முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் 210 பேர் பலி : 4 பிணைக் கைதிகளும் மீட்பு

ஞாயிற்றுக்கிழமை, 9 ஜூன் 2024      உலகம்
Gaza 2024-05-09

Source: provided

காசா : ஹமாஸ் அமைப்பினரால் கடத்தி செல்லப்பட்ட பிணைக் கைதிகளில் ஒரு பெண் உள்பட 4 பேரை இஸ்ரேல் ராணுவம் மீட்டுள்ளது. இந்த மீட்பு நடவடிக்கையின் போது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 210 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டதாக ஹமாஸ் அமைப்பினர் தெரிவித்து உள்ளனர்.

பாலஸ்தீனத்தின் காசா முனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினர் கடந்த ஆண்டு அக்டோபர் 7-ம் தேதி இஸ்ரேலுக்குள் புகுந்து தாக்குதல் நடத்தினர். இதில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியானார்கள். 

மேலும் 250-க்கும் மேற்பட்ட இஸ்ரேலியர் களை பிணைக் கைதிகளாக ஹமாஸ் அமைப்பினர் பிடித்து சென்றனர். இதையடுத்து காசா மீது இஸ்ரேல் போர் தொடுத்து தாக்குதல் நடத்தி வருகிறது. 

இதில் காசாவில் 36 ஆயி ரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். சில மாதங்களுக்கு முன்பு ஏற்பட்ட போர் நிறுத்தத்தின்போது 100-க்கும் மேற்பட்ட பிணைக் கைதிகளை ஹமாஸ் அமைப்பினர் விடுவித்தனர்.

இன்னும் அவர்களிடம் 120 பிணைக் கைதிகள் உள்ளனர். அவர்களை மீட்க இஸ்ரேல் ராணுவம் நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த நிலையில் ஹமாஸ் அமைப்பினரால் கடத்தி செல்லப்பட்ட பிணைக் கைதிகளில் ஒரு பெண் உள்பட 4 பேரை இஸ்ரேல் ராணுவம் அதிரடியாக நேற்று முன்தினம் மீட்டது. 

காசா முனையில் உள்ள நுசைரத் முகாமில் கடத்தி வைக்கப்பட்டிருந்த பிணைக் கைதிகளை இஸ்ரேல் சிறப்புப் படையினர் மீட்டனர். இந்த மீட்பு நடவடிக்கையின் போது இஸ்ரேலிய சிறப்புப் படை வீரர் ஒருவர் உயிரிழந்தார். 

மீட்கப்பட்ட பிணைக் கைதிகள் நோவா அர்காமனி, மெயிர்ஜன், ஆண்ட்ரே, ஷால்மி சிவ் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. இவர்கள் அனைவரும் இசை விழாவில் இருந்து கடத்தி செல்லப்பட்டவர்கள் ஆவர். அவர்கள் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர். 4 பேரும் நல்ல உடல் நிலையில் உள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் பிணைக் கைதிகள் மீட்பு நடவடிக்கையின் போது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 210 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டதாக ஹமாஸ் அமைப்பினர் தெரிவித்து உள்ளனர். 

மத்திய காசாவில் உள்ள நுசிராத் அகதிகள் முகாமில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் 210 பேர் பலியானார்கள். 400-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர் என்று ஹமாசின் அரசாங்க ஊடக அலுவலகம் தெரிவித்து உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து