முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உறவை பலப்படுத்த இந்தியா-தெ.கொரியா தீர்மானம்

திங்கட்கிழமை, 26 மார்ச் 2012      உலகம்
Image Unavailable

 

சியோல், மார்ச் 26 - பாதுகாப்பு மற்றும் ராணுவ ஒத்துழைப்பு உறவுகளை வலுப்படுத்த இந்தியாவும் தென்கொரியாவும் உறுதிபூண்டுள்ளன. நான்கு நாள் பயணமாக பிரதமர் மன்மோகன்சிங் தென்கொரியா சென்றுள்ளார். அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பு கொடுக்கப்பட்டது. தென்கொரிய ஜனாதிபதி மாளிகையில் இரு நாட்டு உயர் அதிகாரிகள் மட்டத்திலான கூட்டம் ஒன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தென்கொரிய ஜனாதிபதி லீ மியூங் பாக், பிரதமர் மன்மோகன்சிங் ஆகியோர் கலந்துகொண்டனர். அப்போது நடைபெற்ற பேச்சுவார்த்தையில் இருநாடுகளுக்கும் இடையேயான உயர்மட்ட பேச்சுவார்த்தைகள் திருப்திகரமாக நடைபெற்று வருகின்றன என்றும், இரு நாடுகளின் பொருளாதாரமும் சீரான வளர்ச்சியை கண்டுவருகின்றன என்றும் இந்த கூட்டத்தில் கருத்து தெரிவிக்கப்பட்டது. பொருளாதாரம், வர்த்தகம், பாதுகாப்பு, கலாச்சாரம் ஆகியவைகளில் இருநாடுகளுக்கு இடையே நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு வருவதாகவும் கூட்டத்தில் கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இரு நாட்டு மக்களும் ஒருவருக்கு ஒருவர் பரஸ்பரம் பல்துறைகளிலும் பரிமாற்றம் செய்து வருகிறார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும் பாதுகாப்பு, ராணுவ ஒத்துழைப்பு உறவுகளை வலுப்படுத்த தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வது என்று இரு நாடுகளின் தலைவர்களும் ஒப்புக்கொண்டுள்ளனர். ராணுவம், ஆக்கப்பூர்வ அணு எரிசக்தி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் உறவுகளை வலுப்படுத்துவது குறித்து இந்த கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்பட்டது.

சியோல் நகரில் உள்ள இந்திய தூதரகத்தில் ராணுவ துணைப்பிரிவு ஒன்றை அமைக்க இந்தியா திட்டமிட்டிருப்பதாக தென்கொரிய ஜனாதிபதியிடம் பிரதமர் மன்மோகன்சிங் கூறினார். அதை தென்கொரிய ஜனாதிபதி மகிழ்ச்சியுடன் வரவேற்றார். இந்த ஆண்டு பிற்பகுதியில் தென்கொரிய ராணுவ அமைச்சர் இந்தியாவுக்கு வர இருக்கிறார். இருநாடுகளின் ராணுவ உயர் அதிகாரிகள் மட்டத்திலான பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து நடைபெறும் என்று ஜனாதிபதி லீ கூறினார். ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி துறையில் இரு நாடுகளின் கூட்டு முயற்சி நிறுவனங்களை அமைக்கவும் இரு நாடுகளும் ஒப்புக்கொண்டுள்ளன. உற்பத்தியில் துணைபுரிதல், தொழில்நுட்ப பரிமாற்றம் ஆகியவற்றிலும் இரு நாடுகளும் சேர்ந்துழைப்பது எனவும் இந்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்