முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

புயல் மழை பாதிப்புக்காக மத்திய அரசிடம் ரூ.5,000 கோடி கேட்கப்படும் : முதல்வர் முக ஸ்டாலின் பேட்டி

செவ்வாய்க்கிழமை, 5 டிசம்பர் 2023      தமிழகம்
CM-2 2023-12-05

Source: provided

சென்னை : மிக்ஜாம் புயல் பாதிப்பிற்காக மத்திய அரசிடம் 5 ஆயிரம் கோடி ரூபாய் உடனே ஒதுக்க வேண்டும் என்று கடிதம் எழுதவுள்ளதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். 

சென்னையில் வெள்ளம் பாதித்த வடசென்னை பகுதிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று காலை பார்வையிட்டார். மழை நீர் தேங்கிய இடங்களுக்கு ஜீப்பில் சென்று பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்தார். அப்போது நேரு ஸ்டேடியம் வால்டாக்ஸ் சாலை அருகில் உள்ள கண்ணப்பர் திடல் பகுதியில் அமைக்கப்பட்ட நிவாரண முகாமுக்கு சென்று அங்குள்ள மக்களுக்கு உணவு வழங்கினார்.

பெரியமேடு ரிப்பன் மாளிகை பகுதிக்கும் சென்று பொதுமக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கினார். அதன் பிறகு முதல்வர் மு.க.ஸ்டாலின் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

புயல் காரணமாக சென்னையில் வரலாறு காணாத அளவுக்கு மழை பொழிந்துள்ளது. மீனம்பாக்கத்தில் 43 செ.மீட்டரும், பெருங்குடியில் 44 செ.மீட்டர் மழையும் பதிவாகி உள்ளது. இதன் காரணமாக பல இடங்களில் தண்ணீர் தேங்கியது. நாங்கள் ஏற்கனவே எடுத்த நடவடிக்கை காரணமாக பாதிப்புகள் பெருமளவு குறைந்துள்ளது.

2015-ம் ஆண்டு கடந்த ஆட்சி காலத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கை யாரும் மறந்திருக்க மாட்டீர்கள். அன்றைக்கு நுங்கம்பாக்கத்தில் 29.4 செ.மீ. மழை பதிவாகி இருந்தது. மீனம்பாக்கத்தில் 34.5 செ.மீ. மழை பதிவானது. இப்போது பெருங்குடியில் 46 செ.மீ. மழையும், மீனம்பாக்கம் பகுதியில் 43 செ.மீ. மழையும், 36 மணி நேரத்தில் பதிவாகி உள்ளது. இது மிக மிக அதிகம்.

இந்த புயல் விரைந்து கடந்த செல்லாமல் நின்று மெதுவாக நகர்ந்து கடந்ததால் சென்னையில் அதிக மழை பெய்தது. அதனால்தான் சென்னையில் வரலாறு காணாத அளவுக்கு மழை வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இத்தகைய மிகப்பெரிய வெள்ளப்பெருக்கு ஏற்பட்டாலும், இந்த அரசு எடுத்த முன்எச்சரிக்கை நடவடிக்கை காரணமாக உயிரிழப்பு மற்றும் பொருட்சேதம் பெருமளவு குறைக்கப்பட்டுள்ளது.

2015-ம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் 199 பேர் இறந்தனர். நேற்று அதை விட அதிக மழை பெய்திருந்தாலும் கூட 7 பேர் மட்டுமே இறந்துள்ளனர். இதுவும் ஏற்பட்டிருக்கக் கூடாது. அதற்காக வருத்தப்படுகிறேன். தற்போது 9 மாவட்டங்களில் உள்ள 61666 நிவாரண முகாம்களில் மக்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். 

11 லட்சம் உணவு பொட்டலங்கள் இதுவரை வழங்கி உள்ளோம். அவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளும் செய்யப்பட்டு வருகிறது. காலையில் பால் பாக்கெட் வினியோகம் செய்யப்பட்டு உள்ளது. மழை நீர் வடிகால் நன்றாக செயல்பட்டாலும் இறுதியில் அந்த தண்ணீர் கடலில் கலக்க அடையார் மற்றும் கூவம் முகத்துவாரங்களில் புயலின் காரணமாக அவை அதிகம் காணப்பட்டதால், இந்த நதிகளில் வெள்ளம் மெதுவாக வடிந்தது.

