முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சிவில் சர்வீஸ் தேர்வு முடிவுகள் வெளியீடு : முதல் 3 இடங்களில் ஆண்கள்

செவ்வாய்க்கிழமை, 16 ஏப்ரல் 2024      இந்தியா
UPSC 2023-05-23

Source: provided

புதுடெல்லி : மத்திய அரசின் பணியாளர் தேர்வு வாரியம் நடத்திய சிவில் சர்வீஸ் தேர்வின் இறுதி முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன. இதில் முதல் 3 இடங்களை ஆண்கள் பிடித்து உள்ளனர். 

மத்திய அரசில் ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் உள்ளிட்ட குடிமைப் பணிகளில் பணியாற்றும் நபர்களைத் தேர்வு செய்ய மத்திய பணியாளர் ஆணையம் யு.பி.எஸ்.சி. தேர்வுகளை நடத்தும். 

அதன்படி கடந்தாண்டு குரூப் ஏ மற்றும் குரூப் பி பணியிடங்களுக்கான தேர்வை யு.பி.எஸ்.சி நிர்வாகம் நடத்தியது. இதில் குடிமைப் பணிகளுக்கு மொத்தம் மூன்று வகையான தேர்வுகள் நடத்தப்படும். அதில் தேர்வானவர்களுக்கு மார்க் அடிப்படையில் பணிகள் ஒதுக்கப்படும். 

கடந்த மே 28-ம் தேதி முதல்நிலை தேர்வுகள் நடத்தப்பட்ட நிலையில், அதில் தேர்ச்சி பெற்றவர்களுக்குக் கடந்தாண்டு செப் 15-ல் தொடங்கி 5 நாட்கள் முதன்மை தேர்வு நடத்தப்பட்டது. தொடர்ந்து அதில் தேர்வானவர்களுக்குக் கடந்த ஜனவரி 4 முதல் 9 வரை நேர்காணல் நடத்தப்பட்டது. 

இந்த யு.பி.எஸ்.சி. தேர்வுக்கான முடிவுகள் நேற்று வெளியாகி இருக்கிறது. இதில் மொத்தம் 1016 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அவர்கள் ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ், இந்திய வெளியுறவுப் பணி, மத்தியப் பணிகள் குரூப் ஏ மற்றும் குரூப் பி ஆகிய பணிகளுக்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ளனர். 

தேர்வானவர்களில் மொத்தம் 347 பொதுப் பிரிவைச் சேர்ந்தவர்கள் ஆவர். இந்த பட்டியலில் 116 பேர் பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவைச் சேர்ந்தவர்களாக இருக்கும் நிலையில் ஓ.பி.சி. பிரிவில் இருந்து 303 பேரும், எஸ்.சி. பிரிவில் இருந்து 165 பேரும், எஸ்.டி. பிரிவில் இருந்து 86 தேர்வாகியுள்ளனர். 

இதில் ஆதித்ய ஸ்ரீவஸ்தவா என்பவர் முதல் இடத்தை பிடித்துள்ளார். அனிமேஷ் பிரதான் 2-வது இடத்தை பிடித்துள்ள நிலையில், டோனூரு அனன்யா ரெட்டி 3-வது இடத்தையும், பி.கே. சித்தார்த் ராம்குமார் 4-வது இடத்தையும் பிடித்துள்ளார். 

மேலும் ருஹானி என்பவர் 5-வது இடத்தை பிடித்துள்ளார். இது தவிர சிருஷ்டி தபஸ், அன்மோல் ரத்தோர், ஆஷிஷ் குமார், நௌஷீன், ஐஸ்வர்யம் பிரஜாபதி ஆகியோர் 6 முதல் 10 இடங்களை பிடித்துள்ளனர்.  இந்த தேர்வில்  தேர்ச்சி பெற்றவர்களை பல்வேறு துறைகளில் பணியில் அமர்த்த யு.பி.எஸ்.சி. பரிந்துரை செய்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து