முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தலைமை பண்பு குறித்து விளக்கம்

சனிக்கிழமை, 10 பெப்ரவரி 2024      விளையாட்டு
Dhoni 2023 04 29

Source: provided

முன்னாள் இந்திய அணியின் கேப்டன் எம்.எஸ்.டோனி தலைமைப் பண்பு குறித்து பேசியுள்ளார். மும்பையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு எம்.எஸ்.டோனி பேசியதாவது., விசுவாசம் என்பது மரியாதையுடன் அதிகம் தொடர்புடையது. டிரஸ்ஸிங் ரூம் (ஓய்வறை) பற்றி நீங்கள் பேசும்போது, ஊழியர்கள் அல்லது வீரர்கள் உங்களை மதிக்காவிட்டால், அந்த விசுவாசத்தைப் பெறுவது கடினம். இது அடிப்படையில் நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்பதில் இருக்கிறது என்ன பேசுகிறீர்கள் என்பதில் இல்லை. நீங்கள் என்ன வேண்டுமானால் பேசலாம் ஆனால் உங்களது நடத்தையே மரியாதையைப் பெற்றுத்தரும். 

தலைமைப் பண்பில் எனக்கு எப்போதுமே மரியாதையைப் பெறுவது என்பது மிகவும் முக்கியமானது. இது நீங்கள் ஒரு பதவியில் இருப்பதால் அல்லது உயர்ந்த இடத்தில் இருப்பதால் வருவதில்லை. அது உங்களது நடத்தையின் மூலமாக கிடைப்பது. சில நேரங்களில் மனிதர்கள் மிகவும் தாழ்வு மனப்பான்மையில் இருப்பார்கள். சில நேரங்களில் உங்களைத் தவிர ஒட்டுமொத்த அணியும் உங்களையும் நம்பும்.  மொத்தமாக கூறினால் மரியாதையை அதிகாரமாக வாங்கமுடியாது ஆனால் இயல்பாக சம்பாதிக்க முடியும். ஒருமுறை நீங்கள் விசுவாசத்தை பெற்றுவிட்டால் அதற்கான வீரர்களின் பலன்களும் உங்களைப் பின்தொடரும்” எனக் கூறினார். 

___________________________________________________

ரஞ்சி கோப்பை: தமிழகம் 129 ரன்கள்

89-வது ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 32 அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதி வருகின்றன. இந்த தொடரில் தமிழக அணி 'சி' பிரிவில் அங்கம் வகிக்கிறது. இந்நிலையில் தமிழகம் - கர்நாடகா அணிகளுக்கு அணிகளுக்கு இடையிலான லீக் ஆட்டம் சென்னையில் நேற்று முன்தினம் தொடங்கியது. இதில் டாஸ் வென்ற கர்நாடகா அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. இதையடுத்து முதல் நாள் ஆட்ட நேர முடிவில் கர்நாடகா அணி 90 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 288 ரன்கள் எடுத்திருந்தது.

இதையடுத்து 2ம் நாள் ஆட்டம் நேற்று தொடங்கியது. தொடர்ந்து பேட்டிங் செய்த கர்நாடகா அணி 119.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 366 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. இதையடுத்து தனது முதல் இன்னிங்சை தொடங்கிய தமிழக அணி கர்நாடகாவின் அபார பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. இறுதியில் 2ம் நாள் ஆட்ட நேர முடிவில் தமிழக அணி 56 ஓவர்களில் 7 விக்கெட்டை இழந்து 129 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது. தமிழக அணி தரப்பில் இந்திரஜித் 35 ரன், முகமது 3 ரன் எடுத்து களத்தில் உள்ளனர். கர்நாடகா தரப்பில் ஷாஷி குமார் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார். தமிழக அணி இன்னும் 237 ரன்கள் பின் தங்கியுள்ள நிலையில் 3ம் நாள் ஆட்டம் இன்று நடைபெறுகிறது.

