பதக்கத்தை கைப்பற்றியது. 2-வது இடம் பிடித்த அரியானா அணி வெள்ளிப்பதக்கம் பெற்றது. இறுதி போட்டிக்கு முன்னதாக நடைபெற்ற 3-வது இடத்திற்கான ஆட்டத்தில் தமிழ்நாடு பெனால்டி ஷூட் அவுட்டில் கர்நாடக அணியை வீழ்த்தி வெண்கல பதக்கம் வென்றது. 

______________ 

உலகக்கோப்பை தொடரில் நமீபியா

டி20 உலகக்கோப்பை தொடர் கடந்த 2007ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. இதுவரை மொத்தம் 8 டி20 உலகக்கோப்பை தொடர்கள் நடைபெற்றுள்ளன. அந்த தொடர்களில் இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் தலா 2 முறையும், இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, ஆஸ்திரேலியா அணிகள் தலா 1 முறையும் சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளன. இந்நிலையில் 9வது டி20 உலகக்கோப்பை தொடர் அடுத்த ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெற உள்ளது. இந்த உலகக்கோப்பை தொடரில் மொத்தம் 20 அணிகள் கலந்து கொள்ள உள்ளன.

அதில் போட்டியை நடத்தும் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் நேரடியாகவும், 2022 டி20 உலகக்கோப்பையில் முதல் எட்டு இடங்களை பிடித்த ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, இந்தியா, நெதர்லாந்து, நியூசிலாந்து, பாகிஸ்தான், தென் ஆப்பிரிக்கா மற்றும் இலங்கை அணிகளும், ஆப்கானிஸ்தான் மற்றும் வங்கதேசம் அணிகள் டி20 தரவரிசை அடிப்படையிலும் உலகக்கோப்பை தொடருக்கு தகுதி பெற்றுள்ளன. மீதமுள்ள 8 அணிகள் தகுதி சுற்று அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுகின்றன. அதனடிப்படையில் ஆப்பிரிக்கா பிராந்திய தகுதி சுற்று போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் 5 ஆட்டங்களில் விளையாடி அனைத்திலும் வெற்றி பெற்ற நமீபியா அணி அடுத்த ஆண்டு நடைபெற உள்ள டி20 உலகக்கோப்பை தொடருக்கு தகுதி பெற்றுள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து