முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அஸ்வினுக்கு அங்கீகாரம் இல்லை

வியாழக்கிழமை, 22 பெப்ரவரி 2024      விளையாட்டு
22-Ram-58-6

Source: provided

இந்திய அணியின் நட்சத்திர சுழற்பந்துவீச்சாளரான ரவிச்சந்திரன் அஸ்வின் அண்மையில் டெஸ்ட் கிரிக்கெட்டில் 500 விக்கெட்டுகள் வீழ்த்திய இரண்டாவது இந்திய வீரர் என்ற சாதனையைப் படைத்தார். இந்த நிலையில், இந்திய அணியின் ரவிச்சந்திரன் அஸ்வினின் சேவைக்கு போதுமான அளவு அங்கீகாரம் கிடைக்கவில்லை என ஏபி டி வில்லியர்ஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவரது யூடியூப் சேனலில் டி வில்லியர்ஸ் பேசியதாவது,

என்ன ஒரு அருமையான சாதனை. ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு எனது வாழ்த்துகள். நான் எதிர்கொண்ட கடினமான பந்துவீச்சாளர்களில் நீங்களும் ஒருவர். இந்திய அணிக்கு அஸ்வின் மிகப் பெரிய சொத்து. பந்துவீச்சு மற்றும் பேட்டிங்கில் சிறப்பாக செயல்படுபவர் அஸ்வின். மிகச் சிறந்த வீரரான அவருக்கு எப்போதும் போதுமான அளவுக்கு அங்கீகாரம் கிடைப்பதில்லை. அடுத்து நடைபெறவுள்ள இரண்டு டெஸ்ட் போட்டிகளில் அஸ்வின் பந்துவீச்சில் இங்கிலாந்து அணியின் பேட்ஸ்மேன்கள் கவனமாக விளையாட வேண்டும் என்றார்.

இந்திய தடகள வீராங்கனை தடை

அரியானா மாநிலத்தைச் சேர்ந்த தடகள வீராங்கனை அஞ்சலி தேவி சர்வதேச ஊக்கமருந்து தடுப்பு ஆணையத்தால் தடை செய்யப்பட்ட மருந்துகளின் பட்டியலில் உள்ள ஊக்கமருந்தை பயன்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக கடந்த ஆண்டு ஜூன் மாதம் நடத்தப்பட்ட சோதனையில், அவர் தடை செய்யப்பட்ட ஊக்கமருந்தை பயன்படுத்தியிருப்பது உறுதி செய்யப்பட்டது.

இந்த நிலையில், அஞ்சலி தேவிக்கு 4 ஆண்டுகள் தடை விதித்து தேசிய ஊக்க மருந்து தடுப்பு ஆணையம் (NADA) உத்தரவிட்டுள்ளது. இந்த தடைக்காலத்தில் அவரால் தேசிய மற்றும் சர்வதேச போட்டிகளில் பங்கேற்க முடியாது. இதற்கு முன் அஞ்சலி தேவி கடந்த 2019-ம் ஆண்டு நடைபெற்ற தோகா சர்வதேச சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியா சார்பில் பங்கேற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

கிரிக்கெட் விளையாடிய சச்சின்

கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் ஓய்வு பெற்றபிறகும் ரசிகர்களின் அன்பும், பாசமும் மாறாமல் அப்படியே உள்ளது. அவர் எங்கு பயணம் மேற்கொண்டாலும் ரசிகர்கள் அவரை வாழ்த்தி முழக்கமிடுவதுடன் அவருடன் புகைப்படம் எடுத்தும், கிரிக்கெட் விளையாடியும் மகிழ்கின்றனர். இந்நிலையில், சச்சின் தனது மனைவி அஞ்சலி, மகள் சாரா ஆகியோருடன் கடந்த சில தினங்களாக ஜம்மு காஷ்மீரில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இந்த பயணத்தின்போது பல்வேறு சுற்றுலா தலங்களுக்கு சென்ற அவர், உள்ளூர் ரசிகர்கள், சிறுவர்களுடன் கிரிக்கெட் விளையாடி மகிழ்கிறார்.

அவ்வகையில், குல்மார்க் பகுதிக்கு சென்றபோது உள்ளூர் இளைஞர்களுடன் சாலையில் கிரிக்கெட் விளையாடினார். சச்சினுக்கு ஒரு பந்துவீச்சாளர் பந்து வீசினார். முதல் 5 பந்துகளையும் சச்சின் சரியாக அடித்தார். பின்னர் மட்டையை தலைகீழாக பிடித்த சச்சின், கடைசி பந்தில் என்னை அவுட் ஆக்குங்கள் பார்க்கலாம், என சவால் விட்டார். ஆனால் இந்த முறையும் அவரை பந்துவீச்சாளரால் அவுட் ஆக்க முடியவில்லை. கடைசி பந்தை மட்டையின் கைப்பிடியால் துல்லியமாக தடுத்தார் சச்சின். பின்னர் உள்ளூர் ரசிகர்கள் அனைவருடனும் செல்பி எடுத்து மகிழ்ந்தார். இந்த மகிழ்ச்சியான தருணம் தொடர்பான வீடியோவை சச்சின் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளார்.

