முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

2 நாள் பயணமாக மத்திய அமைச்சர் அமித்ஷா இன்று மதுரை வருகை

புதன்கிழமை, 3 ஏப்ரல் 2024      தமிழகம்
amit-shah 1

Source: provided

மதுரை : 2 நாள் பயணமாக மத்திய அமைச்சர் அமித்ஷா இன்று மதுரை வருகிறார். 

தமிழகத்தில் ஒரே கட்டமாக வருகிற 19-ம் தேதி பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலுக்கு 2 வாரங்களே உள்ளதால் அரசியல் கட்சியினர் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழகத்தில் தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜ.க. இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. 

இந்த நிலையில் பா.ஜ.க.வின் முக்கிய தலைவர்களுள் ஒருவான உள்துறை அமைச்சர் அமித்ஷா, பா.ஜ.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து இன்று மற்றும் நாளை தமிழகத்தில் சுற்றுப்பயணம் செய்கிறார். இன்று (4-ம் தேதி) டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் 3.45 மணிக்கு மதுரை வரும் அமித்ஷா அங்கிருந்த ஹெலிகாப்டரில் தேனி செல்கிறார். 

அங்கு போட்டியிடும் கூட்டணி கட்சி வேட்பாளரான டி.டி.வி.தினகரனை ஆதரித்து அமித்ஷா பிரச்சாரம் செய்கிறார். அப்போது அவர் ரோடுஷோ நடத்தி பொதுமக்களை சந்தித்து வாக்கு கேட்கிறார். மாலை 6.45 மணிக்கு மதுரை திரும்பும் அவர் பழங்காநத்தம் பகுதி சந்திப்பில் நடைபெற உள்ள பிரமாண்ட பா.ஜ.க. பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு வாக்கு சேகரிக்கிறார். 

இதையொட்டி அங்கு பிரம்மாண்ட மேடை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. அந்த பகுதி முழுவதும் போலீசாரின் பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.பொதுக்கூட்டம் முடிந்ததும் மதுரை தொகுதி வாக்குச்சாவடி பொறுப்பாளர்களையும் சந்தித்து அமித்ஷா ஆலோசனை நடத்துகிறார். 

பின்னர் இரவு பசுமலையில் உள்ள தனியார் நட்சத்திர ஓட்டலில் அவர்  தங்குகிறார். மறுநாள் (5-ம் தேதி) காலையில் மீனாட்சி அம்மன் கோவில் தரிசனம் செய்யும் அமித்ஷா, பின்னர் மதுரை விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டரில் தென்காசி சென்று கூட்டணி கட்சி வேட்பாளர் ஜான் பாண்டியனுக்கு ஆதரவு திரட்டுகிறார். அங்கும் ரோடு ஷோவில் அமித்ஷா பங்கேற்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதையடுத்து ஹெலிகாப்டரில் ராமநாதபுரம் செல்லும் அமித்ஷா ஓ.பன்னீர் செல்வத்திற்கு ஆதரவு திரட்டும் வகையில் ரோடுஷோ நடத்துகிறார். அதன்பின் மதுரை திரும்பும் அவர் விமானம் மூலம் டெல்லிக்கு புறப்பட்டு செல்கிறார்.   

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து