முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருச்சூரில் கோலாகலமாக நடந்த பூரம் திருவிழா: குடை மாற்றும் நிகழ்வை கண்டுகளித்த பக்தர்கள்

சனிக்கிழமை, 20 ஏப்ரல் 2024      ஆன்மிகம்
Karala 2024-04-20

திருச்சூர், திருச்சூரில் பூரம் திருவிழா கோலாகலமாக நடந்தது. இந்நிகழ்வில் குடை மாற்றும் நிகழ்ச்சியை ஏராளமான பக்தர்கள் கண்டுகளித்தனர். 

கேரள மாநிலம் திருச்சூரில் ஆண்டுதோறும் பூரம் திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம்.  இது திருவம்பாடி கோவில், பாரம்மேகாவு கோவில் சார்பில், தேக்கின்காடு மைதானத்தில் நடைபெற்று வருகிறது. 

இந்த ஆண்டு திருவிழா கடந்த சில நாட்களுக்கு முன்பு கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி தினமும் சிறப்பு வழிபாடு நடந்து வந்தது. மேலும் பட்டம் அணிவிக்கப்பட்ட யானைகள் மீது சுவாமி வீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. 

கடந்த 18-ம் தேதி இரவு 7 மணிக்கு வாண வேடிக்கை நடந்தது. இதில் 2 கோவில் தரப்பில் போட்டி போட்டு பட்டாசுகளை வெடித்தனர். திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான பூரம் திருவிழா நேற்று முன்தினம் நடைபெற்றது. 

இதையொட்டி அதிகாலை 4 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. தொடர்ந்து மாலை 4 மணிக்கு யானைகளுக்கு பட்டம் அணிவிக்கப்பட்டு, குடை மாற்ற நிகழ்ச்சி நடைபெற்றது. 

பின்னர் எதிர் எதிரே தலா 16 யானைகள் அணிவகுத்து வந்தன. அதில் ஒரு யானை மீது சுவாமி வீதி உலா வந்தார். வடக்கு நாதர் கோவில் மேற்கு நடை பகுதியில் 300 கலைஞர்கள் நின்று மேள வாத்தியங்களை இசைத்தனர். செண்டை மேள கச்சேரி நடந்தது.

சுவாமி எழுந்தருளிப்பு நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். அவர்கள் குடை மாற்றும் நிகழ்ச்சியை பார்வையிட்டனர். இது கண்களுக்கு விருந்தாக அமைந்தது. இதில் சுற்றுலா பயணிகளும் பங்கேற்றனர். 

அலங்கரிக்கப்பட்ட யானைகளின் அணிவகுப்பு, இரவில் நடந்த வாணவேடிக்கையால் திருச்சூரே விழா கோலம் பூண்டிருந்தது. விழாவை முன்னிட்டு நகர் முழுவதும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து