முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தைவானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: 4 பேர் பலி: பீதியில் சாலைகளில் தஞ்சமடைந்த மக்கள்

புதன்கிழமை, 3 ஏப்ரல் 2024      உலகம்
Taiwan 2024-04-03

தைபே, தைவானை நேற்று காலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் தாக்கியது. அந்நாட்டின் கிழக்கு கடற்கரை பகுதியில் உள்ள ஹூவாலியன் நகரத்தில் 7.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவானது. 

நிலநடுக்கம் 35 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்தது. இதனால் கட்டிடங்கள் பயங்கரமாக குலுங்கின. ஹூவாலியன் பகுதியில் அடுக்குமாடி கட்டிடங்கள் இடிந்தன. தலைநகர் தைபேயில், பழைய கட்டிடங்கள், புதிய அலுவலகங்கள் சேதம் அடைந்தன. 

பயங்கர நிலநடுக்கத்தால் பீதியடைந்த பொதுமக்கள் வீடுகளில் இருந்து வெளியேறி சாலைக்கு ஓடிவந்தனர். பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது. நிலநடுக்கத்தால் பாலங்கள் குலுங்கின. அதில் சென்ற வாகன ஓட்டிகள் வாகனங்களை நிறுத்தியபடி நின்றனர்.

சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் நாடு முழுவதிலும் ரயில் சேவைகள் நிறுத்தப்பட்டன. நிலநடுக்கத்தை தொடர்ந்து 25 முறை நிலஅதிர்வுகள் பதிவானது. இதனால் தைவான் முழுவதும் பெரும் பதற்றம் நிலவியது. 

நிலநடுக்கத்தில் 4 பேர் பலியாகி இருப்பதாகவும், 50 பேர் காயம் அடைந்ததாகவும் முதற்கட்ட தகவல் வெளியாகி இருக்கிறது. ஹூவாலியன் நகரில் இடிந்து விழுந்த இரண்டு கட்டிடங்களில் சிலர் சிக்கி உள்ளதாக தீயணைப்புத் துறை தெரிவித்துள்ளது. அவர்களை மீட்கும் பணிகள் நடந்தது. 

பயங்கர நிலநடுக்கத்தால் தைவானின் வடக்கு பகுதி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.அங்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதால் மக்கள் தவிப்புக்குள்ளாகி இருக்கிறார்கள். 80 ஆயிரம் வீடுகளில் மின்சாரம் இல்லை. 

இந்த நிலநடுக்கத்தால் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. தைவான், ஜப்பான், பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது. இதில் ஜப்பானின் தெற்கு தீவை சிறிய சுனாமி அலைகள் தாக்கியதாக தகவல் வெளியாகி உள்ளது. 

ஜப்பானின் யோனகுனி கடலோரத்தில் சில அடி உயரத்திற்கு அலைகள் எழும்பின. பிலிப்பைன்சின் டானஸ், ககாயன், இலோ கோஸ் நோர்டே, இசபெலா மாகாணங்களில் உள்ள கடலோர பகுதிகளை சுனாமி தாக்கும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

அதே நேரத்தில் சீனாவுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்படவில்லை. ஆனால் சீனாவின் ஷாங்காய், புஜோ, ஜியாமென், குவான்சோ, நிங்டே நகரங்களில் அதிர்வு உணரப்பட்டது. தைவான் நிலநடுக்கம் எதிரொலியாக, ஜப்பானின் ஒகிராவில் விமான சேவை நிறுத்தப்பட்டுள்ளது.

தைவானில் நிலநடுக்கம் ஏற்பட்டபோது மெட்ரோ ரயில் குலுங்கியபடி சென்ற வீடியோ வலைதளங்களில் பரவி வருகிறது. 

தைவானில்  கடந்த 1999-ம் ஆண்டு 7.2 என்ற அளவில் ஏற்பட்ட நிலநடுக்கமே, தைவானில் அதிகபட்சமாக ஏற்பட்ட நிலநடுக்கமாகும். இந்த நிலநடுக்கத்தில் 2500-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருந்தனர். நிலநடுக்கம் அதிகம் ஏற்படும் பசிபிக் ரிங் ஆப் பயர் பகுதியில் தைவான் அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து