முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விடாமுயற்சியே வெற்றிக்கான ஒரே வழி’ மாணவர்களுக்கு சுபான்ஷு சுக்லா அறிவுரை

திங்கட்கிழமை, 25 ஆகஸ்ட் 2025      இந்தியா
Subhanshu-Shukla-2025-08-25

லக்னோ, விடாமுயற்சியே வெற்றிக்கான ஒரே வழி என்று மாணவர்களுக்கு சுபான்ஷு சுக்லா அறிவுரை வழங்கினார்.

இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா (வயது 39). இவர் கடந்த ஜூன் 25-ந்தேதி, சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு சென்றார். அமெரிக்காவை சேர்ந்த ‘ஆக்சியம் ஸ்பேஸ்’ என்னும் தனியார் நிறுவனத்தின் 'ஆக்சியம்-4' திட்டத்தின் மூலம் விண்வெளிக்கு சென்ற சுபான்ஷு சுக்லா, பெக்கி விட்சன், திபோர் கபு மற்றும் ஸ்லாவோஸ் உஸ்னான்ஸ்கி-விஸ்னீவ்ஸ்கி ஆகிய 4 பேரும், சர்வதேச விண்வெளி நிலையத்தில் 18 நாட்கள் தங்கி, பயிர்கள் வளர்ச்சி உள்ளிட்ட பல்வேறு ஆராய்ச்சி பணிகளில் ஈடுபட்டனர்.

ஆராய்ச்சி பணி நிறைவடைந்ததும், கடந்த ஜூலை 15-ந்தேதி பூமிக்கு திரும்பினர். சுபான்ஷு சுக்லா உள்பட 4 விண்வெளி வீரர்களும் பயணித்த விண்கலம், வடஅமெரிக்காவின் மேற்கு கடற்கரையில் பசிபிக் பெருங்கடலை ஒட்டி உள்ள கலிபோர்னியாவின் நீண்ட கடற்கரையில் பாதுகாப்பாக தரையிறங்கியது. இதன் மூலம், 41 ஆண்டுகளில் விண்வெளிக்கு சென்று திரும்பிய முதல் இந்தியர் என்ற பெருமையை சுபான்ஷு சுக்லா பெற்றார்.

இதனிடையே, விண்வெளி சென்று திரும்பிய சுபான்ஷு சுக்லா அமெரிக்காவில் இருந்து கடந்த 17-ந்தேதி இந்தியா வந்தார். டெல்லி விமான நிலையம் வந்த சுக்லாவை அவரது குடும்பத்தினர், மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப இணை மந்திரி ஜிதேந்திரா சிங், டெல்லி முதல்-மந்திரி ரேகா குப்தா உள்பட பலர் வரவேற்றனர். தொடர்ந்து சுபான்ஷு சுக்லா, டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். அப்போது விண்வெளி அனுபவங்கள் குறித்து சுபான்ஷு சுக்லாவிடம் பிரதமர் மோடி கேட்டறிந்தார். மேலும், விண்வெளி பயணம் மேற்கொண்ட சுபான்ஷு சுக்லாவை பிரதமர் மோடி பாராட்டினார்.

இந்த நிலையில், சுபான்ஷு சுக்லா தனது சொந்த ஊரான லக்னோவிற்கு நேற்று வருகை தந்தார். அங்கு அவர் படித்த சிட்டி மாண்டிசோரி பள்ளியில் நடைபெற்ற விழாவில் சுபான்ஷு சுக்லா சிறப்பு விருந்தினராக பங்கேற்று மாணவர்களுடன் கலந்துரையாடினார். அப்போது அவர் பேசியதாவது;- 

“கடந்த 5 வருடங்களாக மேற்கொண்ட பயிற்சிகள் மற்றும் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு சென்று திரும்பியதில் எனக்கு கிடைத்த அனுபவத்தின் மூலம், நமது சூழல்கள் எவ்வாறு மாறிக்கொண்டிருக்கிறது என்பதைப் பார்க்கும்போது, ​​எதிர்காலம் மிகவும் பிரகாசமாக இருக்கிறது என்பதை உணர்கிறேன். நாம் இப்போது சரியான நேரத்தில் இருக்கிறோம், ஏராளமான வாய்ப்புகள் உள்ளன. நான் விண்வெளியில் புவி சுற்றுப்பாதையில் இருந்தபோது, குழந்தைகளுடன் மூன்று முறை உரையாடினேன். அப்போது என்னிடம், விண்வெளியில் நீங்கள் என்ன செய்கிறீர்கள்? விண்வெளி வீரர்கள் என்ன செய்கிறார்கள்?” என்று யாரும் கேட்கவில்லை. ஆனால் அவர்கள் கேட்ட கேள்வி "நான் எப்படி ஒரு விண்வெளி வீரர் ஆவது? என்பதுதான். இங்கு இருக்கும் மாணவர்களைப் போல் நான் திறமையானவன் அல்ல. உங்களில் பாதி அளவு திறமை கூட என்னிடம் இருந்ததில்லை. என்னிடம் இருந்ததை வைத்து என்னால் இவ்வளவு தூரம் வரமுடிந்தது என்றால், நீங்கள் வளர்ந்ததும் என்னவாக இருப்பீர்கள் என்பதை நினைத்தால் பிரமிப்பாக உள்ளது. நாம் வெற்றி பெற நமக்கு தேவை விடாமுயற்சி மட்டுமே, அதைத் தவிர வேறு ஒன்றும் இல்லை. இவ்வாறு சுபான்ஷு சுக்லா தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 2 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 4 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 4 months ago
View all comments

வாசகர் கருத்து