முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழ்நாட்டில் எஸ்.ஐ.ஆர். பணிகள் நடைபெற்று வரும் வேளையில் ஒவ்வொரு வாக்காளரும் மிக கவனமாக இருக்க வேண்டும்: புதுக்கோட்டையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு

திங்கட்கிழமை, 10 நவம்பர் 2025      தமிழகம்
CM-2-2025-11-10

புதுக்கோட்டை, தமிழ்நாட்டில் எஸ்.ஐ.ஆர். பணிகள் தற்போது நடைபெற்று வரும் சூழலில் ஒவ்வொரு வாக்காளரும் மிக கவனமாக இருக்க வேண்டும் என்றும்,  பொதுமக்கள் அனைவரும் தங்களின் வாக்குகளை உறுதி செய்துகொள்ள வேண்டும் என்றும் புதுக்கோட்டையில் நடந்த அரசு விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று முதல்வர் மு.க.ஸ்டாலின் ரூ. 767 கோடி மதிப்பீட்டில் புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி முடிவுற்றப் பணிகளைத் திறந்து வைத்து நலத்திட்ட உதவிகள் வழங்கினார். அப்போது நிகழ்ச்சியில் புதுக்கோட்டை மாவட்டத்திற்கு புதிய அறிவிப்புகளை வெளியிட்ட முதல்வர, தி.மு.க. அரசில் கொண்டுவந்த திட்டங்கள் குறித்தும் பேசினார்.

தேர்தல் நெருங்கி வந்துவிட்டது. இப்போதே தேர்தலுக்கான பணிகள் தொடங்கிவிட்டது. இந்த நேரத்தில் உங்களிடம் நான் வைக்கும் முக்கியமான வேண்டுகோள் என்ன என்றால், பொதுமக்கள் அனைவரும் தங்களின் வாக்குகளை உறுதி செய்துகொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். நமக்குதான் போடப்போகிறீர்கள். இந்த ஆட்சி தான் வரவேண்டும் என்று போடப்போகிறீர்கள். அதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால், வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருப்பதை உறுதி செய்துகொள்ளுங்கள். அதுதான் முக்கியம். ஏதாவது ஒரு காரணத்தை சொல்லி உங்களின் வாக்குகள், நீக்கப்பட்டு விடக் கூடாது என்பதில் கவனமாக இருக்க வேண்டும். 

இந்திய தேர்தல் ஆணையத்தின் ஒரே வேலை – தேர்தலை முறையாக, ஒழுங்காக - நேர்மையாக - உண்மையாக நடத்துவதுதான். அதைக்கூட அவர்கள் பல மாநிலங்களில் செய்யவில்லை. மற்ற மாநிலங்களிலிருந்து வரும் செய்திகளை படிக்கும்போது நமக்கெல்லாம் அதிர்ச்சியாக இருக்கிறது. நீங்கள் எல்லோரும் செய்திகளில், சோஷியல் மீடியாக்களில் பார்த்திருப்பீர்கள். அரியானா மாநிலத்தில் அநியாயமாக நடந்திருக்கிறது. 

ஒரு மாநிலத்தில் வாக்காளராக இருப்பவர்கள், இன்னொரு மாநிலத்திற்கு வந்து வாக்களித்திருக்கிறார்கள். ஒரே ஒரு வீட்டு முகவரியில் 66 போலி வாக்காளர்கள் இருந்திருக்கிறார்கள். ஒருவருடைய வீட்டு முகவரியில் 500 வாக்காளர்கள் இருந்திருக்கிறார்கள். அவர்கள் எல்லோருமே வேறு மாநிலத்தை சேர்ந்தவர்கள். 

முன்னாள் எம்.பி. ஒருவரே, இரண்டு மாநிலங்களில் வாக்களித்து வெளிப்படையாக போட்டோ போட்டிருக்கிறார். அந்த மாநிலத்தில் பாராளுமன்றத் தேர்தல் நடந்தபோது வாக்களித்த 35 லட்சம் பேரால், சட்டமன்றத் தேர்தலில் வாக்களிக்க முடியவில்லை. ஆனால், புதிதாக 25 லட்சம் வாக்காளர்கள் அந்த மாநிலத்தில் சேர்க்கப்பட்டு இருக்கிறார்கள். இது எல்லாவற்றையும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் – இளம் தலைவராக விளங்கிக்கொண்டிருக்கும் என்னுடைய ஆருயிர் சகோதரர் ராகுல்காந்தி இதைத் தெளிவாக ஆதாரத்துடன் அம்பலப்படுத்தியிருக்கிறார். ஆனால், தேர்தல் ஆணையம் பதில் சொல்லாமல் பதுங்குகிறார்கள். இது ஏதோ தனக்கு சம்பந்தம் இல்லாத பிரச்சினை போன்று, அமைதியாக இருக்கிறார்கள். 

தமிழ்நாட்டில் எஸ்.ஐ.ஆர். பணிகள் தற்போது நடைபெற்று வரும் சூழலில் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒவ்வொரு வாக்காளரும் மிக கவனமாக இருக்க வேண்டும். உங்கள் பேர், வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டிருக்கிறதா என்று  பாருங்கள். உங்களின் வாக்குச் சாவடியில் போலியான நபர்கள் சேர்க்கப்பட்டு இருக்கிறார்களா என்பதையும்  கண்காணிக்குமாறு உங்களை நான் விரும்பி கேட்டுக்கொள்கிறேன். வாக்களிப்பது நம்முடைய ஒவ்வொருவரின் ஜனநாயக கடமை. ஜனநாயக உரிமை. அந்த உரிமையை யாராலும் தடுக்க முடியாது. தேர்தல் ஆணையமே அதை செய்ய நினைத்தாலும் மக்களாகிய நீங்கள்தான் தடுக்க வேண்டும்" என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 5 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 7 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 7 months ago
View all comments

வாசகர் கருத்து