முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மக்கள் பதற்றம் அடைய தேவையில்லை புழல் ஏரி பாதுகாப்பாக உள்ளதாக அரசு விளக்கம்

வியாழக்கிழமை, 7 டிசம்பர் 2023      தமிழகம்
TN 2023-04-06

சென்னை, புழல் ஏரி பாதுகாப்பாக உள்ளது; மக்கள் பதற்றம் அடைய தேவையில்லை என்று தமிழ்நாடு அரசு விளக்கமளித்துள்ளது.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது., புழல் ஏரியானது சென்னை மாநகர குடிநீர் தேவைக்காக பயன்படுத்தப்பட்டு வரும் மிக முக்கியமான ஏரியாகும். இந்த ஏரியானது திருவள்ளூர் மாவட்டம், மாதவரம் ஒன்றியத்தில் அமைந்துள்ளது. இந்த ஏரியின் நீர் பரப்பு பகுதி 20.27 ச.கி.மீட்டர் ஆகும். இந்த ஏரியின் முழு உயரம் 2,120 அடியாகும். இந்த ஏரியின் முழு கொள்ளளவு 3,300 மி.க. அடியாகும். ஏரியின் கரையின் நீளம் 7,090 மீட்டர் ஆகும்.

நேற்றைய நிலவரப்படி 20.00 அடி நீர் இருப்பு உள்ளது. ஏரியின் கொள்ளளவு 3,012 மி.க. அடியாக உள்ளது. மேலும் நேற்று நிலவரப்படி, புழல் ஏரியின் நீர்வரத்தானது 550 கனஅடியாக உள்ளது. தற்போது ஏரியிலிருந்து வினாடிக்கு 100 கனஅடி வீதம் உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. கடந்த சில நாட்களாக மிக்ஜம் புயலினால் அதிக அளவு கன மழை பெய்ததினால் ஏரிக்கு நீர்வரத்து கூடுதலாக வந்து கொண்டிருந்ததால் ஏரியின் நீர் மட்டம் வேகமாக உயர்ந்து வந்த நிலையில் ஏரியில் இருந்து ரெகுலேட்டர் வழியாக உபரி நீர் வினாடிக்கு 5500 கன அடி வெளியேற்றப்பட்டு வந்தது.

அப்போது ஏற்பட்ட கடுமையான சூறாவளி காற்றினால் ஏரியில் மிக கடுமையான அளவில் அலைகள் ஏற்பட்டு கலங்களின் மேல் தண்ணீர் வெளியேறியது, இதனால் காவல்துறை பாதுகாப்பு அறை பின் பகுதியில் கரையில் உள்ள பக்கவாட்டு தாங்கு சுவரின் பக்கத்தில் அடுக்கி வைத்திருந்த கருங்கல்லால் ஆன சுற்றுசுவர் சரிந்து மண் அரிப்பு ஏற்பட்டது.

இது ஏரியின் 2 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது, இதன் வழியாக தண்ணீர் வெளியேறவில்லை, மேலும் கலங்கல் வழியாக அலைகளால் தண்ணீர் வெளியேறியதால் சாலையில் அரிப்பு ஏற்பட்டது. தற்போது மண் அரிப்பு ஏற்பட்ட சாலை பகுதிகளில் மண் கொட்டி மட்டப்படுத்தப்படும் பணி நடைபெற்று வருகிறது. புழல் ஏரி பாதுகாப்பாக உள்ளது. எனவே மக்கள் எந்த விதத்திலும் பதற்றம் அடைய தேவையில்லை. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

முன்னதாக சென்னையின் பிரதானமான புழல் ஏரி நிரம்பி அதன் கரை உடையும் அபாயம் உள்ளதாக தகவல்கள் வெளியான நிலையில், நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், பத்திரப்பதிவு துறை அமைச்சர் மூர்த்தி ஆகியோர் நேரில் சென்று புழல் ஏரியை பார்வையிட்டனர்.மேலும், ஏரியின் உறுதித்தன்மை குறித்து ஆய்வு செய்து அதிகாரிகளிடமும் நிலைமை குறித்து கேட்டறிந்தனர்.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து