முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மாணவர்களுக்கு அரசியல் புரிதல் வேண்டும்: 'ஓரணியில் தமிழ்நாடு' நின்றால் நம்மை யாராலும் வீழ்த்த முடியாது : திருச்சி கல்லூரி விழாவில் முதல்வர் முக.ஸ்டாலின் பேச்சு

புதன்கிழமை, 9 ஜூலை 2025      தமிழகம்
CM-2 2025-07-09

Source: provided

திருச்சி : “காந்தி வழி, அம்பேத்கர் வழி, பெரியார் வழி என்று மாணவர்கள் பின்பற்ற வழிகள் உள்ளன. ஆனால், கோட்சே கூட்டம் பின்னால் மாணவர்கள் சென்றுவிடக் கூடாது.” என்று திருச்சி ஜமால் கல்லூரி பவளவிழாவில் முதல்வர் ஸ்டாலின் பேசினார். மேலும், மாணவர்களுக்கு அரசியல் புரிதல் வேண்டும் என்று தெரிவித்த முதல்வர், 'ஓரணியில் தமிழ்நாடு' நின்றால் நம்மை யாராலும் வீழ்த்த முடியாது என்று உறுதிப்பட தெரிவித்துள்ளார்.

கல்லூரி பவள விழா...

திருச்சி ஜமால் முகமது கல்லூரியில் பவள விழா ஆண்டின் துவக்க நாளான நேற்று (ஜூலை 9) குளோபல் ஜமாலியன் பிளாக் என்ற புதிய கட்டிடத்தை தமிழக முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார். அவருடன் அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஸ், கோவி செழியன், எம்பிக்கள் சிவா, சல்மா, நவாஸ் கனி, கல்லூரி செயலாளர் மற்றும் தாளாளர் ஏ.கே.காஜா நஜீமுதீன், பொருளாளர் எம்.ஜே.ஜமால் முகமது உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

பரபரப்பாக இருந்தாலும்...

அதைத்தொடர்ந்து மாணவர்களிக்கிடையே முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: நான் முதல்வராக பொறுப்பேற்றதில் இருந்து தொடர்ந்து பயணம் செய்து அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறேன். அதுமட்டுமல்ல, ஆய்வுக்கூட்டம், அரசுப்பணி என தொடர்ந்து பரபரப்பாக இருந்தாலும், உங்களைப் போன்ற இளம் மாணவர்களை சந்திக்கின்றபோது எனக்கு எனர்ஜி வந்துவிடுகிறது. அதிலும் மாணவர்கள் அதிகமாக இருக்கக்கூடிய நிகழ்ச்சி என்றால், உடனே ஓகே சொல்லிவிடுவேன். இப்போதுகூட, திருவாரூர் பயணத்திற்கு நடுவில் உங்களை சந்திக்க வந்திருக்கிறேன்.

நாட்டுக்கு வழிகாட்டும்... 

இந்த ஜமால் முகமது கல்லூரிக்கு நான் வருவது, இது முதல்முறை கிடையாது. பலமுறை வந்திருக்கிறேன். ஒற்றுமையும், சகோதரத்துவமும் எப்படி வலுப்பட வேண்டும் என்று நாட்டுக்கு வழிகாட்டும் நிறுவனமாக இந்த கல்லூரி இருக்கிறது. இங்கு உங்களுக்குள் உருவாகும் நட்பு எல்லா காலத்துக்கும் தொடர வேண்டும். கல்லூரி நட்பு, முதிய வயது வரை உறுதியாக இருக்க வேண்டும். அது இந்த சமூகத்திலும் எதிரொலிக்க வேண்டும். ஏனென்றால், இந்தக் கல்லூரி ஹாஜி ஜமால் முகமது சாஹிப், ஜனாப் காஜா மியான் ராவுத்தர் ஆகியோரின் நட்பினால் உருவானது.

சென்றுவிடக்கூடாது... 

கல்லூரியை உருவாக்கிய இரண்டு வள்ளல்களும் காந்தி வழியைக் கடைப்பிடித்தவர்கள். காந்தி வழி, அம்பேத்கர் வழி, பெரியார் வழி என்று நமக்கான பல வழிகள் இருக்கின்றன. ஆனால், மாணவர்களாகிய நீங்கள் ஒருபோதும் ‘கோட்சே கூட்டத்தின்’ வழியில் சென்றுவிடக்கூடாது. கல்வி நிறுவனத்துக்கும், அங்கே படிக்கின்ற மாணவர்களால் தான் பேரும் புகழும் கிடைக்கும். உயர்ந்த சிந்தனையாளர்களோடு தொலைநோக்குப் பார்வையை செயல்வடிவமாக்கப் போகின்றவர்கள் மாணவர்களான நீங்கள்தான்.

