முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரிங்கு சிங் திருமண நிச்சயதார்த்தம்

ஞாயிற்றுக்கிழமை, 8 ஜூன் 2025      விளையாட்டு
Ringu-Singh 2023-12-19

Source: provided

இந்திய அணியின் இளம் கிரிக்கெட் வீரர் ரிங்கு சிங் உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த சமாஜ்வாதி கட்சி  எம்.பி. பிரியா சரோஜை திருமணம் செய்ய உள்ளார். இந்நிலையில், நேற்று லக்னோவில் உள்ள ஒரு ஆடம்பர ஓட்டலில் இருவரும் மோதிரம் மாற்றி நிச்சயம் செய்து கொண்டனர். ரிங்கு சிங் மற்றும் பிரியா சரோஜ் ஆகியோர் கடந்த ஒரு வருடமாக டேட்டிங் செய்து வந்தனர். இவர்களின் காதல் தற்போது கல்யாணம் வரை வந்துள்ளது. விரைவில் இருவரும் திருமணம் செய்து கொள்ளவுள்ளனர்.

25 வயதான பிரியா சரோஜ், உத்தரப் பிரதேசத்தில் உள்ள மச்சிலிஷஹர் தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்தும் சமாஜ்வாதி எம்.பி. ஆவார். அரசியலில் நுழைவதற்கு முன்பு, அவர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கறிஞராகவும் பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

_______________________________________________________________________________________________________________

பயிற்சியில் இந்திய அணி

இங்கிலாந்தில் 5 டெஸ்ட் கிரிக்கெட் ஆட்டங்கள் கொண்ட தொடரில் பங்கேற்பதற்காக இந்திய அணி லண்டன் சென்றடைந்தது. 2025-27 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியின் ஒரு பகுதியாக இரு அணிகளுக்கு இடையே 5 போட்டிகள் நடைபெறவுள்ளன. முதல் டெஸ்ட் ஆட்டம் லீட்ஸ் மைதானத்தில் ஜூன் 20-ஆம் தேதி தொடங்கி நடைபெறுகிறது. ரோஹித் சர்மா, கோலி ஓய்வு பெற்றதால் ஷுப்மன் கில் புதிய கேப்டனாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். தமிழக வீரர் சாய் சுதர்சனுக்கு இந்திய டெஸ்ட் அணியில் வாய்ப்பு கிடைத்துள்ளது. 

ஏற்கெனவே பல வீரா்கள் இந்திய ஏ அணியில் இடம் பெற்று, 3 அதிகாரபூா்வமற்ற ஆட்டங்களில் இங்கிலாந்து ஏ அணியுடன் ஆடி வருகின்றனா்.  இரண்டாம் டெஸ்ட் ஜூலை 2-6-இல் பா்மிங்ஹாமிலும், ஜூலை 10-14-இல் லாா்ட்ஸிலும், ஜூலை 23-27-இல் மான்செஸ்டரிலும், ஆக. 4-8-இல் ஓவல் திரலிலும் நடைபெறுகின்றன. இந்நிலையில், பி.சி.சி.ஐ. தனது எக்ஸ் பக்கத்தில் பயிற்சி விடியோவை வெளியிட்டுள்ளது.

_______________________________________________________________________________________________________________

பேட்டை தொடாத ஸ்மித்

ஆஸி. முன்னாள் கேப்டனும் நட்சத்திர பேட்டருமான ஸ்டீவ் ஸ்மித் 3 மாதங்களாக பேட்டை தொடவில்லை எனக் கூறி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார். கடைசியாக, ஸ்டீவ் ஸ்மித் சாம்பியன்ஸ் டிராபி லீக் போட்டியில் இந்தியாவுடன் விளையாடினார்.  இதனைத் தொடர்ந்து, ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்தார். தற்போது, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி ஜூன்.11ஆம் தேதி லண்டனில் நடைபெற இருக்கிறது.

