முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஒப்பந்த விவகாரம் குறித்து சஹா

வெள்ளிக்கிழமை, 1 மார்ச் 2024      விளையாட்டு
BCCI 2023 06 13

Source: provided

இந்திய அணியின் 2023- 2024 காலண்டர் வருடத்திற்கான மத்திய சம்பள ஒப்பந்தப் பட்டியலை பி.சி.சி.ஐ. அறிவித்தது. அதில் ரஞ்சிக் கோப்பையில் விளையாடவில்லை என்பதற்காக ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் இஷான் கிஷன் ஆகிய 2 வீரர்களை பி.சி.சி.ஐ. அதிரடியாக நீக்கியது. இந்த நடவடிக்கை இந்திய கிரிக்கெட்டில் கலவையான விமர்சனங்களை எழுப்பியுள்ளது. இந்நிலையில் பி.சி.சி.ஐ-யின் இந்த முடிவு குறித்தும், இளம் வீரர்களின் முடிவு குறித்தும் கருத்து தெரிவித்துள்ள இந்திய வீரரான விருத்திமான் சஹா கூறுகையில்.,

இது பி.சி.சி.ஐ.யின் முடிவாக இருக்கலாம். ஆனால் வீரர்களின் தனிப்பட்ட முடிவுகளையும் புரிந்து கொள்ள வேண்டும். பி.சி.சி.ஐ. கட்டாயப்படுத்தி எதையும் செய்ய வைக்க முடியாது. நான் எப்போதெல்லாம் பிட்டாக இருந்திருக்கின்றேனோ அப்போதெல்லாம் கிளப் போட்டிகள், ஆபீஸ் போட்டிகள் என அனைத்திலுமே பங்கேற்று விளையாடி உள்ளேன். நான் எப்பொழுதுமே ஒரு போட்டியை போட்டியாகத்தான் பார்க்கிறேன். அது எவ்வித போட்டியாக இருந்தாலும் எனக்கு சமமாகத்தான் தெரியும். சர்வதேச போட்டிகள், உள்ளூர் போட்டிகள், கிளப் போட்டிகள் என்று எதையும் நான் பிரித்து பார்ப்பது கிடையாது என்று கூறியுள்ளார். 

____________________________________________

ஆஸ்திரேலிய அணி தடுமாற்றம்

நியூசிலாந்து - ஆஸ்திரேலியா இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி வெலிங்டனில் தொடங்கியது. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி தனது முதல் இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலியா முதல் நாளில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 279 ரன்கள் அடித்திருந்தது. கிரீன் 103 ரன்களுடனும், ஹேசில்வுட் ரன் எதுவுமின்றியும் களத்தில் இருந்தனர். நியூசிலாந்து தரப்பில் மேட் ஹென்ரி 4 விக்கெட்டுகளும், வில்லியம் ஒ ரூர்க் மற்றும் ஸ்காட் குகெலீஜ்ன் தலா 2 விக்கெட்டுகளும், ரச்சின் ரவீந்திரா தலா 1 விக்கெட்டும் வீழ்த்தியிருந்தனர். இதனையடுத்து 2-வது நாள் ஆட்டம் நேற்று நடைபெற்றது. தொடர்ந்து பேட்டிங் செய்த கிரீன் - ஹேசில்வுட் இணை மேற்கொண்டு 104 ரன்கள் அடித்து அணிக்கு வலுவூட்டினர். இவர்களில் ஹேசில்வுட் 22 ரன்களில் மேட் ஹென்ரி பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இதனையடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய நியூசிலாந்து அணி, ஆஸ்திரேலிய பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 179 ரன்களில் சுருண்டது. 

