முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் கேட்டவருக்கு ரூ.75,000 அபராதம் : டெல்லி ஐகோர்ட்டில் பொதுநல மனு தள்ளுபடி

திங்கட்கிழமை, 22 ஏப்ரல் 2024      இந்தியா
Delhi-High-Court 2023 04 12

Source: provided

புதுடெல்லி : கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் வழங்க கோரி மனு தாக்கல் செய்தவருக்கு ரூ. 75 ஆயிரம் அபராதம் விதித்த டெல்லி ஐகோர்ட் அவரது பொதுநல மனுவையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. 

மதுபானக் கொள்கை முறைகேடு வழக்குடன் தொடர்புடைய பண மோசடி வழக்கில் டெல்லி முதல்வர்  கெஜ்ரிவால் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். 

அமலாக்கத்துறை கைது செய்யப்பட்டதை எதிர்த்து டெல்லி ஐகோர்ட்டில் அரவிந்த் கெஜ்ரிவால் தாக்கல் செய்திருந்த மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கக்கோரி சட்ட மாணவர் ஒருவர், வழக்கறிஞர் கரண்பால் சிங் மூலம் டெல்லி ஐகோர்ட்டில் பொதுநல மனு தாக்கல் செய்தார். 

நாங்கள் இந்திய மக்கள் என்ற பெயரில் தாக்கல் செய்யப்பட்டிருந்த அந்த மனுவில், அனைத்து குற்ற வழக்குகளிலும் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் வழங்க வேண்டும் என கூறியிருந்தார். 

கெஜ்ரிவாலை அவரது பதவிக்காலம் மற்றும் விசாரணை முடியும் வரை நிலுவையில் உள்ள அமலாக்கத்துறை மற்றும் சி.பி.ஐ.யால் பதிவு செய்யப்பட்ட அனைத்து கிரிமினல் வழக்குகளிலும் அசாதாரண இடைக்கால ஜாமீனில் விடுவிக்க மனுவில்  கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நேற்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. தற்காலிக தலைமை நீதிபதி மன்மோகன் மற்றும் நீதிபதி மன்மீத் பிரீதம் சிங் அரோரா ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. 

அப்போது, மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் வாதாடும் போது, சிறையில் கடுமையான குற்றவாளிகளுடன் கெஜ்ரிவால் அடைத்து வைக்கப்பட்டுள்ளதால் அவருக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பதாகவும், அதனால் இடைக்கால ஜாமீன் வழங்குமாறும்  கேட்டுக்கொண்டார். 

ஆனால், கெஜ்ரிவால் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ராகுல் மெஹ்ரா வாதிடும் போது, மனுதாரரின் கோரிக்கைகள் முற்றிலும் அனுமதிக்கப்பட முடியாதவை என்று கூறினார். 

சம்பந்தப்பட்ட நபர் (கெஜ்ரிவால்) விரும்பினால், ஜாமீன் பெறுவதற்கான முயற்சிகளை மேற்கொள்வார். அப்படியிருக்கையில் அவருக்காக மனு தாக்கல் செய்ய இவர் யார்? இது ஒரு விளம்பர நோக்கம் கொண்ட வழக்கு, முற்றிலும் தவறானது என்றும் மெஹ்ரா குறிப்பிட்டார்.

கெஜ்ரிவாலுக்கு உங்கள் உதவி எதுவும் தேவையில்லை. அவர் திருப்தியாக இருக்கிறார். அவருக்கு உதவ நீங்கள் யார்?  உங்கள் உதவி தனக்குத் தேவையில்லை என்று அவர் கூறுகிறார். அதை விட்டு விடுங்கள் என நீதிபதிகள் தெரிவித்தனர்.

அப்போது, முக்கிய முடிவுகளை எடுக்கும் அதிகாரம் கொண்ட கெஜ்ரிவால் இல்லாததால் கடந்த ஒரு மாதமாக அரசுப் பணிகள் பாதிக்கப்பட்டு, மக்கள் அவதிப்படுவதாக மனுதாரரின் வழக்கறிஞர் தெரிவித்தார். 

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், இந்த மனு விசாரணைக்கு உகந்தது அல்ல எனக்கூறி தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். மேலும், மனுதாரருக்கு ரூ.75,000 அபராதம் விதித்து உத்தரவிட்டனர்.

ஆம் ஆத்மி கட்சி தலைவர் கெஜ்ரிவால், தனது சட்டப்பூர்வ தீர்வுகளை பெறுவதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். அதற்கான வழிமுறைகள் அவருக்கு இருக்கின்றன. கெஜ்ரிவால் சார்பாக மனு தாக்கல் செய்ய மனுதாரருக்கு எந்த அதிகாரமும் இல்லை. 

மனுதாரர் சட்டக் கல்லூரியில் வகுப்புகளுக்கு செல்கிறாரா? அவர் சட்டக் கொள்கைகளைப் பின்பற்றவில்லை என்று இதிலிருந்து தெரிகிறது என்றும் நீதிபதிகள் கூறினர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து