முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழகத்தின் வளர்ச்சிக்காக கடந்த 10 ஆண்டுகளில் ரூ. 10.76 லட்சம் கோடி வழங்கியதாக கூறுவது பா.ஜ.க.வின் பொய்க்கணக்கு : முதல்வர் ஸ்டாலின் டுவிட்டரில் கண்டனம்

ஞாயிற்றுக்கிழமை, 14 ஏப்ரல் 2024      தமிழகம்
Stalin 2020 07-18

Source: provided

சென்னை : கடந்த பத்தாண்டுகளில் தமிழகத்தின் வளர்ச்சிக்காக 10.76 லட்சம் கோடி ரூபாயை அள்ளிக்கொடுத்ததாம் மத்திய பா.ஜ.க அரசு. இது அப்பட்டமான பொய்க்கணக்கு. எத்தனை பொய்களைத்தான் நாடு தாங்கும்? எங்கள் காதுகள் பாவமில்லையா என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

இது தொடர்பாக தமிழக முதல்வர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது, 

கடந்த பத்தாண்டுகளில் தமிழகத்தின் வளர்ச்சிக்காக 10.76 லட்சம் கோடி ரூபாயை அள்ளிக்கொடுத்ததாம் மத்திய பா.ஜ.க. அரசு. இது அப்பட்டமான பொய்க்கணக்கு. இதில் இரண்டு கூறுகள் உள்ளன.

மத்திய அரசு மாநில அரசுக்கு நேரடியாக வழங்கும் நிதி. மத்திய நிதிக் குழுவின் பரிந்துரையின்படி, மத்திய அரசு மாநில அரசுகளுக்கு அளிக்க வேண்டிய நிதிப் பகிர்வையும், திட்டங்களுக்காக மாநில அரசுகளுக்கு வழங்கப்பட வேண்டிய நிதியையும் உள்ளடக்கியது இது. 

இதன்கீழ் உத்தர பிரதேசத்துக்கு 18.5 லட்சம் கோடி ரூபாயை அள்ளிக் கொடுத்த பா.ஜ.க. அரசு, பல லட்சம் கோடி ரூபாயை வரியாகப் பெற்ற தமிழகத்துக்கு கிள்ளிக் கொடுத்ததோ 5.5 லட்சம் கோடி ரூபாய் மட்டுமே.

மத்திய அரசு ஒரு மாநிலத்தில் நேரடியாக செயல்படுத்தக் கூடிய திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு. இதில் பா.ஜ.க. காட்டியுள்ள பொய்க்கணக்குகள் என்னென்ன தெரியுமா? இன்னும் ஒற்றைச் செங்கல் கூட எடுத்து வைக்கப்படாத மதுரை எய்ம்ஸ்க்கு 1,960 கோடி. 

ஒரு ரூபாய் கூட நிதி விடுவிக்கப்படாத சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்டப் பணிகளுக்கு 63,246 கோடி. சாகர்மாலா திட்டத்துக்கு 2 லட்சம் கோடி என்று ஒட்டுமொத்தத் தமிழ் மக்கள் காதிலும் பூச்சுற்ற நினைக்கிறது பா.ஜ.க. அரசு.

இந்தத் திட்டங்களின்கீழ் கடந்த பத்து ஆண்டுகளில் தமிழகத்தில் செலவழிக்கப்பட்டுள்ள நிதி எவ்வளவு, விடுவிக்கப்பட்டுள்ள நிதி எவ்வளவு என்பதை எந்த பா.ஜ.க. அமைச்சர்களாவது விளக்க முன்வருவார்களா? 

இவற்றுக்கெல்லாம் மகுடம் வைத்தாற்போல் எடுத்து விடப்பட்டுள்ள அநியாயப் பொய் அடுத்தது.  தம் உழைப்பாலும் தொழில் திறத்தாலும் தமிழகத்தின் தொழில் வளர்ச்சிக்கு வித்திட்டுள்ள தமிழகத்தின் சிறுதொழில் முனைவோர்கள் வங்கிகளில் வாங்கி, திருப்பிச் செலுத்த வேண்டிய 2.5 லட்சம் கோடி ரூபாய் கடன்கள் அனைத்தையும் தாராளமாக நிதி வழங்கியது போல கூறிக் கொள்கிறது மத்திய பா.ஜ.க. அரசு. 

எத்தனை பொய்களைத்தான் நாடு தாங்கும்? எங்கள் காதுகள் பாவமில்லையா. இவ்வாறு அந்த பதிவில் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து