முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நிவாரண தொகை வழங்குவதற்கான அரசாணை இன்று வெளியிடப்படும் : தலைமைச்செயலாளர் சிவதாஸ் மீனா தகவல்

ஞாயிற்றுக்கிழமை, 10 டிசம்பர் 2023      தமிழகம்
Shivdas-Meena 2023-12-03

Source: provided

சென்னை : நியாய விலைக் கடைகள் மூலம் நிவாரணத் தொகை வழங்கப்படும் என்றும் அதுதொடர்பான அரசாணை இன்று வெளியிடப்படும் என்றும் தமிழக அரசின் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா தெரிவித்துள்ளார்.

சென்னை பள்ளிக்கரணை உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் வெள்ள நிவாரணப் பணிகளை, தமிழக அரசின் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா நேற்று ஆய்வு மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியதாவது: 

சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் மழை வெள்ளப்பாதிப்பு குறித்து ஆய்வு செய்வதற்காக மத்திய குழு இன்று வருகிறது. செவ்வாய்க்கிழமை மற்றும் புதன்கிழமைகளில் அவர்கள் ஆய்வு செய்கின்றனர். 

தேசிய பேரிடர் மீட்புக் குழுவின் ஆலோசகர் குணால் சத்யார்தி தலைமையில் ஒரு குழு வருகிறது. அந்த குழுவில் 5 பேர் இடம்பெற்றுள்ளனர். வேளாண்மை, நெடுஞ்சாலை, நிதி, ஊரக வளர்ச்சித் துறை மற்றும் மின்சாரம் ஆகிய துறைகளைச் சேர்ந்த 5 பேர் வருகின்றனர். திங்களன்று மாலை வந்து விட்டு, செவ்வாய் மற்றும் புதன்கிழமைகளில் வெள்ளம் பாதித்த பகுதிகளை பார்வையிட உள்ளனர் என்று தெரிவித்தார். 

அப்போது சென்னையின் தற்போதையை நிலை குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு, சென்னை இயல்பு நிலைக்குத் திரும்பி விட்டது. அத்தியாவசியப் பொருட்கள், பால் விநியோகம், குடிநீர், போக்குவரத்து என அனைத்தும் சகஜ நிலைக்குத் திரும்பி விட்டது. குடிநீரைப் பொறுத்தவரை, குழாய்கள் மூலம் வழங்கப்படும் தண்ணீரும், லாரிகள் மூலம் விநியோகிக்கப்படும் தண்ணீரும் வழங்கப்பட்டு வருகிறது. கடைகள் அனைத்தும் திறக்கப்பட்டுள்ளன. அனைத்துப் பகுதிகளிலும் மின் விநியோகம் சீரான நிலையில் உள்ளது.

இப்போது இருக்கும் ஒரே சவால், குப்பைகள். கடந்த 3-ம் தேதி முதல் 5-ம் தேதி வரை, புயலின் காரணமாக கனமழை இருந்தது. இதனால், 6-ம் தேதியில் இருந்துதான், குப்பைகள் அகற்றும் பணி நடந்து வருகிறது. அந்த 3 நாட்களில் வந்த குப்பைகள், வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால், சேதமடைந்த குப்பைகளும் சேர்ந்து விட்டது. 

தனித்தனி குழுக்கள் அமைத்து குப்பைகளை அகற்றும்பணி நடந்து வருகிறது. அதேபோல், தெருக்களில் மழையால் ஏற்பட்ட சேறு சகதிகளை அகற்றுவதும், அந்தப் பகுதிகளில் பிளிச்சிங் பவுடர் தூவும் பணிகளும்தான், தற்போது போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருகிறது. நாளைக்குள்(இன்று) இந்தப் பணிகள் அனைத்தும் நிறைவுறும். 

கடந்த மூன்று நாட்களாக பள்ளி கல்லூரிகளில் உள்ள சேறு சகதிகள், மரங்கள் அகற்றுதல், கழிவறைகளை சுத்தம் செய்தல், குடிநீர் வசதிகளை ஏற்படுத்துதல் உள்ளிட்ட பணிகளை மேற்கொண்டுள்ளோம் என்றார்.

