முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அம்பேத்கர் பிறந்தநாளில் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி ஏற்போம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிக்கை

சனிக்கிழமை, 13 ஏப்ரல் 2024      தமிழகம்
Stalin 2021 11 29

சென்னை, அம்பேத்கர் பிறந்தநாளான ஏப்ரல் 14-ல் தமிழகத்தில் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி ஏற்போம் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அண்ணல் அம்பேத்கர் அவர்கள் 1891-ஆம் ஆண்டு ஏப்ரல் திங்கள் 14-ஆம் நாள் மராட்டிய மாநிலத்தில் பிறந்தவர். இளமையிலேயே கல்வியில் சிறந்து விளங்கிய அம்பேத்கர், பரோடா மன்னர் உதவியுடன் அமெரிக்கா சென்று உயர்கல்வி பயின்றார். உயர் கல்விக்காக வெளிநாட்டிற்குச் சென்ற முதல் இந்தியர் என்ற பெருமை அண்ணல் அம்பேத்கருக்கு உண்டு.

தாழ்த்தப்பட்ட சமுதாயத்தில் பிறந்த அண்ணல் அம்பேத்கர் பிறந்த சாதி காரணமாக இழைக்கப்பட்ட பல்வேறு கொடுமைகளுக்கும் அவமானத்திற்கும் ஆளானவர். அதன் காரணமாக, தீண்டாமைக் கொடுமையை எதிர்த்துக் கடுமையாகப் போராடியவர். பல்லாயிரக் கணக்கானவர்களுடன் இந்து சமயத்தை துறந்து புத்த சமயத்தைத் தழுவியவர்.

பொருளாதாரம், அரசியல், வரலாறு, தத்துவம், சட்டம் ஆகிய துறைகளில் சிறந்து விளங்கியவர். ஆசிரியர், இதழாளர், எழுத்தாளர், சமூக நீதிப் புரட்சியாளர் எனப் பன்முகத்திறன்களைப் பெற்றவர். இந்திய அரசியல் அமைப்புச் சாசனத்தின் வரைவுக் குழுத் தலைவராக விளங்கிய மிகப்பெரிய சட்ட மேதை அம்பேத்கர். நாடு சுதந்திரம் அடைந்த பின், பிரதமர் நேரு அமைச்சரவையில் இந்தியாவின் முதல் சட்ட அமைச்சராகவும் திகழ்ந்தவர்.

அண்ணல் அம்பேத்கரின் புகழைப் போற்றும் வகையில் வியாசர்பாடி அரசுக் கலைக் கல்லூரிக்கு அம்பேத்கர் அரசுக் கலைக் கல்லூரி என்றும், சென்னை சட்டக் கல்லூரிக்கு அம்பேத்கர் சட்டக் கல்லூரி என்றும், புதிதாக உருவாக்கப்பட்ட சட்டப் பல்கலைக்கழகத்திற்கு அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் என்றும் பெயர் சூட்டியதுடன், சென்னை இராஜா அண்ணாமலைபுரத்தில் அண்ணல் அம்பேத்கர் மணிமண்டபம் அமைத்து, அதில் அவர் சிலையையும் நிறுவி அம்பேத்கரைப் போற்றியுள்ளது தி.மு.க. அரசு

சாதி-சமய வேறுபாடுகளை ஒழிப்பதில் அடையாளச் சின்னமாக விளங்கிய அண்ணல் அம்பேத்கர் பிறந்த திருநாளான ஏப்ரல் 14-ஆம் நாளை, "சமத்துவ நாள்" என அறிவித்துள்ளோம். அந்நாளில் தமிழ்நாடு முழுவதும் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி ஏற்போம் ! அண்ணல் அம்பேத்கர் அவர்களைப் போற்றி வழியில் சமத்துவ சமுதாயத்தை உருவாக்கிட அனைவரும் பாடுபடுவோம்.!. என்று அவர் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து