முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

குஜராத்தில் 10 தொகுதிகளில் நிச்சயம் வெற்றி பெறுவோம்: காங்கிரஸ் கட்சி நம்பிக்கை

புதன்கிழமை, 22 மே 2024      இந்தியா
Mukul-Wasnik-2024-05-22

காந்திநகர், இந்தியாவில் அரசியல் மாற்றத்துக்கான அலை வீசுவதாகவும், இதனால் குஜராத் மாநிலத்தில் மட்டும் 10 தொகுதிகளில் காங்கிரஸ் வெல்லும் என்றும், அக்கட்சியின் குஜராத் மாநிலப் பொறுப்பாளரான முகுல் வாஸ்னிக் தெரிவித்தார்.

பாஜகவின் வாக்கு வங்கி அதிகமிருக்கும் மாநிலங்களில் உத்தரபிரதேசத்தை முந்திக்கொண்டு குஜராத் முதன்மை வகிக்கிறது. பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரை, தேசியளவிலான ஆளும்கட்சி மற்றும் ஆட்சிக்கு தந்ததில் குஜராத் மக்களுக்கு தனிப் பெருமிதம் உண்டு. இந்த வகையில் கடந்த 2019 மக்களவைத் தேர்தலில், குஜராத்தின் மொத்தமுள்ள 26 தொகுதிகளிலும் பாஜக வென்றது குறிப்பிடத்தக்கது.

நடப்பு 2024 மக்களவைத் தேர்தலில், குஜராத்தின் 26 மக்களவைத் தொகுதிகளில் 25 இடங்களுக்கு மே 7 அன்று தேர்தல் நடைபெற்றது. எஞ்சிய சூரத் தொகுதியில் பாஜக வேட்பாளர் முகேஷ் தலால் போட்டியின்றி வெற்றி பெற்றதாகத் தேர்தலுக்கு முன்பே அறிவிக்கப்பட்டது. குஜராத்தில் இன்டியா கூட்டணி சார்பில், காங்கிரஸ் 23 இடங்களில் போட்டியிட்டது; ஆம் ஆத்மி கட்சி தனது வேட்பாளர்களை இரண்டு இடங்களில் நிறுத்தியது. இந்த முறையும் 2019 தேர்தல் முடிவுகளையொட்டி அனைத்து தொகுதிகளில் வெல்வோம் என்றும் பாஜக பெரு நம்பிக்கையில் காத்துள்ளது.

ஆனால் காங்கிரஸ் கட்சியின் குஜராத் பொறுப்பாளரான முகுல் வாஸ்னிக், பாஜகவின் குஜராத் கணக்கு இம்முறை எடுபடாது என அடித்துச் சொல்கிறார். அகமதாபாத்தில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த அவர், குஜராத்தின் தேர்தல் நிலவரத்தை வேறாக முன்னிறுத்தினார். “நாடு எங்கும் மாற்றத்துக்கான அலை வீசுவதைக் காணலாம். அது குஜராத்திலும் எதிரொலித்துள்ளது. எனவே மக்கள் ஆதரவுடன் 10 இடங்களுக்கு மேல் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை உள்ளது” என்று வாஸ்னிக் கூறினார். "கடந்த 10 ஆண்டுகளில் மக்கள் தவறாக வழிநடத்தப்பட்ட விதம் அரசாங்கத்தின் மீது ஒரு வகையான வெறுப்பை உருவாக்கியுள்ளது. இது தேர்தல் முடிவுகளில் வெகுவாய் பிரதிபலிக்கும்" என்றும் அவர் கூறினார். 

பாஜகவுக்கு எதிரான ராஜ்புத்ரர்கள் போராட்டம், ஆம் ஆத்மியின் எழுச்சி, மாநிலத்திலும், மத்தியிலுமாக தொடர்ந்து ஆட்சி நடத்தும் பாஜகவுக்கு எதிரான அதிருப்தி ஓட்டுகள் ஆகியவற்றை காங்கிரஸ் நம்பியுள்ளது. 10 தொகுதிகளில் காங்கிரஸ் வெல்வதற்கான வாய்ப்பில்லை என்ற போதும், பாஜக தனது முந்தைய வெற்றியை தக்கவைத்துக்கொள்வதிலும், அதற்கு சென்ற முறையின் பெருவாரி வாக்கு வித்தியாசத்திலான வெற்றிக்கு சாத்தியமில்லை என்ற நம்பிக்கையிலும் ஜூன் 4 தேர்தல் முடிவுகளுக்காக காங்கிரஸ் காத்துக்கிடக்கிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து