இந்நிலையில், இங்கிலாந்தில் 55 சராசரி கொண்ட ஸ்டீவ் ஸ்மித் கூறியதாவது: நான் பொதுவாகவே வீட்டுக்கு அருகில் எங்காவது பேட்டை வைத்து ஷேடோ பேட்டிங் பயிற்சி செய்து வருவேன். ஆனால், தற்போது வேண்டுமென்றே பேட்டை சிறிது காலமாக தொடாமல் இருந்தேன். அதுவும் நல்லதுதான். சாம்பியன்ஸ் டிராபியில் ஷமியின் புல் டாஸ் பந்தினை தவறவிட்டதில் இருந்து நான் பேட்டினை தொடவில்லை.  பொதுவாக எப்படி இருக்குமெனில் நான் முதல் முறை அடிக்கும்போது நன்றாக விளையாடுவேன், பிறகு மோசமாக, அடுத்து அங்கிருந்து சிறப்பாக ஆடுவேன். ஆனால், இந்தமுறை முதலிரண்டுமே நன்றாக அமைந்தது. அடுத்த சில நாள்களுக்கு பல மணி நேரங்கள் பயிற்சி செய்ய தேவையில்லை எனக் கூறியுள்ளார்.

_______________________________________________________________________________________________________________

என் வாழ்க்கையின் சிறந்த பந்துவீசும் காலத்தில் இருக்கிறேன்: ஹேசில்வுட் பந்துவீச்சு குறித்து ஹேசில்வுட்

ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த நட்சத்திர பந்துவீச்சாளர் ஹேசில்வுட் (34) இதுவரை 72 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 279 விக்கெட்டுகள் எடுத்துள்ளார். ஆர்.சி.பி. அணி ஐ.பி.எல். கோப்பை வென்றதில் இவரது பங்கு முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு ஆஸி. அணி முன்னேறியுள்ள நிலையில் ஹேசில்வுட் அணியில் இணைந்தார். பயிற்சியைத் தொடங்கிய ஹேசில்வுட் பேட்டியில் கூறியதாவது: 2023-இல் இருந்தது போலவே நன்றாக இருக்கிறேன். கடந்த 2 ஆண்டுகளில் என்னுடைய விக்கெட்டுகள் நன்றாகவே இருக்கின்றன. 

திறமையின்படி பார்த்தால் நான் என்னுடைய கிரிக்கெட் வாழ்க்கையில் சிறந்த பந்துவீசும் காலத்தில் இருக்கிறேன். என்னுடைய உடலை மட்டும் பார்த்துக்கொண்டால் போதுமானது. என்னுடைய ஒரே பிரச்னையாக தீவிரத்தன்மை மட்டும் தான் இருந்தது. தினமும் தொடர்ச்சியாக பயிற்சி எடுத்து வருகிறோம். பந்துவீச்சுப் பயிற்சியிலும் செஷன் வாரியாக செய்து வருகிறோம். முடிந்த அளவுக்கு எங்களை சிறந்த நிலையில் வைத்துக்கொள்ள பயிற்சி எடுத்து வருகிறோம் என்றார்.

_______________________________________________________________________________________________________________

கோகோ காப் பட்டம் வென்றார் 

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டி நடைபெற்றது. இதில் நம்பர் ஒன் வீராங்கனையான பெலாரசின் சபலென்காவும், 2ஆம் நிலை வீராங்கனையான அமெரிக்காவின் கோகோ காபும் பலப்பரீட்சை நடத்தினர். முதல் செட்டில் இருவரும் விட்டுக்கொடுக்காமல் விளையாடினர். இதனால் டை-பிரேக்கர் வரை சென்றது. இறுதியில் சபலென்கா 7(7)- 6(5) என முதல் செட்டை கைப்பற்றினார். 2ஆவது செட்டில் கோகோ காப் அபாரமாக விளையாடினார். கோகோ காப் ஆட்டத்திற்கு சபலென்காவால் ஈடுகொடுக்க முடியவில்லை. இதனால் 5-2 என முன்னிலைப் பெற்றார். அதன்பின் 6-2 என 2ஆவது செட்டை எளிதாக கைப்பற்றினார். 

