முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

'மிக்ஜம்' புயலால் சூறைக்காற்றுடன் வெளுத்து வாங்கிய கனமழை: வெள்ளத்தில் மிதக்கும் தலைநகர் சென்னை : குடியிருப்புகளை சூழ்ந்த நீரால் தவிக்கும் மக்கள்

திங்கட்கிழமை, 4 டிசம்பர் 2023      தமிழகம்
MDS-1 2023-12-04

Source: provided

சென்னை : 'மிக்ஜம்' புயல் காரணமாக சூறைக்காற்றுடன் வெளுத்து வாங்கிய கனமழையால் தலைநகர் சென்னை வெள்ளநீரில் மிதக்கிறது. குடியிருப்புகளை சூழ்ந்த நீரால் மக்கள் கடும் அவதி உள்ளாகியுள்ளனர். மக்கள் வெளியே வரமுடியாமல் அவர்களின் இயல்வாழ்கை முற்றிலும் முடங்கியுள்ளது.

வங்க கடல் பகுதியில் கடந்த 27-ம் தேதி காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவானது. இது தீவிர காற்றழுத்த தாழ்வுப் பகுதியாகவும், தாழ்வு மண்டலமாகவும் வலுப்பெற்று கடந்த 3 நாட்களுக்கு முன் தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக நிலைகொண்டு இருந்தது. தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று முன்தினம் புயலாக வலுவடைந்தது.

மிக்ஜம் என பெயரிடப்பட்டுள்ள இந்த புயல் நேற்று காலை சென்னையில் இருந்து 130 கிலோமீட்டர் கிழக்கு தென்கிழக்கு திசையில் வங்கக்கடலில் மையம் கொண்டிருந்தது. பின்னர், மிக்ஜம் புயல் மெல்ல நகர்ந்து சென்னையில் இருந்து 110 கிலோ மீட்டர் தொலைவில் நிலைகொண்டிருந்தது. இந்நிலையில், மிக்ஜம் புயல் மெல்ல நகர்ந்து சென்னையில் இருந்து 90 கிலோமீட்டர் தொலைவில் வங்கக்கடலில் நிலைகொண்டுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. இதனை அடுத்து மேலும், மிக்ஜம் தீவிர புயலாக வலுப்பெற்றுள்ளது.

பிறகு சென்னைக்கு தென்கிழக்கே 90 கிலோமீட்டர் தொலைவில் வங்கக்கடலில் மிக்ஜம் தீவிர புயலாக நிலைகொண்டிருந்தது. தெற்கு ஆந்திரா மற்றும் அதனை ஒட்டியுள்ள வடதமிழக கடலோர பகுதியில் மத்தியமேற்கு மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடலில் 8 கிலோமீட்டர் வேகத்தில் வடமேற்கு திசையில் மிக்ஜம் புயல் நகர்ந்தது. 

மிக்ஜம் தீவிர புயலாக வலுப்பெற்ற நிலையில் சென்னையில் நேற்று முன்தினம் மாலை முதல் கனமழை பெய்தது. கனமழை நேற்று மாலை வரை நீடித்தது. சூறைக்காற்றுடன் கனமழை வெளுத்து வாங்கியது. இதனால், நகரின் பல்வேறு பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளது. சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். தொடர் கனமழை மற்றும் பலத்த காற்றால் மக்கள் வீட்டிலேயே முடங்கியுள்ளனர்.

சென்னையில் கிண்டி, வேளச்சேரி, வேளச்சேரி, துரைப்பாக்கம், பல்லாவரம், சோழிங்கநல்லூர், நாவலூர், பரங்கிமலை, எழும்பூர், மாம்பலம், மடிப்பாக்கம், பெரம்பூர், அண்ணாநகர், ஆலந்தூர், ஈக்காட்டுத்தாங்கல், அசோக் நகர், அரும்பாக்கம், தாம்பரம், நுங்கம்பாக்கம் உள்பட நகரின் பல பகுதிகளில் கனமழை கொட்டித்தீர்த்தது. தொடர் கனமழையால் குடியிருப்பு பகுதிகளில் இடுப்பளவுக்கு வெள்ளம் சூழ்ந்துள்ளது. 

இடைவிடாது பெய்யும் கனமழையால் சென்னை பள்ளிக்கரணை பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் மழைநீர் புகுந்ததால், அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார்கள் மழை வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன. ஒன்றன் பின் ஒன்றாக வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்டு ஒரு குவியலாக ஒரு இடத்தில் தங்கி நின்றன. அதைபோல சென்னை குன்றத்தூரில் அருகில் உள்ள வட்டக்குப்பட்டில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் நிறுத்தப்பட்ட கார்கள் வரிசையாக வெள்ளநீரில் அடித்து செல்லப்பட்டன. இது தொடர்பான இரண்டு வீடியோக்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

மழை நீரில் செல்ல முடியாமல் வாகனங்கள் ஆங்காங்கே பழுதாகி நிற்கின்றன. சாலைகளில் தேங்கிய மழைநீரால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதால் வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர். இந்த நிலையில், சென்னையில் அதிகனமழை பெய்துவருவதால், மாநகர போக்குவரத்து கழகம் சார்பில் இயக்கப்படும் பேருந்துகளின் எண்ணிக்கை குறைக்கப்பட்டது. வழக்கமாக நாள் ஒன்றுக்கு 2600 பேருந்துகள் இயக்கப்படும் நிலையில் நேற்று 320 பேருந்துகள் மட்டுமே இயக்கப்பட்டது.

கனமழை காரணமாக வேளச்சேரி ஏரி நிரம்பியதால் பல்லாவரத்தில் இருந்து துரைப்பாக்கம் செல்லும் சாலையில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. ஏரி நீரும், மழைநீரும் சேர்ந்து சாலையில் 4 அடிவரை தண்ணீர் தேங்கியுள்ளதால் வாகனங்கள் திருப்பி விடப்பட்டன. சாலையில் இடுப்பளவிற்கு தண்ணீர் தேங்கியுள்ளதால் துரைப்பாக்கம் - பல்லாவரம் இடையேயான போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தொடர்ந்து பெய்த கனமழையால், வேளச்சேரி, மேற்கு தாம்பரம் செல்லக்கூடிய சாலைகள் அனைத்தும் துண்டிக்கப்பட்டன.

வேளச்சேரியில் இருந்து பள்ளிக்கரணை, மேற்கு தாம்பரம் போன்ற பகுதிகளுக்கு மக்கள் செல்ல முடியாத சூழல் ஏற்பட்டது. இந்த நிலையில், பல இடங்களில் பெய்துவரும் மழைநீர், அடையாற்றில் கலப்பதால் அடையாற்றில் வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது. கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டு உள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 2 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 5 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 5 days ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 6 months 5 days ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 7 months 1 day ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 2 days ago
View all comments

வாசகர் கருத்து