முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அரையிறுதியில் பி.வி.சிந்து

வெள்ளிக்கிழமை, 24 மே 2024      விளையாட்டு
24-Ram-58-3

Source: provided

மலேசியா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் தொடரின் 2-வது சுற்றில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து, சீனாவைச் சேர்ந்த ஹான் ஹூவை எதிர்கொண்டார். இதில் உலகத் தரவரிசையில் 15-வது இடத்தில் இருக்கும் பி.வி.சிந்து 21-13 என முதல் செட்டை கைப்பற்றினார். இதற்கு பதிலடியாக ஹான் ஹூ 21-14 என 2-வது செட்டை வென்றார். வெற்றியாளரை நிர்ணயிக்கும் 3-வது செட்டை பி.வி.சிந்து 21-12 என கைப்பற்றியதுடன், அரையிறுதி சுற்றுக்கும் முன்னேறி அசத்தினார். மற்றொரு இந்திய வீராங்கனை அஷ்மிதா சலியா காலிறுதிச்சுற்றில் தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறினார்.

தினேஷ் குறித்து கோலி

தினேஷ் கார்த்திக் உடனான தனது நட்பு குறித்து இந்திய அணியின் விராட் கோலி மனம் திறந்துள்ளார். தினேஷ் கார்த்திக் மிகவும் நேர்மையானவர் எனவும், தனது கடினமான காலங்களில் ஊக்கமளித்துள்ளார் எனவும் விராட் கோலி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் பேசியதாவது: ஆடுகளத்துக்கு வெளியே தினேஷ் கார்த்திக்குடன் நிறைய சுவாரசியமான உரையாடல்களை மேற்கொண்டுள்ளேன். அவர் சிறந்த மனிதர். கிரிக்கெட் மட்டுமின்றி பல விஷயங்கள் குறித்தும் அவருக்கு மிகுந்த அறிவு இருக்கிறது. தினேஷ் கார்த்திக்குடன் பேசுவது எப்போதும் மகிழ்ச்சியளிப்பதாக இருக்கும்.

கடந்த 2022 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடர் எனக்கு சிறப்பானதாக அமையவில்லை. நம்பிக்கையின்றி நான் தடுமாறினேன். தினேஷ் கார்த்திக் எனக்கு அருகில் அமர்ந்து, எனது தடுமாற்றம் தொடர்பாக எனக்கு தெரியாதவற்றை விளக்கமாக எடுத்துக் கூறினார். அவரது வார்த்தைகள் எனக்கு ஊக்கமளித்தது. தினேஷ் கார்த்திக் மிகச் சிறந்த வீரர். அவரது எதிர்கால பயணங்களுக்கு எனது வாழ்த்துகள் என்றார். ஐபிஎல் தொடரில் இதுவரை 257 போட்டிகளில் விளையாடியுள்ள தினேஷ் கார்த்திக் 4842 ரன்கள் குவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தீபிகா பல்லிகல் வருத்தம் 

தினேஷ் கார்த்திக் ஐ.பி.எல். தொடரில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்ததை அடுத்து சக வீரர்கள், ரசிகர்கள் அனைவரும் அவரைக் கவுரவித்து வழியனுப்பினர். இந்நிலையில், தினேஷ் கார்த்திக் ஐ.பி.எல். தொடரில் இருந்து ஓய்வு பெற்றதை அடுத்து ஆர்சிபி அணி எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில், அணி வீரர் விராட் கோலி, பயிற்சியாளர் சங்கர் பாசு, தினேக் கார்த்திக் மனைவி தீபிகா பல்லிகல் ஆகியோர் தங்களது எமோஷனலை பகிர்ந்துள்ளனர்.

தினேஷ் கார்த்திக் குறித்து அவரது மனைவியும் ஸ்குவாஷ் வீராங்கனையான தீபிகா பல்லிகல் கூறியிருப்பதாவது:- தினேஷ் கார்த்திக்கின் மன உறுதியால் ஈர்க்கப்பட்டேன். கார்த்திக் தன்னைத்தானே மீண்டும் கண்டுபிடித்துக்கொண்டிருக்கிறார். அனைவராலும் விரும்பப்படும் ஒரு கிரிக்கெட் வீரரை நீங்கள் அடிக்கடி காண முடியாது. கார்த்திக் விளையாட்டிலிருந்து ஓய்வு பெறுவதால், தன்னுடனும் அவர்களது குழந்தைகளுடனும் அதிக நேரம் செலவிடுவார். என்னுடைய வற்புறுத்தலால் அவர் இந்த முடிவை எடுத்துள்ளார் என்றார்.

அரையிறுதியில் ஜோகோவிச்

ஜெனீவா ஓபன் டென்னிஸ் தொடர் சுவிட்சர்லாந்தில் நடைபெற்று வருகிறது. நேற்று நடந்த காலிறுயில் செர்பியாவின் ஜோகோவிச், நெதர்லாந்தின் டாலன் கிரீக்ஸ்பூருடன் மோதினார். இதில் ஜோகோவிச் 7-5, 6-1 என்ற நேர் செட்களில் வென்று அரையிறுதிக்கு முன்னேறினார். இதேபோல், நார்வேயின் கேஸ்பர் ரூட், அர்ஜென்டினாவின் செபாஸ்டியனுடன் மோதினார். இதில் ரூட் 6-3, 3-6, 6-4 என்ற செட்கணக்கில் வென்று அரையிறுதிக்கு முன்னேறினார்.

கோலி ஓய்வு குறித்து வாகன்

இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் விராட் கோலி ஓய்வு குறித்து பேசியிருக்கிறார். இது தொடர்பாக அவர் கூறியதாவது, இங்கிலாந்து மற்றும் இந்திய அணிகளுக்கு இடையே நடைபெற்ற 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் போது, விராட் கோலி அதிலிருந்து விலகி, லண்டனில் சாதாரண ஒரு வாழ்க்கையை நடத்தினார் என்று நினைக்கிறேன். அந்த வாழ்க்கை அவருக்கு பிடித்திருக்கிறது. ஓய்வுக்குப் பிறகு அவர் அப்படியான ஒரு அமைதியான வாழ்க்கையை வாழ நினைப்பார்.

விராட் கோலி ஓய்வு பெறுவதைப் பற்றி நீங்கள் எல்லாம் பேசிக் கொண்டிருக்கிறீர்கள். ஆனால் அவர் தற்போதைய ஐ.பி.எல் சீசனில் மிகச் சிறப்பாக விளையாடி 700-க்கும் மேற்பட்ட ரன்கள் எடுத்திருக்கிறார். மேலும் இதன் அடிப்படையில் பார்த்தால் அவர் பல ஆண்டுகள் விளையாடுவதற்கு தகுதியோடு இருக்கிறார். ஆனால் இன்னும் இரண்டு மூன்று, ஆண்டுகள் ஆகும் பொழுது நிலைமைகள் மாறும். அப்பொழுது அவர் தனது குடும்பத்துடன் நேரத்தை செலவிட விரும்புவார்.  விராட் கோலி களத்தில் வெளிப்படுத்தும் ஆற்றலை நான் விரும்புகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து