உழைப்புக்கு கிடைத்த அங்கீகாரம்

இந்திய கிரிக்கெட் வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால், மும்பை பாந்த்ரா பகுதியில் ரூ.5.4 கோடிக்கு அடுக்குமாடி குடியிருப்பை வாங்கியுள்ளார். கிழக்கு பாந்த்ராவில் வசதியானவர்கள் வசிக்கும் அதானியின் எக்ஸ் பிகேசியில் 1,100 சதுர அடி பிளாட் ரூ.5.4 கோடிக்கு வாங்கியுள்ளார். இந்த ஃப்ளாட் ஜனவரி 7 அன்று பதிவு செய்யப்பட்டது என்று தகவல் வெளியாகியுள்ளது. இதே மும்பையில் ஒரு காலத்தில் டென்ட் அமைத்து வசித்து வந்தது ஜெய்ஸ்வால் குடும்பம். உத்தரப் பிரதேசம் சொந்த ஊராக இருந்தாலும் பிழைப்புக்காக மும்பை வந்து, மும்பையின் ஆசாத் மைதானத்தின் அருகே டென்ட்டில் தங்கி வாழ்க்கையை நகர்த்தி வந்தது ஜெய்ஸ்வால் குடும்பம். டென்டில் தாக்கியிருந்தாலும் தனது மகனின் கிரிக்கெட் கனவுக்காக கடுமையாக உழைத்தனர் ஜெய்ஸ்வாலின் பெற்றோர்.

ஜெய்ஸ்வாலும் தன் பங்குக்கு ஆசாத் மைதானத்தில் பானி பூரி விற்கும் வியாபாரிக்கு உதவியாக இருந்து குடும்பத்துக்காக வருமானம் ஈட்டினார். அந்த நிலையில் இருந்து தற்போது அதே மும்பையில் கோடிகளை குவித்து குடியிருப்பு வாங்கியிருக்கும் அவரின் உழைப்பு அசாத்தியமானது. 2020-ம் ஆண்டு நடந்த U-19 உலகக் கோப்பை தொடரில் ஆதிக்கம் செலுத்திய ஜெய்ஸ்வாலுக்கு ஐபிஎல் தொடர் திருப்புமுனையாக அமைந்தது.  நேற்று வெளியான ஐசிசி டெஸ்ட் கிரிக்கெட் பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசை பட்டியலில் 14 இடங்கள் முன்னேறி 15-வது இடத்தை பிடித்துள்ளார் ஜெய்ஸ்வால். ஐபிஎல் கிரிக்கெட்டில் தனது திறமையை வெளிப்படுத்தி அதன்மூலம் இந்திய கிரிக்கெட் அணிக்குள் அடியெடுத்து வைத்த 22 வயதான இடது கை பேட்ஸ்மேனான ஜெய்ஸ்வால்.

பந்துவீச்சு குறித்து ஸ்டோக்ஸ்

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 4-வது டெஸ்ட் போட்டி இன்று (பிப்ரவரி 23) முதல் ராஞ்சியில் தொடங்கவுள்ளது. 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 434 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தியது. அதன்பின் இங்கிலாந்தின் மீதான விமர்சனங்கள் அதிகரித்தன. இந்திய அணியைக் கட்டுப்படுத்த பென் ஸ்டோக்ஸ் மீண்டும் பந்துவீச்சில் ஈடுபட வேண்டும் என்ற கருத்துகளும் எழுந்தன. அதற்கு ஏற்றவாறு பென் ஸ்டோக்ஸ் பந்துவீச்சுப் பயிற்சியில் ஈடுபட்டார்.

இந்த நிலையில், இந்திய அணிக்கு எதிரான 4-வது டெஸ்ட் போட்டியில் பந்துவீசுவது குறித்து பென் ஸ்டோக்ஸ் பேசியுள்ளது முக்கியத்துவம் பெறுகிறது. இது தொடர்பாக அவர் பேசியதாவது: இந்தியாவுக்கு எதிரான நாளை நடைபெறும் 4-வது டெஸ்ட் போட்டியில் நான் பந்துவீசலாம் அல்லது பந்துவீசாமலும் இருக்கலாம். இரண்டு வேகப் பந்துவீச்சாளர்களுடன் களமிறங்குவது இங்கிலாந்துக்கு சிறந்த தெரிவாக இருக்கும் என்றார். கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் இரண்டாவது ஆஷஸ் போட்டியின்போது பென் ஸ்டோக்ஸ் கடைசியாக பந்துவீசியது குறிப்பிடத்தக்கது.

சன்ரைசர்ஸ் வீரரிடம் விசாரணை?

குஜராத் மாநிலம் சூரத் பகுதியை சேர்ந்தவர் மாடல் அழகி தன்யா சிங். தன்யா சிங், சூரத்தில் உள்ள அவரது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தற்கொலை செய்து கொண்ட அவர், அதற்கான காணரம் குறித்து கடிதம் ஏதும் எழுதி வைக்கவில்லை. அவரது தற்கொலைக்கான காரணம் தெரியாத நிலையில், போலீசார் தீவிரமாக துப்புதுலக்கி வருகின்றனர். இந்த நிலையில்தான் ஐபிஎல் கிரிக்கெட் வீரர் அபிஷேக் சர்மாவிடம், தன்யா கிங் தற்கொலை குறித்து விசாரணை நடத்த முடிவு செய்துள்ளதாக போலீசார் தரப்பில் கூறப்படுகிறது.

அபிஷேக் சர்மா ஐபிஎல் கிரிக்கெட்டில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்காக விளையாடி வருகிறார். இவரும் தன்யா சிங்கும் நணபர்களாக இருந்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். இதன் அடிப்படையில் விசாரணை நடத்த இருப்பதாகவும், அதற்காக அவருக்கு சம்மன் அனுப்ப இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மாடல் அழகி தன்யா சிங் அபிஷேக் சர்மாவுக்கு வாட்ஸ்அப் மூலம் தகவல் அனுப்பியதாக போலீசார் தரப்பில் கூறப்படுகிறது. விசாரணைக்கு பிறகுதான் இது தொடர்பாக தெரிய வரும் என போலீசார் தெரிவித்தனர். மேற்கொண்டு ஏதும் தெரிவிக்க மறுத்துவிட்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து