முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

6-ம் கட்ட தேர்தல் : 58 பார்லி. தொகுதிகளில் விறுவிறு வாக்குப்பதிவு

சனிக்கிழமை, 25 மே 2024      இந்தியா
Election 2024-03-29

Source: provided

புதுடெல்லி : 6 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்களில் உள்ள 58 தொகுதிகளுக்கு நேற்று 6ம் கட்ட பாராளுமன்ற மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்றது. ஒடிசாவில் 42 சட்டசபை தொகுதிகளுக்கும் தேர்தல் நடந்தது.

7 கட்டங்களாக...

இந்தியா முழுவதும் 543 பாராளுமன்ற தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வருகிறது. முதற்கட்ட தேர்தல் (102) கடந்த மாதம் 19-ம் தேதியும், 2ம் கட்ட தேர்தல் (88) கடந்த மாதம் 26-ம் தேதியும், கடந்த 7-ம் தேதி 3ம் கட்ட தேர்தலும் (93), கடந்த 13-ம் தேதி 4ம் கட்ட தேர்தலும் (96), கடந்த 20-ம் தேதி 5ம் கட்ட வாக்குப்பதிவும் (49) நடைபெற்றது. இதையடுத்து 6ம் கட்ட வாக்குப்பதிவு நேற்று (மே 25)நடைபெற்றது.  7-ம் கட்ட வாக்குப்பதிவு ஜூன் 1-ம் தேதியும் நடைபெறுகின்றன. தேர்தலில் பதிவான வாக்குகள் ஜூன் 4-ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. 

6 மாநிலங்களில்...

இதன்படி, 6வத் கட்ட வாக்குப்பதிவு பீகார் (8), ஜார்கண்ட் (4), ஜம்மு காஷ்மீர் (1), ஒடிசா (6), உத்தரப்பிரதேசம் (14), மேற்கு வங்கம் (8), ஹரியானா (10) மற்றும் டெல்லி (7) ஆகிய 6 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்களில் உள்ள 58 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. முன்னதாக நேற்று நடந்த 6-வது கட்ட வாக்குப்பதிவில் 889 வேட்பாளர்கள் களத்தில் இருந்தனர். இவர்களைத் தேர்ந்தெடுக்க 5.48 கோடி ஆண் வாக்காளர்கள், 5.29 கோடி பெண் வாக்காளர்கள் மற்றும் 5,120 மூன்றாம் பாலின வாக்காளர்கள் என மொத்தம் 11.13 கோடி வாக்காளர்கள் வாக்களித்தனர். இதற்காக 1.14 லட்சம் வாக்குச்சாவடிகள் குடிநீர், கழிப்பறை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் உடன் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தன.

2 யூனியன் பிரதேசம்...

பீகாரில் வால்மீகி நகர், வைஷாலி உள்பட 8 மக்களவைத் தொகுதிகள், ஹரியானாவில் அம்பாலா, ஹிசார், சோனிபட் உள்பட 10 தொகுதிகள், ஜார்கண்டில் ராஞ்சி மற்றும் ஜாம்ஷெத்பூர் உள்ளிட்ட 4 தொகுதிகளிலும் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. அதேபோல், ஒடிசாவில் சம்பல்பூர், கட்டாக் உள்ளிட்ட 6 தொகுதிகள், உத்தரபிரதேசத்தில் அம்பேத்கர் நகர், சரஸ்வதி உள்பட 14 தொகுதிகள், மேற்கு வங்கத்தில் பங்குரா உள்பட 8 தொகுதிகள், டெல்லியில் உள்ள அனைத்து 7 தொகுதிகளிலும் வாக்குப்பதிவு நடைபெற்றது. மேலும், ஜம்மு மற்றும் மற்றும் காஷ்மீரின் அனந்த்நாக்-ரஜோரி தொகுதியிலும் வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்த தொகுதியில் மெஹபூபா முப்தி போட்டியிடுகிறார்.

நீண்ட வரிசையில்...

இந்நிலையில், நேற்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில் மக்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்தனர். வாக்குப்பதிவு மாலை 6 மணியுடன் நிறைவடைந்தது. அனைத்து தொகுதிகளிலும் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்றது. ஒருசில வாக்குச்சாவடிகளில் வாக்காளர்கள் இருப்பதால் அவர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு வாக்களிக்க அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதேவேளை, வாக்குப்பதிவு நிறைவடைந்த நிலையில் வாக்குப்பதிவு எந்திரங்கள் சீல் வைக்கப்பட்டு வாக்கு எண்ணும் மையங்களுக்கு பாதுகாப்பாக அனுப்பி வைக்கும் நடவடிக்கையில் அதிகாரிகள் ஈடுபட்டனர். 

மேற்குவங்காளத்தில்...

மேற்குவங்காளம் தவிர பெரும்பாலும் தேர்தல் அமைதியாக நடந்து முடிந்தது. வாக்குப்பதிவை முன்னிட்டு காவல்துறையினர் மற்றும் துணை ராணுவப்படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். மேலும், பதற்றமான வாக்குச்சாவடிகளில் கூடுதல் பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டிருந்தனர். 

முக்கிய பிரமுகர்கள்....

நேற்று நடைபெற்ற தேர்தலில் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு, குடியரசுத் துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர், தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார், டெல்லி முதல்வர் கெஜ்ரிவால், டெல்லி அமைச்சர் அதிஷி, காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி, முன்னாள் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் , காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி, ஆம் ஆத்மி எம்பி- ஸ்வாதி மலிவால், ஹரியானா மாநில முன்னாள் துணை முதல்வர் துஷ்யந்த் சௌதாலா, பாஜக புது டெல்லி வேட்பாளர் பன்சுரி ஸ்வராஜ், மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் வாக்களித்தது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து