___________________________________________________

கணக்கை தொடங்கியது இந்தியா

மகளிருக்கான 5-வது புரோ ஆக்கி லீக் தொடர் பல்வேறு நாடுகளில் நடத்தப்படுகிறது. இதில் இந்தியா, சீனா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் நெதர்லாந்து ஆகிய அணிகள் பங்கேற்றுள்ளன. இந்த தொடரின் சில லீக் ஆட்டங்கள் ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் நடைபெற்று வருகின்றன. இந்த தொடரில் இந்திய அணி விளையாடிய முதல் 3 ஆட்டங்களிலும் சீனா, நெதர்லாந்து மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக தோல்வியை தழுவியிருந்தது.

இந்நிலையில் இந்திய அணி முதல் வெற்றியை பதிவு செய்யும் நோக்கில் நேற்று முன்தினம் அமெரிக்காவுடன் விளையாடியது. இதில் ஆரம்பம் முதலே அசத்திய இந்தியா 3-1 என்ற கோல் கணக்கில் அமெரிக்காவை வீழ்த்தி இந்த தொடரில் வெற்றிக் கணக்கை தொடங்கியுள்ளது. இந்திய அணி தரப்பில் வந்தனா கட்டாரியா, தீபிகா மற்றும் சலீமா டேடே தலா ஒரு கோல் அடித்தனர். அமெரிக்கா தரப்பில் சன்னி கார்ல்ஸ் மட்டுமே ஒரு கோல் அடித்தார். இந்திய அணி தனது அடுத்த ஆட்டத்தில் மீண்டும் சீனாவுடன் வரும் 12-ம் தேதி மோத உள்ளது.

___________________________________________________

ஜெய்ஸ்வால் குறித்து மைக்கேல் வாகன்

விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற 2-வது டெஸ்ட் போட்டியில் பந்துவீச்சில் கலக்கிய பும்ரா 9 விக்கெட்டுகளை சாய்த்த ஜஸ்பிரித் பும்ரா இங்கிலாந்தை தோற்கடிப்பதற்கு முக்கிய பங்காற்றி ஆட்டநாயகன் விருது வென்றார். இந்த போட்டியில் இந்திய அணியின் பந்துவீச்சு துறையில் கலக்கிய பும்ராவை ஈடுகட்டும் அளவிற்கு பேட்டிங் துறையில் இளம் வீரர் ஜெய்ஸ்வால் கலக்கினார். இந்த போட்டியின் முதல் இன்னிங்சில் இரட்டை சதம் அடித்த ஜெய்ஸ்வால், முதலாவது டெஸ்ட் போட்டியிலும் 80 ரன்கள் குவித்து அசத்தினார். மேலும் இந்த தொடரில் இங்கிலாந்து அணிக்கு பெரிய தொல்லையாக அமைந்து, இந்தியாவை காப்பாற்றி வருகிறார்.

இந்நிலையில் வெறும் 22 வயதாகும் ஜெய்ஸ்வால் இத்தொடரில் இங்கிலாந்துக்கு பெரிய பிரச்சனையை கொடுத்து வருவதாக அந்த அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் பேசியது பின்வருமாறு;- "ஆம் அவரால் சிறப்பாக பேட்டிங் செய்ய முடியும். அவர்தான் இங்கிலாந்துக்கு பிரச்சனை. உண்மையாகவே அவர் இத்தொடரில் எங்களுக்கு பிரச்சனையாக இருக்கிறார். அதே சமயம் அவர் நம்ப முடியாத வகையில் சிறப்பாக விளையாடுகிறார்" என்று கூறினார்.

___________________________________________________

விராட் கோலிக்கு ஆர்.சி.பி. சப்போர்ட்

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் தனிப்பட்ட காரணங்களுக்காக முதலிரண்டு போட்டிகளில் இருந்து விலகிய இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி எஞ்சிய போட்டிகளில் இருந்தும் விலகியுள்ளார். இந்த விஷயம் தற்போது அனைவரது மத்தியிலும் கேள்வியை எழுப்பியுள்ளது. மேலும் இப்படி விராட் கோலி இந்த தொடரில் இருந்து முற்றிலுமாக விலக என்ன காரணம்? என்ற கேள்வியையும் ரசிகர்கள் எழுப்பி வருகின்றனர். இந்நிலையில் இந்த விஷயத்திற்கான தெளிவான விளக்கத்தை பி.சி.சி.ஐ வெளியிட்டது.

