முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சிறை தண்டனையை நிறுத்தி வைக்க முடியாது: முன்னாள் டி.ஜி.பி. ராஜேஷ் தாஸ் உடனே சரணடைய சென்னை ஐகோர்ட் உத்தரவு

செவ்வாய்க்கிழமை, 23 ஏப்ரல் 2024      தமிழகம்
chennai-high-court 2022-08-29

சென்னை, பெணுக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில்,  முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் உடனடியாக சரணடைய  சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

கடந்த 2021-ம் ஆண்டு பெண் எஸ்.பி.க்கு பாலியல் தொல்லை அளித்தது தொடர்பாக, முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ்தாஸ்க்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து விழுப்புரம் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை, விழுப்புரம் முதன்மை அமர்வு நீதிமன்றம் கடந்த பிப்ரவரி மாதம் 12-ம் தேதி உறுதி செய்தது.

இந்நிலையில், தனக்கு விதிக்கப்பட்ட தண்டனையை நிறுத்தி வைக்க வேண்டும் எனவும், சரணடைவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் எனவும் கோரி ராஜேஷ் தாஸ் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு நீதிபதி எம்.தண்டபானி முன்பு ஏப்ரல் 15-ம் தேதி விசாரணைக்கு வந்தது.

அப்போது, ராஜேஷ் தாஸ் தரப்பில், பல ஆண்டுகளாக காவல்துறைக்கு தலைமை பொறுப்பு வகித்த நிலையில், சிறைக்கு சென்றால் அது தனக்கு மிகப்பெரிய இழப்பை ஏற்படுத்தும் எனவும், சிறையில் அடைக்கப்பட்ட பிறகு மேல் முறையீட்டில் ஒருவேளை தான் விடுதலை செய்யப்பட்டால் என்ன ஆகும்? எனவும் வாதிடப்பட்டது.

இதனை கேட்ட நீதிபதி, முதலில் சரணடைந்து விட்டு பின்னர் ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்தால், அது குறித்து பரிசீலிக்கலாம் என கூறினார். பெண் அதிகாரிக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில் இரு நீதிமன்றங்களால் தண்டிக்கப்பட்ட நபருக்கு எப்படி சலுகை காட்ட முடியும்? எனவும் கேள்வி எழுப்பிய நீதிபதி, தண்டனையை நிறுத்தி வைக்கக் கோரும் மனு மீதான காவல்துறையின் நிலைப்பாடு என்ன? கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்த கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் ஆர்.முனியப்பராஜ், தண்டனையை நிறுத்தி வைக்கக் கூடாது எனவும் ராஜேஷ் தாஸ்க்கு எதிரான குற்றச்சாட்டுகளுக்கு போதிய ஆதாரங்கள் உள்ளதாகவும் தெரிவித்தார். மேலும், மனு குறித்து பதில் அளிக்க அவகாசம் வேண்டுமென கேட்டுக் கொண்டார். இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி, காவல்துறை பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை தள்ளிவைத்தார்.

இந்நிலையில், நேற்று விசாரணைக்கு வந்த இந்த வழக்கில், 3 ஆண்டு சிறை தண்டனையை நிறுத்தி வைக்க முடியாது எனக் கூறி,  உடனடியாக அவர் சரணடைய வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து