முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தேர்தலுக்காக மக்களை ஏமாற்றி வாக்குகள் வாங்க வருகிறார் : பிரதமர் மோடி மீது உதயநிதி தாக்கு

செவ்வாய்க்கிழமை, 16 ஏப்ரல் 2024      தமிழகம்
Udhayanidhi-2024-03-30

Source: provided

ஈரோடு : தேர்தலுக்காக மக்களை ஏமாற்றி வாக்குகள் வாங்க வருகிறார் பிரதமர் மோடி என்று ஈரோடு பாராளுமன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளருக்கு ஆதரவாக பிரச்சாரம் மேற்கொண்ட அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார். 

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று ஈரோடு பாராளுமன்ற தொகுதி மொடக்குறிச்சி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஒத்தக்கடையில் தி.மு.க வேட்பாளர் கே.இ.பிரகாசுக்கு ஆதரவாக உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். அப்போது திறந்த வேனில் பொதுமக்கள் மத்தியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது,

வரும் 19-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. வாக்கு பதிவு பெட்டியில் 3-வது இடத்தில் நமது உதயசூரியன் சின்னம் உள்ளது. ஆனால் ஜூன் 4-ம் தேதி நாம் முதலிடத்திற்கு வர வேண்டும். நீங்கள் போடும் ஓட்டு மோடிக்கு வைக்கும் வேட்டு ஆகும். 

இங்கு மஞ்சள் ஆராய்ச்சி மையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. சோலார் பகுதியில் ரூ.60 கோடி மதிப்பில் புதிய பஸ் நிலையம் அமைக்கும் பணி நடந்து வருகிறது. சோலாரில் உலகத்தரம் மிக்க விளையாட்டு அரங்கம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இன்னும் எண்ணற்ற பணிகள் இந்த பகுதியில் நடந்து வருகிறது. 

இண்டியா கூட்டணி வெற்றி பெற்றால் கியாஸ் சிலிண்டர் மானியத்துடன் ரூ. 500-க்கு வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்கள். பா.ஜ.க.வுடன் 4 வருடங்கள் கூட்டணியில் இருந்து விட்டு தமிழகத்தின்  உரிமைகள், மொழி, நிதி, கல்வி ஆகிய உரிமையை எடப்பாடி பழனிசாமி விட்டு கொடுத்தார். இப்படி தமிழ்நாட்டின் உரிமைகளை மத்திய அரசிடம் அடகு வைத்து விட்டார். 

கலைஞர் இருந்த போது நீட் தமிழகத்திற்கு வரவில்லை. பிறகு ஜெயலலிதா இருந்த வரை நீட் தேர்வு வரவில்லை. ஆனால் எடப்பாடி பழனிசாமி பா.ஜ.க.விற்கு பயந்து நீட் தேர்வை தமிழகத்தில் கொண்டு வந்து விட்டார். 

தி.மு.க. ஆட்சி வந்த பிறகு நீட் தேர்வு ரத்து செய்ய சட்ட ரீதியான போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. பிரதமர் மோடி 10 ஆண்டுகளில் தமிழகம் வராமல் இப்போது தமிழகத்தை சுற்றி சுற்றி வருகிறார். தேர்தலுக்காக மக்களை ஏமாற்றி வாக்குகள் வாங்க வருகிறார். இவ்வாறு அவர் பேசினார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து