இந்நிலையில் இங்கிலாந்துக்கு எதிரான எஞ்சிய டெஸ்ட் தொடரில் விராட் கோலி இடம் பெறாததை அடுத்து பெங்களூரு அணி தனது எக்ஸ் வலைத்தளப்பக்கத்தில் வெளியிட்ட பதிவு தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. ஆர்.சி.பி அணி வெளியிட்ட பதிவில் தெரிவித்திருப்பதாவது, 13 ஆண்டுகளில் விராட் கோலி இல்லாத முதல் டெஸ்ட் தொடர். தேசம் உங்களுடன் உள்ளது. நீங்கள் திரும்பத் தயாராகும் போதெல்லாம் உங்கள் இருக்கை ஒதுக்கப்பட்டிருக்கும், கிங். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

___________________________________________________

ஐ.பி.எல் தொடரில் ஷமர் ஜோசப் 

சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் உள்ளிட்ட 10 அணிகள் கலந்து கொள்ளும் இந்த ஆண்டுக்கான ஐ.பி.எல்.தொடர் வரும் மார்ச் மாத இறுதியில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஆண்டு ஜீன் மாதம் 20 ஓவர் உலகக்கோப்பை தொடர் நடைபெற உள்ளதால் அதற்கு சிறப்பாக தயாராக இந்த தொடர் ஒரு முன்னோட்டமாக இருக்கும். இந்நிலையில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் இளம் வேகப்பந்து வீச்சாளர் ஷமர் ஜோசப் வரும் ஐ.பி.எல் தொடரில் விளையாட உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி அவர் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியில் மார்க் வுட்-க்கு பதிலாக ரூ.3 கோடிக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.

கடந்த மாதம் பிரிஸ்பேனில் நடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் வெஸ்ட் இண்டீசின் வெற்றிக்கு ஷமர் ஜோசப் மிக முக்கிய பங்காற்றினார். அவர் அப்போட்டியில் மொத்தம் 8 விக்கெட்டுகள் வீழ்த்தினார் என்பது குறிப்பிடத்தக்கது. அவரது சிறப்பான செயல்பாட்டை அடுத்து பல முன்னணி வீரர்களும் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர். இந்நிலையில் அந்த சிறப்பான செயல்பாட்டின் மூலம் அவர் ஐ.பி.எல் தொடரில் களம் இறங்க உள்ளார். ஷமர் ஜோசப்பிற்கு இது முதல் ஐ.பி.எல் சீசன் ஆகும்.

___________________________________________________

பும்ரா குறித்து ரவிசாஸ்திரி 

இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட்டில் அபார பந்துவீச்சுத் திறமையை வெளிப்படுத்திய ஜஸ்பிரித் பும்ரா 9 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். இந்தப் போட்டிக்குப் பிறகு ஐசிசியின் டெஸ்ட் போட்டிக்கான சிறந்த பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசையிலும் முதலிடம் பிடித்து அசத்தினார். டெஸ்ட் தரவரிசையில் இந்திய பந்துவீச்சாளர் ஒருவர் முதலிடம் பிடிப்பது இதுவே முதல்முறையாகும். தரவரிசையில் முதலிடம் பிடித்து சாதனைப் படைத்த பும்ராவுக்கு பலரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்தனர்.

இந்த நிலையில், இந்திய அணியின் வேகப் பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா டெஸ்ட் போட்டிகளில் விளையாட எப்போதும் ஆர்வமாக இருந்ததாக இந்திய அணியின் முன்னாள் தலைமைப் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார்.  இது தொடர்பாக அவர் பேசியதாவது: ஜஸ்பிரித் பும்ராவிடம் முதல் முறையாக பேசியது எனக்கு ஞாபகமிருக்கிறது. அப்போது நான் கொல்கத்தாவில் இருந்தேன். டெஸ்ட் போட்டிகள் விளையாட உங்களுக்கு விருப்பம் இருக்கிறதா எனக் கேட்டேன். அதற்கு பதிலளித்த பும்ரா, டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடும் நாள் என்னுடைய வாழ்நாளின் மிகப் பெரிய நாள் என பதிலளித்தார். டெஸ்ட் போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும் என்ற உற்சாகமும், ஆர்வமும் அவரிடம் அதிகமாக இருந்தது என்றார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 5 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 6 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 7 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து