வளர்ச்சிக்கு உறுதுணை...

மாணவர்களுக்கு படிப்பு மிகவும் முக்கியம். அதுதான் உங்களின் நிலையான சொத்து. பல்வேறு திறமைகள் கொண்டவர்களாக, தன்னம்பிக்கையும் சமூக அக்கறையும் நிறைந்தவர்களாக மாணவர்கள் வளர வேண்டும். இந்த கல்லூரியின் முன்னாள் மாணவர்கள் போல நாமும் வருவோம் என்று உங்கள் மனதில் உருவாகும் நம்பிக்கைதான் இந்த கல்லூரியின் தன்னம்பிக்கை சான்றிதழ். உங்களின் முன்னாள் மாணவர்கள் பட்டியலில் பல ஐஏஎஸ்., ஐபிஎஸ் அதிகாரிகள், நீதிபதிகள் கூட இருக்கிறார்கள். நம்முடைய தமிழ்நாடு கேபினட்டில் இரண்டு அமைச்சர்கள் உங்கள் கல்லூரியில் படித்து உருவான மாண்புமிகுக்குரியவர்கள். ஒருவர் கே.என்.நேரு. மற்றொருவர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம். உங்கள் சீனியர்கள் எங்களுக்கும் அமைச்சரவையில் சீனியர்கள் தான். நாளைக்கு உங்களில் இருந்து சிலர்கூட அந்தப் பட்டியலில் வரலாம். வரவேண்டும். தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கலாம்.

யாராலும் வீழ்த்த.... 

'ஓரணியில் தமிழ்நாடு' - நின்றால் தமிழ்நாட்டை யாராலும் வீழ்த்த முடியாது. நான் அரசியல் பேசவில்லை. மாணவர்களுக்கு நிச்சயம் அரசியல் புரிதல் இருக்க வேண்டும் என்று பேசுகிறேன். கடந்த கால படிப்பினைகளின் நிகழ்கால வாய்ப்புகளை பயன்படுத்திக் கொண்டு எதிர்காலம் வளமாக அமைய வேண்டும். அந்த எதிர்காலம் என்பது நீங்கள்தான். கல்வி நமக்கு எளிதாக கிடைத்து விடவில்லை; நம்முடைய தலைவர்கள் நடத்திய சமூகநீதி போராட்டங்களால் கிடைத்தது. சமூக நீதி போராட்டங்களின் பலன்தான் இன்றைக்கு நாம் பார்க்கின்ற தமிழ்நாடு.

பறிக்க முடியாத... 

இஸ்லாமிய சகோதரர்களின் அரசியல் உரிமைகளையும் காப்பாற்றும் இயக்கமாக திமுக எந்நாளும் இருக்கும். இது நான் உங்களுக்குத் தரும் உறுதி. கல்விதான் யாராலும் பறிக்க முடியாத ஒரே சொத்து. அதை மாணவர்களுக்கு கொடுப்பதோடு திறன் மேம்பாட்டை வளர்க்கவும், அதற்கேற்ற வசதிகளை வழங்கவும், திராவிட மாடல் அரசு தயாராக இருக்கிறது. எங்களின் கல்வி வளர்ச்சித் திட்டங்களுக்கு ஜமால் முகமது கல்லூரி போன்ற நிறுவனங்களும் துணையாக இருக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

முதல்வர் உற்சாகம்

தமிழக முதல்வர் ஸ்டாலின் தனது பேச்சுக்கு இடைஇடையே மாணவர்களை உற்சாகப்படுத்துகின்ற சில வார்த்தைகளை பேசினார். அதுவும் ஆங்கில வார்த்தையாக பேசினார். இதைக்கண்டு உற்சாகமடைந்த மாணவர்கள் கைதட்டி, பலத்த கரகோஷம் எழுப்பினர்.இதனால் உற்சாகமடைந்த முதல்வர் மேடையில் தனது பேச்சை முடிக்கும் முன்னர் “அனைவருக்கும் நன்றி, என்னை மனதளவில் உங்கள் வயதிலேயே வைத்திருக்க உதவுகின்ற மாணவர்களுக்கு சிறப்பு நன்றி” என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து