முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அரசு அலுவலர் பயிற்சி மையங்களுக்கு கூடுதலாக 21 பணியிடங்கள்

சனிக்கிழமை, 18 ஆகஸ்ட் 2012      தமிழகம்
Image Unavailable

சென்னை, ஆக.- 18 - சென்னையிலுள்ள அண்ணா மேலாண்மை பயிற்சி மைய கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த ரூ.1.60 கோடி நிதிஒதுக்கீடு செய்யவும், மூன்று மண்டலங்களில் உள்ள அரசு அலுவலர் பயிற்சி மையங்களில் கூடுதலாக 21 பணியிடங்களை உருவாக்கவும் முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:- மக்களுக்கும், அரசுக்கும் இடையே பாலமாகச் செயல்படும் அரசு ஊழியர்கள், அரசின் திட்டங்களை மக்களிடம் திறம்பட எடுத்துச் செல்லும் வகையில் அவர்களுக்கு அனைத்து நிலைகளிலும் உரிய பயிற்சி அளிக்கப்பட வேண்டும் என்பதை கருத்தில் கொண்டு, அரசு அலுவலர்களுக்கு உரிய பயிற்சி வழங்குவதற்கான பல்வேறு நடவடிக்கைகளை தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் தலைமையிலான அரசு எடுத்து வருகிறது. அந்த வகையில் பவானி சாகரிலுள்ள அரசு அலுவலர்களின் பயிற்சி நிலையத்தினை அனைத்து தற்கால நவீன வசதிகள் அமையப் பெற்ற ஒரு பயிற்சி நிலையமாக மாற்றி அமைக்க, 35 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என தமிழக முதல்வர் ஜெயலலிதா ஏற்கெனவே அறிவித்துள்ளார். இதேபோன்று, மாநில அரசுத்துறைகள், மாநில அரசு சார்பு நிறுவனங்கள், மத்திய அரசுத்துறைகள், பிற மாநில அரசுத்துறைகள் ஆகியவற்றை சார்ந்த அலுவலர்களுக்கு பொது நிர்வாகம், பேரிடர் மேலாண்மை, தகவல் தொழில்நுட்பம், மின் ஆளுமை, நடத்தையியல், தகவல் பெறும் உரிமைச் சட்டம் 2005, தர மேலாண்மை, திட்ட மேலாண்மை, ஆளுமை மேம்பாடு ஆகிய துறைகளில் பயிற்சி அளித்து வரும் சென்னையிலுள்ள அண்ணா மேலாண்மை நிலையத்தின் இயக்குநரின் கட்டுபாட்டின் கீழ் சேலம், திருச்சிராப்பள்ளி மற்றும் மதுரை ஆகிய மூன்று இடங்களில் மண்மடலப் பயிற்சி மையங்களை உருவாக்க தமிழக முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இதன் மூலம் அரசுத்துறை  ஊழியர்கள் தாங்கள் பணி செய்யும் இடங்களுக்கு அருகிலேயே பயிற்சி பெறுவதற்கு வழிவகை ஏற்படும். ஒவ்வொரு மண்டல பயிற்சி மையத்திற்கும் ஒரு ஆசிரியர், ஒரு இளநிலை நிர்வாக அலுவலர் (வட்டாட்சியர் நிலையில்), ஒரு உதவியாளர், ஒரு கணக்காயர், ஒரு இளநிலை உதவியாளர் மற்றும் கணினி இயக்குநர், ஒரு ஓட்டுநர், ஒரு அலுவலக உதவியாளர் என 7 பணியிடங்களை உருவாக்க, அதாவது, மூன்று மண்டலப் பயிற்சி மையங்களுக்கும் சேர்த்து 21 பணியிடங்களை உருவாக்க தமிழக முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இதனால் அரசுக்கு 2 கோடியே 46 லட்சம் ரூபாய் செலவினம் ஏற்படும். மேலும், சென்னையிலுள்ள அண்ணா மேலாண்மை பயிற்சி நிலையத்தில், பயிற்சிகள் நடத்துவதற்குரிய கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்காக 1 கோடியே 60 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து தமிழக முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். அரசின் இந்த நடவடிக்கைகள் மூலம் அரசுப் பணியாளர்களுக்கு நல்ல தரமான பயிற்சி அளிக்கப்பட்டு, அவர்களது நிர்வாகத் திறன் உயர வழிவகை ஏற்படும். இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்