முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

4 மாவட்டங்களில் நடைபெறும் நிவாரண பணிகள் குறித்து தமிழ்நாடு அரசு விளக்கம்

சனிக்கிழமை, 9 டிசம்பர் 2023      தமிழகம்
TN 2023-04-06

Source: provided

சென்னை : மிக்ஜம் புயலால் ஏற்பட்ட வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் தற்போது வரை மேற்கொள்ளப்பட்டு வரும் நிவாரணப் பணிகள் குறித்து தமிழ்நாடு அரசு விளக்கம் அளித்துள்ளது. 

இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்ட செய்தி குறிப்பில் தெரிவித்திருப்பது., தமிழகத்தில் டிசம்பர் 3 மற்றும் 4 ஆம் தேதிகளில் வீசிய மிக்ஜம் புயல் காரணமாக சென்னை மாவட்டத்தில் கடுமையான மழைப்பொழிவு ஏற்பட்டது. மேலும், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் குறிப்பிட்ட சில பகுதிகளிலும் வரலாறு காணாத மழைப்பொழிவு ஏற்பட்டு, கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டன. முன்னதாக, மிக்ஜம் புயலின் தாக்கம் குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கைகளின் அடிப்படையில், தமிழ்நாடு அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்திருந்தது. முதல்வர் தலைமையில் இதுகுறித்து கள ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டும், ஆய்வுக் கூட்டங்கள் நடத்தப்பட்டும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டிருந்தன.

மீட்புப் பணிகளை மேற்கொள்வதற்கு முன்னதாகவே திட்டமிடப்பட்டு, தேசிய பேரிடர் மீட்புப் படை, மாநில பேரிடர் மீட்புப் படை மற்றும் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை ஆகிய துறைகளைச் சார்ந்த மீட்புப் படையினர் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தனர். மீட்புப் பணிகளுக்குத் தேவையான டீசல் மோட்டார் பம்புசெட்டுகளும், படகுகளும், ஜே.சி.பி. இயந்திரங்களும், மரம் அறுக்கும் கருவிகளும் சென்னை மாநகராட்சியின் மண்டல அலுவலகங்களில் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தன. இவை புயல் மழையின் தாக்கத்திற்குப் பிறகு உடனடியாக களத்தில் மீட்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டன. மேலும், மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளைத் தீவிரப்படுத்துவதற்காக 20 அமைச்சர் பெருமக்களும், 50-க்கும் மேற்பட்ட இந்திய ஆட்சிப் பணி மற்றும் இந்திய காவல் பணி அலுவலர்களும் நியமிக்கப்பட்டு, நிவாரணப் பணிகள் முடுக்கி விடப்பட்டன.

இதுமட்டுமின்றி, 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மின் வாரியப் பணியாளர்களும், 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மருத்துவப் பணியாளர்களும், ஆயிரக்கணக்கான தூய்மைப் பணியாளர்களும் இந்த மாபெரும் பணியில் இரவு, பகல் பாராமல் ஈடுபட்டனர். மழையினால் பாதிக்கப்பட்ட நான்கு மாவட்டங்களில், மக்களை மீட்க சுமார் 740 படகுகள் பயன்படுத்தப்பட்டன. இதன்மூலம், 26 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வெள்ளப் பகுதிகளிலிருந்து பாதுகாப்பான பகுதிகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டார்கள்.

பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மக்களுக்கு உணவு வழங்கும் பணிக்கென தனி அலுவலர்கள் நியமிக்கப்பட்டு, பெரிய அளவில் சமையல் அறைகள் நிறுவப்பட்டு, தரமான உணவு சமைக்கப்பட்டு, சென்னை மாவட்டத்தில் மட்டும் 8-12-2023 வரை, மூன்று வேளை உணவாக, மொத்தம் 47 லட்சம் உணவுப் பொட்டலங்கள் வழங்கப்பட்டுள்ளன. மொத்தமாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களில் இதுவரை 51 லட்சத்திற்கும் மேற்பட்ட உணவுப் பொட்டலங்கள் வழங்கப்பட்டுள்ளன. மேலும், பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான உணவு, குடிநீர், பால் ஆகிய பொருட்கள் அந்தந்த மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மூலம் பெறப்பட்டு, முறையாக வழங்கப்பட்டு வருகின்றன. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 weeks 1 day ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 weeks 1 day ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 month 4 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 4 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 3 months 4 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 3 months 4 weeks ago
View all comments

வாசகர் கருத்து