பின்னர் 204 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலிய அணிக்கு ஆரம்பத்திலேயே அதிர்ச்சி காத்திருந்தது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் சுமித் முதல் ஓவரிலேயே கிளீன் போல்டு ஆனார். அடுத்து களமிறங்கிய மார்னஸ் லாபுசாக்னே 2 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார். ஆஸ்திரேலிய அணி 2-வது நாளில் 2 விக்கெட்டுகளை இழந்து 13 ரன்களுடன் தடுமாறி வருகிறது. உஸ்மான் கவாஜா 5 ரன்களுடனும், லயன் 6 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். நியூசிலாந்து தரப்பில் டிம் சவுதி 2 விக்கெட்டுகள் வீழ்த்தி உள்ளார். ஆஸ்திரேலிய அணி தற்போது வரை 217 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. இன்று 3-வது நாள் ஆட்டம் நடைபெற உள்ளது.  

____________________________________________

பிசிசிஐ-க்கு கபில்தேவ் ஆதரவு

இந்திய அணியில் இடம்பெறுவதற்கு உள்ளூர் போட்டிகளில் வீரர்கள் விளையாட வேண்டும் என்ற பிசிசிஐ-ன் முடிவை இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவ் வரவேற்றுள்ளார். பிசிசிஐ-ன் இந்த முடிவினால் சில வீரர்கள் பாதிக்கப்படுவார்கள் எனவும் அவர் தெரிவித்தார். இது தொடர்பாக அவர் பேசியதாவது: பிசிசிஐ-ன் இந்த புதிய முடிவினால் சில வீரர்கள் பாதிக்கப்படுவார்கள். சில வீரர்கள் காயமடைந்ததாக உணர்வார்கள். ஆனால், நாட்டுக்கு முன்பு எந்த ஒரு விஷயமும் பெரிது கிடையாது. உள்ளூர் போட்டிகளைப் பாதுகாக்க பிசிசிஐ எடுத்திருக்கும் இந்த முடிவுக்கு எனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

சர்வதேச கிரிக்கெட்டில் இடம் பிடித்தவுடன் வீரர்கள் உள்ளூர் போட்டிகளில் விளையாடுவதில்லை. இதனைப் பார்க்கும்போது உள்ளூர் போட்டிகளின் மதிப்பு குறைகிறது என வருத்தமாக இருக்கும். சர்வதேசப் போட்டிகளில் விளையாடும் வீரர்கள் தங்களது மாநிலத்துக்காக விளையாடுவது இளம் வீரர்களுக்கு ஊக்கமளிப்பதாக இருக்கும் என்றார். அண்மையில் வெளியிடப்பட்ட 2023-24 ஆம் ஆண்டுக்கான பிசிசிஐ மத்திய ஒப்பந்தத்திலிருந்து ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் இஷான் கிஷன் பெயர் தவிர்க்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

____________________________________________

ஆஸி. வீரர் நேதன் லயன் சாதனை

ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த பிரபல சுழல்பந்து வீச்சாளர் நேதன் லயன் (36) 128 போட்டிகளில் விளையாடி 521 விக்கெட்டுகள் எடுத்துள்ளார். 5 விக்கெட்டுகளை 23 முறையும் 10 விகெட்டுகளை 4 முறையும் எடுத்து அசத்தியுள்ளார். 2011இல் இல்ங்கைக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அறிமுகமானவர் நேதன் லயன். தற்போது நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்டில் விளையாடி வருகிறார். சமீபத்தில் 500 விக்கெட்டுகள் எடுத்தபோது ஆஸ்திரேலியாவுக்காக அதிக டெஸ்ட் விக்கெட்டுகள் எடுத்தவர்கள் பட்டியலில் 3வது இடத்துக்கு முன்னேறினார் நேதன் லயன்.