நிவாரணத் தொகை வழங்க டோக்கன் ஏதாவது விநியோகிக்கப்படுமா? என்ற கேள்விக்கு, நிவாரணத் தொகை நியாய விலைக் கடைகள் மூலம் வழங்கப்படும். அதுதொடர்பான அரசாணை இன்று வெளியிடப்படும். அதில் மற்ற விவரங்கள் அனைத்தும் வெளியிடப்படும் என்றார்.

மழைநீர் தேங்காமல் இருக்க நிரந்தரத் தீர்வு காணப்படுமா? என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், 24 மணி நேரத்தில் 15 முதல் 20 செ.மீ பரவலாக மழை பெய்வது இயல்பானது. ஆனால், இந்த புயலின் போது 40 முதல் 45 செ.மீ மழை பெய்துள்ளது. இந்தப் பகுதியில் இரண்டு நாட்களில் 73 செ.மீ மழை பதிவானது. 

இதுபோன்ற மழை, பள்ளிக்கரணை சதுப்புநிலப் பகுதிகளுக்கு அருகில் வீடுகள் உள்ளிட்ட குடியிருப்புப் பகுதிகள் இருக்கும்போது, எல்லா தண்ணீரும் இந்த வழியாகத்தான் செல்லும். இந்தப் பகுதியில் உள்ள தண்ணீர் செல்வதற்கு ஒரே வழி ஒக்கிய மதகு வழியாக சென்று பக்கிங்ஹாம் வழியே சென்று முட்டுக்காடு செல்ல வேண்டும். 

இந்த நிலையில், அனைத்துப் பகுதிகளிலும் தண்ணீர் வந்தது. ஆனால், இது போன்ற அதிகனமழையின் போது என்ன மாதிரியான மழைநீர் வடிகால் கட்டினாலும், தண்ணீர் தேங்கவே செய்யும். ஏற்கெனவே, ஆலோசனைக் குழு இது தொடர்பாக நிறைய பரிந்துரைகளை அளித்துள்ளனர். 

அந்த பரிந்துரைகள் குறித்து ஆலோசித்து, இந்தப் பகுதிக்கு எந்தெந்த மேல் பகுதிகளில் இருந்து தண்ணீர் வருகிறது, என்பதை எல்லாம் பார்த்து ஆலோசனை செய்து நடவடிக்கை எடுக்கப்படும். மழைநீர் வடிகால் பணிகள் சரியாக முடிக்கவில்லை. இதனால்தான் தண்ணீர் தேங்கியது என்று கூறும் குற்றச்சாட்டு சரி இல்லை. 

2010-ல் சென்னை மாநகராட்சி 175 ச.கி.மீட்டர் பரப்பு இருந்தது, இப்போது அது 426 ச.கி.மீட்டர். அந்த பழைய சென்னையில் தி.நகர், சீதாம்மாள் காலனி, வடசென்னையில் புளியந்தோப்பு உள்ளிட்ட பகுதிகளில் மழைநீர் வடிகால்கள் கட்டியிருக்கிறோம். அந்தப் பகுதிகளில் பெரிய அளவில் பாதிப்பு இல்லை. 

உதாரணமாக பாஜூலா சாலை உள்ளிட்ட தி.நகர் பகுதிகளில், மழை நின்றவுடன் உடனடியாக தண்ணீர் வடிந்துவிட்டது. டிடிகே சாலையில் உள்ள சீத்தாம்மாள் காலனியில் ஒவ்வொரு மழையின் போதும் தண்ணீர் தேங்கி நிற்கும். ஆனால், அந்தப் பகுதியில் ஒரு ஒருங்கிணைந்த மழைநீர் வடிகால் அமைத்தப் பிறகு, அந்தப் பகுதியிலும் தண்ணீர் தேங்கவில்லை என்று கூறினார்.

முன்னதாக, தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா, மணலி, எர்ணாவூர், திருவொற்றியூர் உள்ளிட்ட பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டார். குறிப்பாக, எண்ணெய் படலம் படர்ந்துள்ள பகுதிகளில் அவர் ஆய்வு மேற்கொண்டார். அப்பகுதி மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினார். மேலும், அப்பகுதிகளில், நடைபெறும் மருத்துவ முகாமினை பார்வையிட்டு அவர் ஆய்வு செய்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து