முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உ.பி.யில் இன்று 49 தொகுதிகளில் 5-வது கட்ட தேர்தல்

வியாழக்கிழமை, 23 பெப்ரவரி 2012      இந்தியா
Image Unavailable

 

லக்னோ, பிப்.23 - உத்தரபிரதேசத்தில் 5 ம் கட்ட சட்டமன்றத் தேர்தலுக்கான பிரச்சாரம் நேற்று முன்தினம் ஓய்ந்தது. இதைத் தொடர்ந்து 49 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் நடக்கிறது. உத்தரபிரதேசத்தில் மொத்தமுள்ள 403 சட்டமன்ற தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வருகிறது. இந்த 7 கட்டங்களில் ஏற்கனவே 4 கட்டங்களுக்கான தேர்தல்கள் நடந்து முடிந்துவிட்ட நிலையில் இப்போது 5 வது கட்டத் தேர்தலுக்கான பிரச்சாரம் நேற்று முன்தினம் மாலை 5 மணியுடன் முடிவடைந்தது. இதைத் தொடர்ந்து இன்று (வியாழக்கிழமை) 49 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. மொத்தம் 13 மாவட்டங்களில் நடைபெறும் இந்த 5 வது கட்டத் தேர்தலில் மொத்தம் 248 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இவர்களில் 76 வேட்பாளர்கள் மீது கிரிமினல் வழக்குகள் நிலுவையில் உள்ளன. மொத்த வேட்பாளர்களில் 118 பேர் கோடீஸ்வரர்கள். சமாஜ்வாடி கட்சியைச் சேர்ந்த 48 பேரும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 14 பேரும், பா.ஜ.க.வைச் சேர்ந்த 13 பேரும், பகுஜன்சமாஜ் கட்சியைச் சேர்ந்த 12 பேரும் தேர்தல் களத்தில் உள்ளனர். ஏற்கனவே 4 கட்ட தேர்தல்கள் அமைதியாக நடந்துமுடிந்துள்ள வேளையில் இந்த 5 கட்ட தேர்தலையும் அமைதியாகவும் சுதந்திரமாகவும், நியாயமாகவும் நடத்துவதற்கான ஏற்பாடுகளை தேர்தல் கமிஷன் செய்துள்ளது. ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் ஆயுதம் ஏந்திய போலீசாரும், துணை ராணுவ படையினரும் குவிக்கப்பட்டுள்ளனர். பதற்றம் நிறைந்த வாக்குச்சாவடியில் கூடுதல் பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். 

இன்று 5-வது கட்டத் தேர்தல் நடக்கவிருக்கும் சூழ்நிலையில் இம்மாநிலத்தில் இன்னும் இரண்டுகட்ட தேர்தல்களே பாக்கியுள்ளன. தேர்தலில் வெற்றிபெற்றால் மாநில முதல்வராக வரக்கூடிய வாய்ப்புள்ள 3 பேரது பெயர்களை பா.ஜ.க. ஏற்கனவே முன்னிலைப்படுத்திவிட்டதாக கூறப்படுகிறது. ஆனால் இது வெறும் அரசியல் ஸ்டண்ட் என்றும், வாக்காளர்களை ஈர்க்கும் தந்திரம் என்றும் மற்ற கட்சியினர் கூறிவருகிறார்கள். இதுகுறித்து பா.ஜ.க. தேசிய தலைவர் நிதின் கட்காரியிடம் கேட்டபோது, தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் தான் முதல்வரை தேர்ந்தெடுப்பார்கள். எனவே முதல்வர் வேட்பாளர் என்று யாரும் இல்லை என்று தனது நிலையை மாற்றிக்கூறினாராம். இருந்தாலும் ஒரு கட்டத்தில் உ.பி.யில் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தால் சூரியபிரதாப் சாஹிதான் முதல்வர் என்று அவர் அறிவித்ததாகவும் சொல்லப்படுகிறது. மற்றொரு இடத்தில் பேசியபோது, உமாபாரதி பெயரை சொன்னதாகவும், கல்ராஜ்மிஸ்ரா பெயரை வேறு ஒரு பிரச்சார கூட்டத்தில் சொன்னதாகவும் கூறி எதிர்க்கட்சியினர் கிண்டலடிக்கிறார்கள். உமாபாரதி ஒரு பொறுப்புள்ள தலைவர். மக்களின் பிரச்சனைகளை அறிந்தவர். உ.பி.யில் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தால் அவர்தான் முதல்வர் என்று கட்காரி சொன்னதாகவும் சொல்லப்படுகிறது. எது எப்படியோ இம்மாநில முதல்வர் பெதவிக்கு 3 பேரது பெயர்களை பா.ஜ.க. இப்போதே உலவ விடுகிறது. ஒருவேளை மாயாவதி வெற்றிபெற்று மீண்டும் முதல்வராகிவிட்டால் இவரது கனவு மட்டுமல்ல, ராகுலின் கனவும் புஸ்வாணமாகிவிடும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்