இதனால் ஆட்டம் 3ஆவது செட்டிற்கு நீடித்தது. சாம்பியன் பட்டத்தை தீர்மானிக்கும் இந்த செட்டிலும் காப் ஆதிக்கம் செலுத்தினார். கோகோ காப் 3-1 என முன்னிலைப் பெற்றிருந்தார். அதன்பின் 5-3 என முன்னிலைப் பெற்றார். 9ஆவது கேம்-ஐ சபலென்கா கைப்பற்றினார். இதனால் காப் 5-4 என முன்னிலைப் பெற்றிருந்தார். 10ஆவது கேமிற்கான சர்வீஸை காப் தொடங்கினார். இந்த கேம் "ஏஸ்" வரை சென்றாலும் காப் கைப்பற்றினார். இதனால் 2-1 {6(5)-7(7), 6-2, 6-4} என அபாரமாக வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை வென்றார்.

_______________________________________________________________________________________________________________

வேதனை அளிக்கிறது: சபலென்கா

பாரிஸ்: நடப்பு பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரின் ஒற்றையர் மகளிர் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்றார் அமெரிக்காவின் கோகோ காப். இந்நிலையில், அவருடன் இறுதிப் போட்டியில் விளையாடிய அரினா சபலென்கா, இந்த தோல்வி வேதனை அளிப்பதாக பேசியுள்ளார்.  .

“இந்த தோல்வி மிகுந்த வேதனை அளிக்கிறது. எனது கேரியரில் மிகவும் மோசமான பைனல் இது. கடந்த இரண்டு வார காலம் முழுவதும் சிறந்த முறையில் டென்னிஸ் விளையாடினேன். இகா ஸ்வியாடெக் போன்ற சிறந்த வீராங்கனைகளுக்கு எதிராக கடினமான ஆட்டத்தில் விளையாடி இருந்தேன். இந்த வெற்றிக்கு கோகோ காப் தகுதியானவர். இருந்தாலும், அரையிறுதியில் என்னை இகா ஸ்வியாடெக் வீழ்த்தி இருந்தால் சாம்பியன் பட்டம் வென்று இருப்பார் என நினைக்கிறேன். என்னால் பட்டம் வெல்ல முடியாமல் போனதற்கு மன்னிக்கவும். நிச்சயம் நான் வலுவாக மீண்டு வருவேன்” என அரினா சபலென்கா தெரிவித்தார்.

ஹொரெசியோ, மார்செல் சாம்பியன்

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடைபெற்று வருகிறது. ஆண்கள் இரட்டையர் பிரிவின் இறுதிப் போட்டியில் பிரிட்டனின் நீல் ஸ்குப்ஸ்கி-ஜோ சாலிஸ்பரி ஜோடி, அர்ஜென்டினாவின் ஹொரெசியோ ஜெபெல்லோஸ்-ஸ்பெயினின் மார்செல் கிரனோலர்ஸ் ஜோடியுடன் மோதியது. இதில் சிறப்பாக ஆடிய ஹொரெசியோ-மார்செல் ஜோடி 6-0, 6-7 (5-7), 7-5 என்ற செட் கணக்கில் வென்று சாம்பியன் பட்டம் பெற்று அசத்தியது.

_______________________________________________________________________________________________________________

ஷாஹித் அப்ரிடி உயிரிழப்பா..? 

பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் ஷாஹித் அப்ரிடி இறந்துவிட்டதாகக் கூறும் ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலானது. அந்த வீடியோவில், ஒரு பாகிஸ்தான் செய்தி தொகுப்பாளர் அப்ரிடி இறந்துவிட்டதாக அறிவிப்பதைக் காணலாம். இருப்பினும், அது குறித்து உண்மைச் சரிபார்ப்பு நடத்தப்பட்டு, அது உண்மையல்ல என்று தெரியவந்தது.

வீடியோவில் உள்ள படங்கள் மற்றும் பிற கூறுகள் ஏ.ஐ. ஆல் உருவாக்கப்பட்டவை என்று கண்டறியப்பட்டது. ஷாஹித் அப்ரிடி உண்மையில் ஆரோக்கியமாக இருப்பதாகவும்,சமூக ஊடகங்களில் வைரலாகி வரும் வீடியோ உண்மைக்குப் புறம்பானது என்றும் உண்மைச் சரிபார்ப்புக் குழு தெளிவுபடுத்தியது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 2 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 2 months ago
View all comments

வாசகர் கருத்து