முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சீனாவுக்கு உளவு வேலை: தந்தை, மகனுக்கு தைவானில் 8 ஆண்டுகள் சிறை தண்டனை

புதன்கிழமை, 24 ஏப்ரல் 2024      உலகம்
Jail-1

தைபே, சீனாவுக்கு உளவு வேலை பார்த்த குற்றச்சாட்டின் பேரில் தந்தை மற்றும் மகன் என இருவருக்கும் தலா 8 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது.  

இதுபற்றி தைவான் நாட்டின் சி.என்.ஏ. என்ற செய்தி நிறுவனம் வெளியிட்டு உள்ள செய்தியில், இந்த வழக்கு தைவான் ஐகோர்ட்டின் தைனன் பிரிவில் விசாரணைக்கு வந்தது. இதில், இரண்டு பேரின் கடைசி பெயர் ஹுவாங் என அடையாளம் காணப்பட்டு உள்ளது.  

அவர்கள் இருவரும் குற்றம் நடந்துள்ளது என கோர்ட்டில் ஒப்பு கொண்டுள்ளனர். 2015-ம் ஆண்டில் சீனாவின் ஜியாமென் நகரில் இவர்கள் இருவரும் வர்த்தகம் ஒன்றை தொடங்கி நடத்தி வந்துள்ளனர்.  அப்போது சீன உளவு பிரிவு அதிகாரியிடம் அவர்கள் அறிமுகம் செய்து வைக்கப்பட்டனர்.  

அவர், இவர்களிடம் தைவானில் உளவு நெட்வொர்க் ஒன்றை அமைக்க உதவும்படி கேட்டுள்ளார். இந்த நெட்வொர்க்கின் நோக்கம் ஆனது, தைவான் நாட்டின் ராணுவ அதிகாரிகளை பணிக்கு அமர்த்துவது மற்றும் அதன்படி, ராணுவ ரகசிய தகவல்களை பெறுவது ஆகும்.  

இதற்காக இந்த இருவருக்கும் நிதி சார்ந்த ஊக்க தொகைகள் கிடைக்கும் என ஆசை காட்டியுள்ளனர் என விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதன் பின்னர், இந்த இருவரும் விமான படை அதிகாரிகளான யே மற்றும் சூ ஆகிய இருவரை சந்தித்து பேசி, அவர்களின் ஒத்துழைப்பை பெற்றுள்ளனர்.  

சீன உளவு பிரிவு அதிகாரிகளை வெளிநாட்டில் வைத்து, இரு அதிகாரிகளும் சந்திப்பதற்கு ஏற்பாடுகளையும் செய்துள்ளனர். எனினும், இந்த சந்திப்பு நடந்த இடம் பற்றி எதனையும் கோர்ட்டு வெளியிடவில்லை.  இதனை தொடர்ந்து, தைவானின் வருடாந்திர ராணுவ பயிற்சி பற்றிய 8 ரகசிய ஆவணங்களை இந்த குழுவினர் பெற்றுள்ளனர்.

இவற்றை சீனாவுக்கு தனிப்பட்ட முறையில் வழங்கவோ அல்லது மொபைல் போனில் இருந்து தகவல் செயலிகளின் வழியே சீன அதிகாரிகளுக்கு அனுப்பவோ திட்டமிடப்பட்டது தெரிய வந்துள்ளது. 

இதற்காக சீன அதிகாரிகளிடம் இருந்து தந்தை, மகன் இருவரும் மொத்தம் ரூ.43.71 லட்சம் பணம் பெற்றுள்ளனர்.  இதுதவிர, யே மற்றும் சூ இருவரும் முறையே ரூ.5.3 லட்சம் மற்றும் ரூ.2.5 லட்சம் தொகையை பெற்றிருக்கின்றனர். இந்த வழக்கில் அரசு அதிகாரிகளாக இருந்து லஞ்சம் பெற்ற குற்றத்திற்காக, இரண்டு அதிகாரிகளுக்கும் 7 மற்றும் 6 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது.  

அவர்கள் இருவரும் 5 ஆண்டுகள் அரசு பணிகளில் ஈடுபடவும் தடை விதிக்கப்படும்.  எனினும் இந்த வழக்கில் மேல்முறையீடு செய்வதற்கான வாய்ப்பும் எஞ்சியுள்ளது என்று அந்த செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து