முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மக்களுக்கு இடையூறு செய்யும் கட்சி அல்ல தி.மு.க. - முதல்வர்

சனிக்கிழமை, 13 செப்டம்பர் 2025      தமிழகம்
CM-2 2024-10-28

Source: provided

சென்னை : மக்களுக்கு இடையூறு செய்யும் கட்சி அல்ல தி.மு.க. என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், தி.மு.க. தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது;-

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் பிறந்தநாள் - தமிழ்த்தாயின் தலைமகன் பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் – திராவிட முன்னேற்றக் கழகம் தொடங்கப்பட்ட நாள் - இந்த மூன்றும் நிகழ்ந்தது செப்டம்பர் மாதம் என்பதால் முப்பெரும் விழாவாக -உடன்பிறப்புகளின் திருவிழாவாகக் கொண்டாடும் வழக்கத்தைத் தொடங்கியவர் கலைஞர் கருணாநிதி.

கொள்கை முழக்கமிடும் கருத்தரங்குகள் – பட்டிமன்றங்கள் - கவியரங்குகள்-பொதுக்கூட்டம் என மூன்று நாள் திருவிழாவாக முப்பெரும் விழாவை முன்னெடுத்து, பெரியார் – அண்ணா – பாவேந்தர் - கலைஞர் பெயர்களில் கழகத்தின் மூத்த முன்னோடிகளுக்கு விருதுகள் வழங்கும் வழக்கத்தையும் முத்தமிழறிஞர் கலைஞர் உருவாக்கினார்.

அப்போதைய முப்பெரும் விழாக்களின்போது, இளைஞரணிச் செயலாளராக வெண்சீருடை அணிந்த பட்டாளத்துடன் பேரணியை வழிநடத்தியவன்தான், உங்களில் ஒருவனான இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின். நம் கழகத்தின் தலைமை நிலையமாக - உடன்பிறப்புகளின் தலைமைச் செயலகமாகத் திகழும் அண்ணா அறிவாலயம் திறக்கப்பட்டது 1987-ம் ஆண்டு நடைபெற்ற முப்பெரும் விழாவின்போதுதான்.

சமூகநீதிக் காவலர் வி.பி.சிங் பிரதமராக இருந்தபோது 1990-ம் ஆண்டு செப்டம்பரில் முப்பெரும் விழாவுடன் சட்டமேதை டாக்டர் அம்பேத்கர் பிறந்தநாள், மண்டல் கமிஷன் வெற்றிவிழா ஆகியவற்றையும் இணைத்து ஐம்பெரும் விழாவாக நடத்தியதும், தேசிய முன்னணியின் தலைவர்கள் மேடையிலிருந்து பார்வையிட, சென்னை அண்ணாசாலை குலுங்கிட இளைஞரணியின் பேரணியை வழிநடத்தியதும் இன்னமும் என் மனதில் நிழலாடுகின்றன.

நம் உயிர்நிகர் தலைவர் முத்தமிழறிஞர் கலைஞரை இயற்கை சதி செய்து நம்மிடமிருந்து பிரித்த பிறகு, கழகத்தின் தலைமைப் பொறுப்பை உங்களில் ஒருவனான நான் ஏற்றுக்கொண்டது முதல், சென்னைக்கு வெளியே ஏதேனும் ஒரு மாவட்டத்தில் முப்பெரும் விழாவைக் கொண்டாடி வருகிறோம். அந்த வகையில், இந்த ஆண்டு 2025 செப்டம்பர் 17 அன்று கரூர் மாநகரின் புறவழிச்சாலையில் கோடாங்கிப்பட்டி எனும் இடத்தில் முப்பெரும் விழா எனும் கொள்கைத் திருவிழா நடைபெற இருக்கிறது. செப்டம்பர் 17 மாலை 5 மணியளவில் தொடங்கும் முப்பெரும் விழாவுக்குக் கழகத்தின் பொதுச்செயலாளர் அமைச்சர் துரைமுருகன் தலைமை தாங்குகிறார். கழகப் பொருளாளர் டி.ஆர்.பாலு எம்.பி, கழக முதன்மைச் செயலாளர் அமைச்சர் கே.என்.நேரு, கழகத் துணைப் பொதுச்செயலாளர்கள் ஆகியோர் வாழ்த்துரை வழங்குகிறார்கள்.

இந்த லட்சிய விழாவில் பெரியார் விருது கழகத்தின் துணைப்பொதுச்செயலாளர், கழக நாடாளுமன்றக் குழுத் தலைவர் கவிஞர் கனிமொழி கருணாநிதி எம்.பி.க்கு வழங்கப்பட விருக்கிறது. அண்ணா விருது பாளையங்கோட்டை நகர்மன்ற முன்னாள் தலைவர் சுப.சீதாராமனுக்கு வழங்கப்படவிருக்கிறது. கலைஞர் விருது, அண்ணாநகர் பகுதி முன்னாள் செயலாளர், சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினர் சோ.மா.ராமச்சந்திரனுக்கு வழங்கப்படுகிறது.

பாவேந்தர் பாரதிதாசன் விருது, தலைமைச் செயற்குழு உறுப்பினர் குளித்தலை சிவராமனுக்கு அறிவிக்கப்பட்ட நிலையில், எதிர்பாராதவிதமாக அவர் நம்மை விட்டுப் பிரிந்து துயரத்தில் ஆழ்த்தினாலும், என்றும் நினைவில் வாழும் அந்த மாவீரரின் தியாகத்தைப் போற்றி அவரது குடும்பத்தாரிடம் வழங்கப்படவிருக்கிறது. பேராசிரியர் விருது கழக ஆதிதிராவிடர் நலக்குழுத் தலைவர், சட்டப்பேரவை முன்னாள் கொறடா மருதூர் ராமலிங்கத்துக்கு வழங்கப்படுகிறது. உங்களில் ஒருவனான என் பெயரிலான மு.க.ஸ்டாலின் விருது ஒருங்கிணைந்த கோவை மாவட்ட முன்னாள் செயலாளர், முன்னாள் அமைச்சர் பொங்கலூர் ந.பழனிசாமிக்கு வழங்கப்படுகிறது. முப்பெரும் விழா நிகழ்வுகளில் முத்தாய்ப்பாகத் தமிழ்நாட்டின் நான்கு மண்டலங்களில் ஒன்றியம், நகரம், பகுதி, பேரூர் ஆகியவற்றில் கழகப் பணியைச் சிறப்பாகச் செய்து வருபவர்களில் தலா ஒருவர் என்ற அடிப்படையில் நற்சான்றிதழும் பணமுடிப்பும் வழங்கப்படும். முரசொலி அறக்கட்டளை சார்பில், அண்ணன் முரசொலி செல்வம் பெயரிலான முதல் விருது மூத்த பத்திரிகையாளர் ஏ.எஸ்.பன்னீர்செல்வனுக்கு வழங்கப்படுகிறது. இந்த விருதுகளை வழங்கிச் சிறப்புரை ஆற்றும்படி தலைமைக் கழகம் உங்களில் ஒருவனான என்னைப் பணித்துள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து