முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஐதராபாத்தை எளிதில் வீழ்த்தி ஐ.பி.எல். இறுதி போட்டிக்கு முன்னேறியது கொல்கத்தா

புதன்கிழமை, 22 மே 2024      விளையாட்டு
Kolkata-team 2024-05-22

Source: provided

அகமதாபாத் : ஐதராபாத் அணிக்கு எதிரான குவாலிபயர் போட்டியில், கொல்கத்தா அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று, முதல் அணியாக ஐபிஎல் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.

முதல் குவாலிபயர்... 

இந்தியாவில் நடைபெற்று வரும் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளன. முதல் குவாலிபயர் போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நேற்று முன்தினம் நடைபெற்றது. டாஸ் வென்ற ஐதராபாத் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய அந்த அணியில் ராகுல் திருப்பதி 55 ரன்கள் எடுத்து ரன் அவுட் ஆனார். பின்னர் வந்த வீரர்கள் யாரும் சோபிக்கவில்லை. அந்த அணி 19.3 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 159 ரன்கள் மட்டும் எடுத்தது.

மிச்சல் ஸ்டார்க்... 

கொல்கத்தா அணி சார்பில் சிறப்பாக பந்து வீசிய மிச்சல் ஸ்டார்க் 34 ரன்கள் விட்டுக் கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். வருண் சக்கரவர்த்தி இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தார். இதைத் தொடர்ந்து 160 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி களமிறங்கியது. ரஹ்மானுல்லா குர்பாஸ் 23 ரன்களுடனும், சுனில் நரேன் 21 ரன்களுடனும் ஆட்டமிழந்து வெளியேறினர். அதன்பின்னர் ஜோடி சேர்ந்த வெங்கடேஷ் மற்றும் கேப்டன் ஸ்ரேயாஸ் ஆகியோர் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

ஆட்டநாயகனாக... 

வெங்கடேஷ் 51 ரன்களுடனும், ஸ்ரேயாஸ் 58 ரன்களுடனும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர். இதன் மூலம் 13.4 அவர் முடிவில் அந்த அணி 164 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இதன் மூலம் முதல் அணியாக ஐபிஎல் இறுதிப் போட்டிக்கு கொல்கத்தா அணி தகுதி பெற்றுள்ளது. சிறப்பாக பந்து வீசிய அந்த அணியின் மிச்சல் ஸ்டார்க் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். நேற்று நடைபெற்ற எலிமினேட்டர் போட்டியில், ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி, அடுத்து இரண்டாவது குவாலிபயர் போட்டியில் நாளை (வருகிற 24-ம் தேதி) ஐதராபாத் அணியை எதிர்கொள்ள உள்ளது.

ஸ்ரேயாஸ் புதிய மைல்கல்

இந்த போட்டியில் கொல்கத்தா கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் அரைசதம் அடித்ததன் மூலம் டோனி, ரோகித் சர்மா, டேவிட் வார்னர் ஆகியோரின் சாதனை ஒன்றை சமன் செய்துள்ளார். அதாவது, ஐ.பி.எல் தொடரின் பிளே ஆப் சுற்றில் கேப்டனாக அதிக அரைசதங்கள் அடித்தவர்கள் பட்டியலில் டோனி, ரோகித் சர்மா, டேவிட் வார்னர் ஆகியோரின் சாதனையை ஸ்ரேயாஸ் சமன் செய்துள்ளார். ஐ.பி.எல் தொடரின் பிளே ஆப் சுற்றில் கேப்டனாக அதிக அரைசதங்கள் அடித்தவர்கள் பட்டியல்; டோனி - 2, ரோகித் - 2, வார்னர் - 2, ஸ்ரேயாஸ் - 2.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து