முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சென்னை குடிநீர் வாரியத்துக்கு விதிக்கப்பட்ட ரூ. 96.10 கோடி ஜி.எஸ்.டி. வரியை ரத்து செய்து ஐகோர்ட் உத்தரவு

சனிக்கிழமை, 18 மே 2024      தமிழகம்
chennai-high-court 2022-08-29

Source: provided

 சென்னை : சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை லாரிகள் மூலம் விற்பனை செய்த வகையில் ரூ. 96.10 கோடியை ஜி.எஸ்.டி. வரியாக செலுத்த சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்துக்கு மத்திய ஜி.எஸ்.டி கூடுதல் ஆணையர் பிறப்பித்த உத்தரவை ஐகோர்ட் ரத்து செய்துள்ளது.

சென்னை மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை லாரிகள் மூலம் விற்பனை செய்ததால் கிடைத்த வருவாய்க்கு 18 சதவீதம் ஜி.எஸ்.டி. வரியாக செலுத்த வேண்டும் எனக்கூறி, ரூ. 96.10 கோடியை ஜி.எஸ்.டி. வரியாக செலுத்தக்கூறி சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்துக்கு, கடந்த 2023 டிசம்பரில் மத்திய ஜி.எஸ்.டி. கூடுதல் ஆணையர் உத்தரவிட்டிருந்தார்.

இந்த உத்தரவை எதிர்த்து சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியம் சார்பில் ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி முன்பாக விசாரணைக்கு வந்த போது, ஜி.எஸ்.டி. வரம்பில் இருந்து அரசு நிறுவனம் வழங்கும் சேவைக்கு விலக்களித்து கடந்த 2017-ம் ஆண்டு மத்திய நிதி அமைச்சகம் அறிவிப்பாணை வெளியிட்டுள்ளதாகவும், குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியம் அரசு நிறுவனம் என்பதால், அந்த நிறுவனம் வழங்கும் சேவைக்கு ஜி.எஸ்.டி. வரியில் இருந்து அளிக்கப்பட்டுள்ள விலக்கு பொருந்தும் என குடிநீர் வழங்கல் வாரியம் சார்பில் வாதிடப்பட்டது

ஆனால் குழாய் மூலமாக சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை வர்த்தக நிறுவனங்களுக்கும், தொழில் நிறுவனங்களுக்கும் லாரிகள் மூலமாக விற்பனை செய்வதால் ஜி.எஸ்.டி. வரி வரம்புக்குள் வரும் என்றும், எனவே இதுதொடர்பாக பிறப்பிக்கப்பட்ட நோட்டீசில் எந்த விதிமீறலும் இல்லை ஜி.எஸ்.டி. ஆணையம் தரப்பில் வாதிடப்பட்டது.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, இவ்வாறு வரி செலுத்தக் கோரி உத்தரவு பிறப்பிக்கும் முன்பாக சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தின் விளக்கத்தை கோரவில்லை. வெறும் குடிநீர் விநியோகிக்கப்பட்டதா அல்லது சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் விற்பனை செய்யப்பட்டதா என்பதை தெளிவுபடுத்தாமல் வரி செலுத்தும்படி கோர முடியாது என்பதால் ஜி.எஸ்.டி. கூடுதல் ஆணையர் பிறப்பித்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது.

அதேசமயம் ரூ. 3 கோடியை சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியம் 6 வாரங்களில் ஜி.எஸ்.டி ஆணையத்துக்கு செலுத்த வேண்டும். அந்த தொகையை செலுத்திய 3 மாதங்களில் குடிநீர் வாரியத்துக்கு உரிய வாய்ப்பு வழங்கி புதிதாக உத்தரவு பிறப்பி்க்க வேண்டும் என ஜி.எஸ்.டி. ஆணையரகத்துக்கு நீதிபதி உத்தரவிட்டார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து