முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சமதள பகுதிகளில் உள்ள சீமைக் கருவேல மரங்களை அகற்றுவதில் என்ன சிரமம்? - தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட் கேள்வி

வெள்ளிக்கிழமை, 1 மார்ச் 2024      தமிழகம்
chennai-high-court 2022-08-29

Source: provided

சென்னை : சீமைக்கருவேல மரங்களை அகற்றும் விவகாரத்தில் தமிழ்நாடு அரசு முறையாக செயல்படவில்லை என தெரிவித்த சென்னை உயர் நீதிமன்றம், சமதள பகுதிகளில் உள்ள  சீமைக்கருவேல மரங்களை அகற்றுவதில் என்ன சிரமம் என்று கேள்வி எழுப்பியுள்ளது. 

தமிழ்நாடு முழுவதும் உள்ள சீமைக்கருவேல மரங்களை அகற்றக்கோரி ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ உள்ளிட்டோர் தொடர்ந்த மனுக்கள் நீதிபதிகள் சதீஷ்குமார், பரத சக்கரவர்த்தி அடங்கிய சிறப்பு அமர்வில் விசாரணைக்கு வந்தது.  மரங்களை அகற்ற கோரி 2 ஆண்டுகளான நிலையில், தமிழ்நாடு அரசின் நடவடிக்கை என்ன என நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. அப்போது, சீமைக்கருவேல மரங்களை அகற்றும் பணிகளின் தற்போதைய நிலை குறித்த அறிக்கையை அரசு வழக்கறிஞர் தாக்கல் செய்தார்.  அதில், சீமைக்கருவேல மரங்களை அகற்றுவதற்காக அரசு இதுவரை 30 கோடி ரூபாய் செலவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த விவகாரத்தில் தமிழ்நாடு அரசு முறையாக செயல்படவில்லை என சுட்டிக்காட்டியதுடன்,  கடமைக்காக இந்த வழக்கை நடத்துவது போல் உள்ளதாக கூறினர். வனப்பகுதிகளில் உள்ள சீமைக்கருவேலை மரங்களை அகற்றுவதில் உள்ள சிரமத்தை புரிந்து கொள்வதாக கூறிய நீதிபதிகள், சமதள பகுதிகளில் உள்ள மரங்களை அகற்றுவதில் என்ன சிரமம்? என கேள்வி எழுப்பினர்.

மேலும் ஒரு கிராமம் அல்லது ஒரு பஞ்சாயத்தில் கூட முழுமையாக சீமைக்கருவேல மரங்கள் அகற்றப்படவில்லை எனவும் சீமைக்கருவேல மரங்களை அகற்றுவதற்கு ராக்கெட் தொழில்நுட்பம் தேவையில்லை எனவும் தெரிவித்தனர். சீமைக்கருவேல மரங்களை அகற்றுவதற்கு அரசு ஏன் இவ்வளவு செலவு செய்ய வேண்டுமெனவும், அந்த பணியை ஏலத்தில் விடலாமே என்றும் கேள்வி எழுப்பினர்.  மேலும் வழக்கின் விசாரணையை ஒத்தி வைத்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து