முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மேக்ஸ்வெல் திடீர் விலகல்

செவ்வாய்க்கிழமை, 16 ஏப்ரல் 2024      விளையாட்டு
Maxwell 2023-11-08

Source: provided

ஐதரபாத் அணிக்கு எதிரான போட்டியில் மேக்ஸ்வெல் விளையாடவில்லை.  கட்டை விரல் காயம் காரணமாக நேற்று அவர் ஆடவில்லை என்றே நம்பப்பட்டது. ஆனால், தனக்கு பிரேக் தேவைப்படுவதாக டு பிளெசிஸிடம் கேட்டதாக மேக்ஸ்வேல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக மேக்ஸ்வெல் கூறியதாவது:- "நான் கடந்த போட்டி முடிந்தவுடனேயே நேராக டு பிளெசியிடமும் பயிற்சியாளர்களிடமும் சென்று எனக்கு பதில் வேறு வீரரை ஆடவைப்பதற்கான தருணம் இது என்றேன். எனக்கு கடந்த காலத்திலும் இப்படி நடந்துள்ளது. 

எனவே, எனக்கு உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் இடைவேளை தேவை என்பதை உணர்ந்தேன். மீண்டும் இந்த ஐபிஎல் தொடரில் வாய்ப்புக் கிடைக்குமானால் அதற்குள் நான் என் உடல் மற்றும் மன நிலையை திடப்படுத்திக் கொள்வேன்" என்று கூறியுள்ளார். மேக்ஸ்வெல் இப்படி கூறியிருப்பதால் அடுத்து வரும் போட்டிகளில் அவர் ஓய்வில் இருக்கப்போவது உறுதியாகியுள்ளது. மேலும், 35-வயதான மேக்ஸ்வெல்லுக்கு இதுவே கடைசி ஐபிஎல் தொடராகக் கூட இருக்கலாம் என்று சொல்லப்படுவதால் அவரது ரசிகர்கள் கவலை அடைந்துள்ளனர். 

____________________________________________________

பெங்களூரு மோசமான சாதனை 

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - சன்ரைசர்ஸ் ஐதரபாத் மோதின. இந்த ஆட்டத்தில் பெங்களூரு அணியின் பந்துவீச்சை ஐதராபாத் அணியை சேர்ந்த பேட்ஸ்மேன்கள் அனைவரும் 20 ஓவர்கள் வரை விடாது வெளுத்து வாங்கினர். சிறப்பாக பந்துவீசினார் என்று ஒருவரை கூட சொல்ல முடியாத அளவுக்கு அனைவரும் எதிரணிக்கு ரன்களை வாரி வழங்கும் வள்ளலாகவே திகழ்ந்தனர். 

அத்துடன் 20 ஓவர் கிரிக்கெட்டில் பந்துவீச்சில் மோசமான சாதனை ஒன்றையும் தன்வசப்படுத்தியுள்ளனர். அதாவது, பெங்களூரு அணியில் வேகப்பந்து வீச்சாளர்கள் டாப்லே (68 ரன்), யாஷ் தயாள் (51 ரன்), பெர்குசன் (52 ரன்), விஜய்குமார் வைசாக் (64 ரன்) ஆகியோர் ரன்களை விட்டுக்கொடுத்துள்ளனர். 20 ஓவர் போட்டிகளில் ஒரு இன்னிங்சில் 4 பவுலர்கள் 50 ரன்களுக்கு மேல் விட்டுக்கொடுத்தது இதுவே முதல் முறையாகும். 

____________________________________________________

ஆர்.சி.பி. பயிற்சியாளர் கருத்து

ஐபிஎல் தொடரில் இனி விளையாடும் ஒவ்வொரு போட்டியும் எங்களுக்கு அரையிறுதியைப் போன்றது என ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் பயிற்சியாளர் ஆண்டி ஃபிளவர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் பேசியதாவது: இனிவரும் ஒவ்வொரு போட்டியும் எங்களுக்கு அரையிறுதியைப் போன்றது. 

ஆனால், போட்டியில் மிகுந்த வலிமையோடு எப்படி திரும்ப வருவது என்பது குறித்து நாங்கள் சிந்திக்க வேண்டும். சன் ரைசர்ஸுக்கு எதிரான போட்டி எங்களுக்கு கடுமையாக அமைந்தது. தினேஷ் கார்த்திக் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார் என்றார். ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு வருகிற ஏப்ரல் 21 ஆம் தேதி தனது அடுத்தப் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்கொள்வது குறிப்பிடத்தக்கது.

____________________________________________________

மும்பை அணிக்கு அறிவுரை

நடப்பு ஐ.பி.எல் தொடரில் சென்னை அணிக்கு எதிராக கடந்த 14ம் தேதி சொந்த மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் முப்பை அணி தோல்வியை தழுவியது. அந்த அணியில் பும்ராவை தவிர மற்ற பந்துவீச்சாளர்கள் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தவில்லை. இந்நிலையில் மும்பை அணியின் பந்துவீச்சு துறை குறித்து பேசியுள்ள வெஸ்ட் இண்டீஸ் முன்னாள் வீரர் பிரையன் லாரா கூறியதாவது, நாம் மும்பை இந்தியன்ஸ் அணியை பார்க்க வேண்டும். இங்கே பலரும் அவர்களை கோப்பையை வெல்லக்கூடிய அணியாக வைத்திருக்கின்றனர். அதற்கான காரணம் என்னவெனில் அவர்கள் நன்றாக பேட்டிங் செய்கின்றனர். கடந்த 2 போட்டியில் 230 ரன்கள் அடித்த அவர்கள் 196 ரன்களை வெறும் 15 ஓவரில் சேசிங் செய்து மிகவும் எளிதாக வென்றனர்.

அதனால் இந்த போட்டியில் (சென்னைக்கு எதிராக) அவர்கள் வெல்வார்கள் என்று நாம் கணித்தோம். ஆனால் அவர்களுடைய பவுலிங் சுமாராக உள்ளது. பும்ராவை தவிர்த்து இந்த பவுலிங் கூட்டணியில் யாருமே அவர்களுக்கு ஆதரவு கொடுக்கவில்லை. அதை சி.எஸ்.கே பேட்ஸ்மேன்கள் எடுத்துக்கொண்டனர். சில டாட் பந்துகளை வீசி மும்பை அழுத்தும் கொடுக்கும் என்று நாம் நினைத்தோம். ஆனால் அவர்கள் அதை செய்யவில்லை. பாண்ட்யாவுக்கு மோசமான போட்டியாக அமைந்தது. கடைசிக்கட்ட ஓவர்களில் பந்து வீசிய அவருக்கு எதிராக (தோனி) மாஸ்டர் 3 சிக்ஸர்கள் அடித்தார். எனவே மும்பை வெற்றி பெறுவதற்கு 2 - 3 மேட்ச் வின்னிங் பவுலர்களை கண்டறிய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து