முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இன்று பாராலிம்பிக் நிறைவு விழா

சனிக்கிழமை, 7 செப்டம்பர் 2024      விளையாட்டு
Paralympic-2024-09-07

மாற்றுத் திறனாளிகளுக்கான 17-வது பாரா ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடந்து வருகிறது. இதில் உலகம் முழுவதும் இருந்து 4,400 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். இந்தியா சார்பில் 32 பெண்கள் உள்பட 84 பேர் கொண்ட அணி பங்கேற்றுள்ளது. கடந்த மாதம் 28-ம் தேதி தொடங்கிய பாரா ஒலிம்பிக் தொடர் இன்று வரை நடைபெறுகிறது.

இந்த தொடரில் இந்தியா இதுவரை 6 தங்கம், 9 வெள்ளி, 12 வெண்கலம் என மொத்தம் 27 பதக்கங்களுடன் பதக்கப்பட்டியலில் இந்தியா 17வது இடத்தில் உள்ளது. இந்நிலையில், இந்த தொடரின் நிறைவு விழா இன்று இரவு அரங்கேறுகிறது. நிறைவு விழா அணிவகுப்பில் இந்திய அணிக்கு தலைமை தாங்கி தேசிய கொடியை வில்வித்தை வீரர் ஹர்விந்தர் சிங் மற்றும் தடகள வீராங்கனை பிரீத்தி பால் ஆகியோர் ஏந்தி செல்வார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான அறிவிப்பை இந்திய குழுவின் தலைவர் சத்யபிரகாஷ் சங்வான் அறிவித்துள்ளார்.

ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி 

8-வது ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி போட்டி சீனாவில் உள்ள ஹூலன்பியர் நகரில் இன்று தொடங்க உள்ளது. இதில் நடப்பு சாம்பியன் இந்தியா, தென்கொரியா, மலேசியா, பாகிஸ்தான், ஜப்பான் மற்றும் போட்டியை நடத்தும் சீனா ஆகிய 6 அணிகள் கலந்து கொள்கின்றன. ரவுண்ட் ராபின் லீக் முறையில் நடைபெறும் இந்த போட்டியில் ஒவ்வொரு அணியும், மற்ற அணியுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்குள் நுழையும்.

இந்த போட்டி தொடரில் இந்திய அணி தனது முதலாவது லீக் ஆட்டத்தில் நாளை சீனாவுடன் மோதுகிறது. 9-ந்தேதி ஜப்பானுடனும், 11-ந் தேதி மலேசியாவுடனும், 12-ந்தேதி தென்கொரியாவுடனும், 14-ந்தேதி பரம எதிரி பாகிஸ்தானுடனும் மோதுகிறது.

40 வயதில் பதக்கம் வென்ற இந்தியர்

பாராலிம்பிக் ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவின் ஹொகடோ செமா குண்டு எறிதலில் வெண்கலம் வென்று அசத்தியுள்ளார். பாரீஸில் நடைபெற்ற பாராலிம்பிக் ஒலிம்பிக் போட்டியில் எஃப்57 பிரிவில் பங்கேற்ற 40 வயதான ஹோகடோ செமா 14.65 மீட்டர் தூரம் குண்டு எறிந்து வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார். இது அவரது அதிகபட்ச சாதனையாகும். இதற்கு முன்பு 13.88 மீட்டர் தூரம் குண்டு எறிந்து கடந்தாண்டு வெண்கல் வென்றிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

நாகாலாந்து மாநிலத்தில் திமாபூரைச் சேர்ந்தவர் ஹோகடோ செமா. 17 வயதில் ராணுவத்தில் சேர்ந்துள்ளார். சிறப்பு பாதுகாப்பு படைப்பிரிவில் சேர ஆசைப்பட்டவர். 2002இல் ஜம்மு காஷ்மீரில் தீவிரவாத தடுப்பு நடவடைக்கையின்போது கண்ணிவெடி வெடித்து தனது இடது காலை இழந்தார். இதனால் அவரது சிறப்பு அதிரடி படையில் சேரமுடியாமல் போனது.  வாழ்க்கையே முடிந்துவிட்டதாக இருந்த வேலையில் தனது சீனியர் அளித்த தன்னம்பிக்கையால் இன்று பாராலிம்பிக்கில் பதக்கம் வென்றிருக்கிறார். 2016இல் தனது 31 வயதில் குண்டு எறிதல் விளையாட்டில் ஈடுபட்டு அதே ஆண்டு தேசிய பாரா தடகள சாம்பியன்ஷிப்பில் கலந்துகொண்டார்.

