முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழ்நாடு பள்ளிக்கல்விக்கு ஏ.ஐ.தொழில் நுட்பம் தேவை: அமைச்சர் அன்பில்மகேஷ் பேச்சு

செவ்வாய்க்கிழமை, 27 பெப்ரவரி 2024      தமிழகம்
Anbil 2

சென்னை, தற்போதைய சூழ்நிலையில் தமிழக பள்ளிக்கல்விக்கு செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.) தொழில் நுட்பம் தேவை என்று அமைச்சர் அன்பில்மகேஷ் தெரிவித்துள்ளார்.

உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் எதிர்காலம் கருதி, தொழில் நுட்ப கல்வி மற்றும் கற்கும் வாய்ப்பு என்ற தலைப்பில் காக்னிசன்ட் நிறுவனம் சென்னை அடுத்த சிறுசேரியில் 2 நாள் பயிற்சி அளிக்க ஏற்பாடு செய்துள்ளது. இந்த பயிற்சியில் அரசு உயர்நிலைப் பள்ளி மாணவர்கள், மற்றும் ஆசிரியர்கள் பங்கேற்கின்றனர். இதன் தொடக்க நிகழ்வு நேற்று காலை நடந்தது. பள்ளிக் கல்வி அமைச்சர் அன்பில்மகேஷ் பொய்யாமொழி, பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலாளர் குமரகுருபரன், ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வியின் மாதிரிப் பள்ளிகளின் உறுப்பினர் செயலர் சுதன், ஆகியோர் இந்த நிகழ்வில் பங்கேற்றனர். 

2 நாள் பயிற்சியை தொடங்கி வைத்து அமைச்சர் அன்பில்மகேஷ் பொய்யாமொழி பேசியதாவது: செயற்கை நுண்ணறிவு குறித்த இந்த இரண்டு நாள் பயிலரங்கில் பங்கேற்கும் ஆசிரியர்கள் மாணவர்களுக்கு இந்த அனுபவம் மிகவும் சிறப்பானதாக இருக்கும். நமது முதல்வர் மு.க.ஸ்டாலினின் தொலை நோக்குப் பார்வை என்பது தகவல் தொழில் நுட்பத்தில் உலக அளவில் தமிழகம் முதலிடத்தில் இருக்க வேண்டும் என்பதே. பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் என்ற முறையில் நமது பள்ளிகளில் இருந்து தொடங்கும் இந்த மாற்றத்தை முன்னெடுத்து செல்வது எனக்கு மிகவும் உற்சாகத்தை அளிக்கிறது.

இது சவாலானது மட்டும் அல்ல, பெரும் பொறுப்பும் உள்ளடங்கிய ஒரு பணி. இந்த பயிலரங்கில் கிடைக்கும் சிந்த சர்வதேச ஆலோசனைகளை நாம் விரைவாகவும் சரியாகவும் கொண்டு சென்றால், அரசுப் பள்ளிகளில் படிக்கும் நம் குழந்தைகள் உலகில் உள்ள மற்ற குழந்தைகளைப் போலவும் சிறந்துவிளங்க முடியும். மேலும் தமிழ்நாட்டின் இலக்கை நாம் உணர்ந்து கொள்ள உதவுவார்கள். நமது பள்ளிக் கல்வி முறையில் வளர்ந்து வரும் தொழில் நுட்பமான செயற்கை நுண்ணறிவில் நம் குழந்தைகளை எப்படி இணைத்துக் கல்வி கற்பிக்க போகிறோம் என்பதை நாம் கவனிக்க வேண்டியது அவசியம். தற்போதைய சூழ்நிலையில் பள்ளிக்கல்விக்கு செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்பம் தேவை.

நாம் அறிவுப் பொருளாதாரத்தை நோக்கிச் செல்வதன் மூலம் தமிழ்நாடு உலக அளவில் முன்னணியில் இருக்க முடியும். கடந்த ஆண்டு அமெரிக்காவில் மைக்ரோசாப்ட் நிறுவனத்துடன் பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் நான் கையெழுத்திட்ட ஒப்பந்த அடிப்படையில் கடந்த ஆண்டில் இந்த தொழில் நுட்பக் கல்வி மற்றும் கற்றல் வாய்ப்பு என்ற திட்டம் தொடங்கியது. முதற்கட்டமாக 12 அரசுப் பள்ளிகள் இதில் ஈடுபடுத்தப்பட்டன. அதன் மூலம் 4226 மாணவ மாணவியர் பயன்பெற்றனர். அதன் தொடர்ச்சியாக தற்போது இந்த பயிற்சி பட்டறையின் மூலம் திருச்சி, கோவை, மதுரை மற்றும் சென்னை மற்றும் புறநகர்பகுதிகளில் உள்ள 40 ஆயிரம் மணவ மாணவியர் பயன்பெறும் வகையில் 4 மாவட்டங்களுக்கு இந்த திட்டம் விரிவுபடுத்தப்படுகிறது. இவ்வாறு அமைச்சர் அன்பில் மகேஷ்பொய்யாமொழி தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து