முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தேர்தல் பிரச்சாரம் நிறைவடைந்த பின் விதிகளை மீறினால் 2 ஆண்டு சிறை: சத்யபிரதா சாகு அறிவிப்பு

செவ்வாய்க்கிழமை, 16 ஏப்ரல் 2024      தமிழகம்
Sahu 2023-10-27

சென்னை, தேர்தல் பிரச்சாரம் நிறைவடைந்த பின் தேர்தல் விதிகளை மீறினால் 2 ஆண்டு சிறை, அபராதம் விதிக்கப்படும் என்று தமிழக தலைமை  தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு அறிவித்துள்ளார். 

பாராளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் வரும் 19-ம் தேதி தொடங்கி ஜூன் 1-ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. தமிழகத்தில் 39 தொகுதிகள், புதுச்சேரி என மொத்தம் 40 தொகுதிகளிலும் வரும் 19-ம் தேதி ஒரேகட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் ஜூன் 4-ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

தமிழகத்தில் தி.மு.க. கூட்டணி, அ.தி.மு.க. கூட்டணி, பா.ஜ.க. கூட்டணி, நாம் தமிழர் என 4 முனைப்போட்டி ஏற்பட்டுள்ளது. தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் கட்சி தலைவர்கள் அனல் பறக்கும் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவடைகிறது. 

இந்நிலையில், தேர்தல் பிரச்சாரம் நிறைவடைந்த பின் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு அறிவித்துள்ளார். இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

பிரச்சாரம் நிறைவடைந்த பின், தேர்தல் தொடர்பான பொதுக்கூட்டம், ஊர்வலம் நடத்தக் கூடாது. தொலைக்காட்சி, ரேடியோ, சமூக வலைதளங்களில் தேர்தல் பிரச்சாரம் செய்யக் கூடாது.தேர்தல் விதிகளை மீறினால் 2 ஆண்டு சிறை, அபராதம் விதிக்கப்படும்.

வாக்காளர் அல்லாதவர்கள் இன்று மாலை 6 மணிக்குள் தொகுதியில் இருந்து வெளியேற வேண்டும். தங்கும் விடுதிகள், விருந்தினர் இல்லம் உள்ளிட்ட இடங்களில் வெளியாட்கள் யாரும் தங்கக் கூடாது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து