ஆனாலும் அரசு எடுத்து வந்த பணிகளின் காரணமாக வெள்ள பாதிப்பு குறைக்கப்பட்டுள்ளது. 2015-ம் ஆண்டு செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து திட்டமிடாமல் அடையாறில் ஒரு லட்சம் கன அடி அளவுக்கு வெள்ள நீர் திடீரென திறந்து விடப்பட்டது. வெள்ளம் ஏற்பட்டதற்கு அது முக்கிய காரணமாக இருந்தது. அது செயற்கை வெள்ளம். இப்போது இது இயற்கையாக ஏற்பட்டது. அதை புரிந்து கொள்ள வேண்டும்.

அரசு எடுத்த முன் எச்சரிக்கை நடவடிக்கை காரணமாக கடந்த 4 நாட்களில் செம்பரம்பாக்கத்தில் இருந்த நீரை முன் கூட்டியே திட்டமிட்டு திறந்த காரணத்தால் தான் இத்தகைய பெருமழையை சமாளித்து உள்ளோம். இத்தகைய பெருமழை பெய்த நிலையிலும் 8 ஆயிரம் கன அடி தண்ணீர் மட்டுமே திறக்கப்பட்டு உள்ளது. இதனால் சென்னையில் பெய்த பெருமழையால் ஏற்பட்ட வெள்ளம், அடையார் ஆற்றில் தடையின்றி சென்று கடலில் கலக்க முடிந்தது. 

ஆனாலும் சென்னை மற்றும் புறநகரில் ஏற்பட்ட மழை பாதிப்பை அவ்வப்போது நான் கேட்டறிந்தேன். பெரும் இயற்கை சீற்றத்தால் மக்கள் பெரும் இன்னலுக்கு ஆளானாலும், ஒரு ஆட்சியின் உண்மையான  கடமை என்பது இந்த இன்னல்களின் தாக்கத்தை குறைப்பதோடு அதில் இருந்து மக்கள் வெளிவர தேவையான முயற்சி மேற்கொள்வதே ஆகும்.

இந்த மழையிலும் அனைத்து தூய்மை பணியாளர்களும் பணியாற்றி வருகிறார்கள். அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், ஐ.ஏ.எஸ். அதிகாரிகளும் களத்தில் இயல்பு நிலை திரும்ப பணியாற்றி வருகின்றனர். அதனால் சென்னையில் இயல்பு நிலை திரும்ப தொடங்கி உள்ளது. 

ரூ.4 ஆயிரம் கோடிக்கு பணிகள் செய்தும் சென்னை மிதக்கிறது என்று எதிர்க் கட்சித் தலைவர் குற்றச்சாட்டை கூறி வருகிறார். நான் சொல்கிற ஒரே பதில் என்னவென்றால் இதை அரசியலாக்க விரும்பவில்லை. அவர்கள் தொடர்ந்து சொல்லிக் கொண்டிருப்பதால் நான் சொல்ல விரும்புவது, ரூ.4 ஆயிரம் கோடி அளவுக்கு பணிகள் நடந்திருந்த காரணத்தால் தான், இவ்வளவு பெரிய வரலாறு காணாத 47 வருடமாக பார்க்காத மழையை நாம் இப்போது பார்த்திருக்கிறோம். 

அதில் இருந்து சென்னை தப்பியது என்றால் திட்டமிட்டு செலவு செய்து அந்த பணிகளை நிறைவேற்றிய  காரணத்தால்தான் சென்னை தப்பி உள்ளது. அதையும் புரிந்து கொள்ளுங்கள். அவர்கள் காலத்தில் எதுவும் செய்யவில்லை. ஆனால் தி.மு.க. ஆட்சியில் 2 ஆண்டு காலத்தில் இந்த பணிகளை செய்துள்ளோம். 

வரலாறு காரணாத மழை வெள்ளத்தால் வெள்ள சேதம் ஏற்பட்டுள்ளது. குடியிருப்புகள் பாதிக்கப்பட்டு உள்ளது. ரோடுகள் பாதிக்கப்பட்டுள்ளது.அதனால் மத்திய அரசிடம் 5 ஆயிரம் கோடி ரூபாய், உடனே ஒதுக்க வேண்டும் என்று கடிதம் எழுத போகிறோம். 

மக்கள் எங்களுக்கு முழு ஒத்துழைப்பு தந்துள்ளனர். முன்கூட்டியே சொல்லி எச்சரிக்கை கொடுத்ததற்கு மக்கள் நன்றாக ஒத்துழைத்தனர்.இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார். அப்போது அமைச்சர்கள் கே.என்.நேரு, பி.கே.சேகர்பாபு, மேயர் பிரியா ஆகியோர் உடனிருந்தனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து