முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அதிகமுறை டக் அவுட்டான ரோகித்

செவ்வாய்க்கிழமை, 2 ஏப்ரல் 2024      விளையாட்டு
Rohit-Sharma 2023-05-17

Source: provided

ஐ.பி.எல். தொடரின் நேற்றைய போட்டியில் ரோகித் சர்மா டக்கில் வெளியேறியதன் மூலமாக ஐ.பி.எல். போட்டியில் 17வது முறையாக டக் அவுட்டில் ஆட்டமிழந்த மோசமான சாதனையை அவர் படைத்துள்ளார். வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையிலான 14வது ஐ.பி.எல். போட்டி நடைபெற்றது. இதில், டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி கேப்டன் சஞ்சு சாம்சன் பவுலிங் தேர்வு செய்தார். அதன்படி, மும்பை இந்தியன்ஸ் அணியில் ரோகித் சர்மா மற்றும் இஷான் கிஷான் இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர்.

முதல் ஓவரை ராஜஸ்தான் அணியின் வீரர் டிரெண்ட் போல்ட் வீசினார். இந்த ஓவரில் முதல் 4 பந்துகள் பிடித்து இஷான் கிஷான் ஒரு ரன் எடுத்தார். இதையடுத்து ரோகித் சர்மா பேட் செய்தார். முதல் பந்திலேயே விக்கெட் கீப்பர் சஞ்சு சாம்சனிடம் கேட்ச் ரோஹித் கொடுத்து ஆட்டமிழந்தார். இதன் மூலமாக ஐ.பி.எல். கிரிக்கெட் வரலாற்றில் அதிக முறை டக் அவுட்டில் வெளியேறிய வீரர்களின் பட்டியலில் 17 முறை ஆட்டமிழந்த தினேஷ் கார்த்திக் உடன் இணைந்துள்ளார். ஐ.பி.எல். கிரிக்கெட்டில் டக் அவுட் ஆனவர்கள், ரோகித் சர்மா (இன்றைய போட்டியுடன்) – 17 முறை, தினேஷ் கார்த்திக் – 17 முறை, கிளென் மேக்ஸ்வெல் – 15 முறை, பியூஷ் சாவ்லா – 15 முறை, மந்தீப் சிங் – 15 முறை, சுனில் நரைன் – 15 முறை. 

_________________________________________________________

டி20 உலகக்கோப்பை: ஸ்டோக்ஸ் விலகல்

இங்கிலாந்து அணியின் ஆல்ரவுண்டரும், டெஸ்ட் கேப்டனுமான பென் ஸ்டோக்ஸ் முழு உடல் தகுதி பெறவும், டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு முன்னுரிமை அளிக்கும் விதமாகவும் தற்போது நடைபெற்றுவரும் ஐ.பி.எல். மற்றும் ஜூன் மாதம் நடைபெறவுள்ள டி20 உலகக் கோப்பை தொடர்களில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். கடந்த இரண்டு ஆண்டுகளாக உடற்தகுதி பிரச்சினையால் போராடி வருகிறார் பென் ஸ்டோக்ஸ். சமீபத்தில் நடந்துமுடிந்த இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பென் ஸ்டோக்ஸ் இங்கிலாந்து அணியை வழிநடத்தினார். இந்த டெஸ்ட் தொடருக்கு முன்னதாகதான் முழங்கால் அறுவை சிகிச்சை செய்துகொண்டார் பென் ஸ்டோக்ஸ்.

முழங்கால் பிரச்சினையால் சில காலமாக பந்துவீசுவதை தவிர்த்து வரும் அவர், இந்தியாவுக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஒரே ஒரு போட்டியில் மட்டுமே பந்துவீசினார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில்தான் தனது பந்துவீச்சு திறனை மேம்படுத்தும் நோக்கிலும், டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு முன்னுரிமை அளிக்கும் நோக்கிலும் ஐ.பி.எல். மற்றும் டி20 உலகக் கோப்பை தொடர்களில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இங்கிலாந்து டி20 கிரிக்கெட் அணியை இம்முறை ஜோஸ் பட்லர் வழிநடத்தவுள்ளார். அணியில் பென் ஸ்டோக்ஸ் இல்லாதது நிச்சயமாக இங்கிலாந்துக்கு ஒரு பெரிய அடியாகும். ஏனென்றால், கடந்த 2022 டி20 உலகக் கோப்பையை இங்கிலாந்து வெல்ல முக்கிய காரணமாக இருந்தவர் பென் ஸ்டோக்ஸ் என்பது குறிப்பிடத்தக்கது.

_________________________________________________________

புவனேஸ்வர் குமார் சாதனை சமன் 

ஐ.பி.எல். தொடரின் 14-வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ்- ராஜஸ்தான் ராய்ல்ஸ் அணி மோதுகிறது. இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி மும்பை அணியின் தொடக்க ஆட்டகாரர்களாக ரோகித்- இஷான் கிஷன் களமிறங்கினர். ராஜஸ்தான் அணி சார்பாக முதல் ஓவரை ட்ரெண்ட் போல்ட் வீசினார். 4-வது பந்தில் இஷான் 1 ரன் எடுத்தார். ஓவரின் 5-வது பந்தையும் தனது முதல் பந்தையும் சந்தித்த ரோகித் டக் அவுட் ஆனார். அடுத்த வந்த நமனும் 0 ரன்னில் அவுட் ஆனார்.

முதல் ஓவரில் 2 விக்கெட்டுகளை வீழ்த்திய போல்ட் அவர் வீசிய 2-வது ஓவரில் ப்ரீவிஸ் விக்கெட்டை வீழ்த்தினார். ஆக மொத்தம் பவர் பிளேயில் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன் மூலம் முதல் ஓவரில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர் என்ற சாதனையை போல்ட் படைத்துள்ளார். போல்ட் 80 போட்டிகளில் 25 விக்கெட்டுகளை வீத்தியுள்ளார். 2-வது இடத்தில் புவனேஸ்வர் குமார் உள்ளார். இவர் 116 போட்டிகளில் 25 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

_________________________________________________________

தமிழக வீரர், வீராங்கனைகளுக்கு வரவேற்பு

இந்தியாவின் பாரம்பரிய விளையாட்டான அட்யா பட்யா ஆசிய சாம்பியன்ஷிப் போட்டியில் தங்க பதக்கங்கள் வென்ற தமிழக வீரர்,  வீராங்கனைகளுக்கு சென்னையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.  நேபாளத்தின் தலைநகர் காத்மாண்டுவில் கடந்த மார்ச் மாதம் 28ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை ஆசிய அளவிளான முதலாவது அட்யா பட்யா சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றது.  இதில் நேபாளம்,  ஆப்கானிஸ்தான்,  பூட்டான், வங்கதேசம்,  இந்தியா, மியான்மர்,  இலங்கை மற்றும் பாகிஸ்தான் ஆகிய 8 நாடுகளைச் சேர்ந்தவீரர்கள், வீராங்கனைகள் பங்கேற்றனர்.

இதில் இந்தியா சார்பாக பங்கேற்ற தமிழ்நாடு வீரர் முகமது ரிஸ்வான் மற்றும் வீராங்கனைகள் பிரியதர்ஷினி,  ஸ்ரீமதி ஆகியோர் தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்தனர்.  இதையடுத்து பதக்கங்கள் வென்ற வீராங்கனைகள் சென்னை திரும்பினர்.  அவர்களை சென்னை விமான நிலையத்தில் பெற்றோர்கள்,  உறவினர்கள் மாலை அணிவித்து பூங்கொத்து கொடுத்து உற்சாக வரவேற்பளித்தனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து