தொடரை வென்றது ஆஸ்திரேலியா

ஸ்காட்லாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஆடி வருகிறது. முதல் போட்டியில் ஆஸ்திரேலியா வென்று தொடரில் 1-0 என முன்னிலை பெற்றது. இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 2வது டி20 போட்டி நேற்று முன்தினம் நடந்தது. டாஸ் வென்ற ஸ்காட்லாந்து பந்துவீச்சு தேர்வு செய்தது. அதன்படி, முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா 20 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 196 ரன்கள் குவித்தது. அதிரடியாக ஆடிய ஜோஷ் இங்கிலிஸ் சதமடித்து 103 ரன்னில் அவுட்டானார்.

தொடர்ந்து, 197 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஸ்காட்லாந்து அணி களமிறங்கியது. அந்த அணி 16.4 ஓவரில் 126 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதன்மூலம் 70 ரன் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அபார வெற்றி பெற்றது. ஸ்காட்லாந்து தரப்பில் அதிகபட்சமாக மெக்முல்லன் 59 ரன்கள் எடுத்தார். ஆஸ்திரேலியா சார்பில் மார்கஸ் ஸ்டோய்னிஸ் 4 விக்கெட்டும், கேமரூன் கிரீன் 2 விக்கெட்டும் வீழ்த்தினர். இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 2-0 என ஆஸ்திரேலியா கைப்பற்றியது. 

ஆப்கானிஸ்தான் அணி அறிவிப்பு

ஆப்கானிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே முதல் முறையாக டெஸ்ட் தொடர் நடைபெற உள்ளது.  இவ்விரு அணிகளுக்கு இடையே ஒரே ஒரு போட்டி கொண்ட டெஸ்ட் தொடர் இந்தியாவில் உள்ள கிரேட்டர் நொய்டாவில் வரும் 9-ம் தேதி நடைபெறுகிறது. இந்நிலையில், நியூசிலாந்து தொடருக்கான ஆப்கானிஸ்தான் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ஹஷ்மத்துலா ஷாஹிடி கேப்டனாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

ஆப்கானிஸ்தான் அணியின் விவரம் வருமாறு., ஹஷ்மத்துல்லா ஷாஹிடி (கேப்டன்), இப்ராஹிம் சட்ரான், ரியாஸ் ஹசன், அப்துல் மாலிக், ரஹ்மத் ஷா, பஹீர் ஷா மஹ்பூப், இக்ராம் அலி கில், ஷாஹிதுல்லா கமால், அப்சர் ஜசாய், அஸ்மத்துல்லா உமர்சாய், ஜியா உர் ரஹ்மான் அக்பர், ஷம்ஸ் உர் ரஹ்மான், கைஸ் அஹ்மத், ஜாஹிர் கான், நிஜாத் மசூத், கலீல் அஹ்மத்.

ஆலி போப் புதிய சாதனை

இலங்கை கிரிக்கெட் அணி இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடி வருகிறது. இதில் முதல் இரு போட்டிகளில் இங்கிலாந்து வெற்றி பெற்று 2-0 என தொடரை ஏற்கனவே கைப்பற்றிவிட்டது. இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையிலான கடைசி டெஸ்ட் போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் தொடங்கியது. இந்த ஆட்டத்திற்கான டாசில் வென்ற இலங்கை முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.

இதையடுத்து தனது முதல் இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 44.1 ஓவர்களில் 3 விக்கெட்டை இழந்து 221 ரன்கள் எடுத்துள்ளது. இங்கிலாந்து தரப்பில் லாரன்ஸ் 5 ரன், டக்கட் 86 ரன், ஜோ ரூட் 13 ரன் எடுத்து அவுட் ஆகினர். ஆலி போப் 103 ரன்னுடனும், ஹாரி புரூக் 8 ரன்னுடனும் களத்தில் உள்ளனர். இலக்கை தரப்பில் லஹிரு குமாரா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார். நேற்று 2ம் நாள் ஆட்டம் நடைபெற உள்ளது. இந்நிலையில் இந்த ஆட்டத்தில் ஆலி போப் சதம் அடித்ததன் மூலம் 147 ஆண்டு கால டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் யாரும் படைக்காத புதிய வரலாற்று சாதனை ஒன்றை படைத்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 4 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 6 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 6 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து