முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு மதுரையில் நடத்த திட்டம்?

வெள்ளிக்கிழமை, 23 பெப்ரவரி 2024      தமிழகம்
Vijay-4 2023 06 17

Source: provided

சென்னை:தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டை மதுரையில் நடத்த நடிகரும், அக்கட்சித் தலைவருமான விஜய் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் விஜய் கடந்த பிப்ரவரி 2-ம் தேதி ‘தமிழக வெற்றிக் கழகம்’ என்ற கட்சியைத் தொடங்கினார். அப்போதே அவர் 2026 சட்டமன்றத் தேர்தலே தனது இலக்கு எனத் தெரிவித்தார்.  இந்த மக்களவைத் தேர்தலில் தான் போட்டியிடப் போவதில்லை எனவும் யாருக்கும் ஆதரவு கொடுக்க மாட்டோம் எனவும் கூறினார். இடைப்பட்ட இந்த 2 வருடங்களில் கட்சியைப் பலப்படுத்தும் பணிகளில் ஈடுபடப் போவதாகவும் அவர் கூறினார்.

இதனைத் தொடர்ந்து அரசியல் பணிகளை இப்போதே முழுவீச்சில் விஜய் தொடங்கியுள்ளார். அவரது அடுத்தடுத்த அரசியல் செயல்பாடுகள் ரசிகர்கள் மத்தியில் உற்று நோக்கப்படுகிறது. சமீபத்தில் சென்னை பனையூரில் தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. அதில் பல்வேறு ஆலோசனைகளும் முடிவுகளும் எடுக்கப்பட்டன. குறிப்பாக 2 கோடி உறுப்பினர்களைச் சேர்க்க தீவிரமாக பணியாற்ற வேண்டும் என கட்சி நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தியிருந்தார்.

பின்னர் தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளை 100 மாவட்டங்களாகப் பிரித்து பொறுப்புகள் வழங்க தமிழக வெற்றிக் கழகம் முடிவு செய்து இருப்பதாக தகவல்கள் வெளியானது. புதிய மாவட்டப் பொறுப்பாளர்கள் மற்றும் சட்டமன்றத் தொகுதிப் பொறுப்பாளர்கள் குறித்த அறிவிப்பு 10 நாட்களுக்குள் வெளியாகும் எனவும் கூறப்படுகிறது. அதேபோல், தமிழக வெற்றிக் கழகத்தின் உறுப்பினர் சேர்க்கைக்கு புதிய செயலி ஒன்று உருவாக்கப்படவுள்ளதாகவும், அதில் நிர்வாகிகள் ஒவ்வொருவரும் தங்களுக்கான எண் மூலம் உறுப்பினரை சேர்க்கலாம் எனவும், உறுப்பினர் சேர்க்கைக்கான செயலியை அடுத்த வாரம் அறிமுகம் செய்யவுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன.

இந்நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டை மதுரையில் நடத்த விஜய் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. கட்சியை பலப்படுத்த சுமார் 100 மாவட்ட பொறுப்பாளர்களை நியமித்து, 2 கோடி உறுப்பினர்களை சேர்க்க விஜய் முடிவு செய்துள்ள நிலையில், உறுப்பினர் சேர்க்கை முடிந்த பிறகு ஏப்ரல் மாதம் இரண்டாம் வாரத்தில் மதுரையில் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு நடத்தப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த மாநாட்டில் கட்சியின் சின்னம் மற்றும் நிறத்தை அதிகாரப்பூர்வமாக  விஜய் அறிவிக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து