முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் பங்குனி தேரோட்டம் கோலாகலம் : வடம்பிடித்து இழுத்த பக்தர்கள்

செவ்வாய்க்கிழமை, 26 மார்ச் 2024      ஆன்மிகம்
Srirangam 2024-03-26

Source: provided

திருச்சி : ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் நேற்று பங்குனி தேர்த் திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

108 வைணவ திருத்தலங்களில் முதன்மையானதும் பூலோக வைகுண்டம் என பக்தர்களால் அன்பாக போற்றப்படுவதுமான ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் பங்குனி தேர் திருவிழா கடந்த 17-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

இவ்விழாவின் 9-ம் நாளான நேற்று முன்தினம் நம் பெருமாள், தாயார் சேர்த்தி சேவை நடைபெற்றது. இந்த சேர்த்தி சேவை ஆண்டுக்கு ஒரு முறை தான் நடக்கும். நம்பெருமாளும், தாயாரும் ஒருசேர எழுந்தருளி, பக்தர்களுக்கு சேவை சாதித்தருளுவார்கள். இருவரையும் ஒருசேர தரிசிக்கும் தம்பதிகள் வாழ்க்கை மகிழ்ச்சியாக அமையும் என்பது நம்பிக்கை. 

ஆண்டுதோறும் பங்குனி உத்திரத்தன்று இந்த சேர்த்தி சேவை நடைபெறும். இதனை முன்னிட்டு நேற்று முன்தினம் காலை நம் பெருமாள் கண்ணாடி அறையில் இருந்து தங்க பல்லாக்கு புறப்பட்டு சித்திரை வீதிகளில் வலம் வந்து ஆழ்வான் திருச்சுற்றை கடந்து, தாயார் சன்னதி சென்றடைந்தார். பின்னர் சமாதானம் கண்டறிய முன் மண்டபம் வந்து சேர்ந்தார். அங்கு ஏகாந்தம் நடைபெற்றது. 

பின்னர் அங்கிருந்து நம் பெருமாள் புறப்பட்டு பங்குனி உத்திர மண்டபத்திற்கு வந்து சேர்ந்தார். மூலஸ்தானத்தில் இருந்து ரங்கநாச்சியார் மதியம் புறப்பட்டு சேர்த்தி மண்டபத்தை வந்தடைந்தார். பின்னர் மதியம் 3 மணி முதல் இரவு 10.30 மணி வரை பெருமாள், தாயார் எழுந்தருளி, ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு சேர்த்தி சேவை சாத்தருளினர்.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பங்குனி தேரோட்டம் நேற்று காலை நடைபெற்றது. இதையொட்டி நம்பெருமாள் அதிகாலை 6.30 மணிக்கு தாயார் சன்னதியில் இருந்து கோரதம் என்னும் பங்குனி தேர் மண்டபத்திற்கு புறப்பட்டார். காலை 7.30 மணிக்கு தேரில் எழுந்தருளினார். பின்னர் காலை 8.30 மணிக்கு தேர் வடம் பிடித்து இழுக்கப்பட்டது. 

அப்போது ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்து தேரை இழுத்தனர்.தேர் 4 சித்திரை வீதிகளில் வலம் வந்து காலை 11.50 மணிக்கு நிலையை வந்தடைந்தது. நிலையை வந்தடைந்த தேரின் முன் பக்தர்கள் சூடம், நெய் விளக்கேற்றி தேங்காய் உடைத்து வழிப்பட்டனர். 

தேர்த்திருவிழாவையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. இன்று ஆளும் பல்லக்கில் நம்பெருமாள் சித்திரை வீதிகளில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளிக்கின்றார். இத்துடன் பங்குனி தேர்த்திருவிழா நிறைவடைகிறது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து