இந்நிலையில் நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் 4 விக்கெட்டுகள் எடுத்து அசத்தினார். இதன் மூலம் மேற்கிந்திய தீவுகள் வீரர் கோர்ட்னி வால்ஷைப் பின்னுக்குத் தள்ளி அதிக டெஸ் விக்கெட் வரிசையில் 7வது இடத்துக்கு முன்னேறியுள்ளார். இந்திய வீரர்கள் அனில் கும்ப்ளே 4வது இடத்திலும் ரவி அஸ்வின் 9வது இடத்திலும் இருப்பது குறிப்பிடத்தக்கது. அதிக டெஸ்ட் விக்கெட்டுகள் எடுத்தவர்கள் பட்டியல்: முத்தையா முரளிதரன் - 800, ஷேன் வார்னே- 708, ஜேம்ஸ் ஆண்டர்சன் - 698. அனில் கும்ப்ளே - 619, ஸ்டூவர்ட் பிராட் - 604,  க்ளென் மெக்ரத் - 563, நேதன் லயன் - 521, கோர்ட்னி வால்ஷ் - 519, ரவி அஸ்வின் - 507.

____________________________________________

ஓய்வை அறிவித்தார் எராஸ்மஸ்

தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த நடுவரான மரைஸ் எராஸ்மஸ், சர்வதேச கிரிக்கெட்டில் பல ஆண்டுகளாக நடுவராக பணியாற்றி வருகிறார். 2006-ம் ஆண்டு இவர் தனது முதல் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் நடுவராகப் பணியாற்றினார்.தற்போது வரை நூற்றுக்கும் மேற்பட்ட சர்வதேச கிரிக்கெட்டில் நடுவராக பணியாற்றியுள்ளார்.

3 முறை ஐசிசி-யின் சிறந்த நடுவர் விருதை இவர் வென்றுள்ளார்.61 வயதாகும் இவர் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற உள்ளதாக அறிவித்துள்ளார். நியூசிலாந்து - ஆஸ்திரேலியா அணிகள் மோதும் டெஸ்ட் தொடருடன் ஓய்வு பெறுவதாக தெரிவித்துள்ளார். மேலும் ஓய்வு பெற்றாலும் கிரிக்கெட்டில் தன்னுடைய பங்களிப்பு இருக்கும் எனக் கூறியுள்ளார்.

____________________________________________

டெல்லி அணிக்கு 2-வது வெற்றி

மகளிர் ப்ரீமியர் லீக்-ன் இரண்டாவது தொடர் பிப்ரவரி 23-ம் தேதி கோலாகலமாகத் தொடங்கியது. இந்த தொடரில் மும்பை இந்தியன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர், டெல்லி கேப்பிட்டல்ஸ், யு.பி. வாரியர்ஸ் மற்றும் குஜராத் ஜெயண்ட்ஸ் ஆகிய 5 அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன. ஒவ்வொரு அணியும் லீக் சுற்றில் மற்ற அணிகளுடன் 2 முறை மோதும். இதில் முதலிடம் பிடிக்கும் அணி நேரடியாக இறுதிச் சுற்றுக்கு முன்னேறும். தொடர்ந்து 2, 3-வது இடங்களை பிடிக்கும் அணிகள், எலிமினேட்டர் சுற்றில் விளையாடும். எலிமினேட்டர் சுற்றில் வெற்றி பெறும் அணி இறுதிச் சுற்றில் களமிறங்கும்.

இந்நிலையில், பெண்கள் பிரீமியர் கிரிக்கெட் தொடரில் நடைபெற்ற ஆட்டத்தில் டெல்லி கேபிட்டல்ஸ் – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின. இதில், டாஸ் வென்ற பெங்களூரு அணியின் கேப்டன் ஸ்மிருதி மந்தனா பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி, டெல்லி அணி முதலில் பேட்டிங் செய்தது.  அபாரமாக விளையாடிய டெல்லி கேபிட்டல்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 194 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக ஷஃபாலி வர்மா 50 ரன்களும், ஆலிஸ் கேப்சி 46 ரன்களும் விளாசினர்.இதையடுத்து 195 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ராயல் சேலசஞ்சர்ஸ் பெங்களூரு அணி, 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 169 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் டெல்லி கேபிட்டல்ஸ் அணி 25 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி வாகை சூடி, நடப்பு தொடரில் தனது இரண்டாவது வெற்றியை பதிவு செய்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 5 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 5 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 3 months 5 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 5 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 5 months 5 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 5 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து