முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருவண்ணா மலையில் மகா தேரோட்டம்: பக்தர்கள் குவிந்தனர்

ஞாயிற்றுக்கிழமை, 25 நவம்பர் 2012      தமிழகம்
Image Unavailable

 

திருவண்ணாமலை, நவ. 25 - திருவண்ணாமலையில் நேற்று மகா தேரோட்டம் நடைபெற்றது. இதனை முன்னிட்டு அங்கு லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்.  சிவனின் பஞ்சபூத தலங்களில் திருவண்ணாமலை அக்னி தலமாகும். மற்ற பிற தலங்களில் சிதம்பரம் ஆகாயத்தையும், காளஹஸ்தி காற்றையும், திருவானைக்கோவில் நீரையும், காஞ்சிபுரம் மற்றும் திருவாரூர் நிலத்தையும் குறிக்கும் தலங்கள் ஆகும்.

திருவண்ணாமலையில் ஆண்டு முழுவதும் திருவிழாக்கள் நடந்து கொண்டு இருக்கும். இது தவிர ஒரு வருடத்தில் நான்கு முறை கொண்டாடப்படும் பிரம்மோற்சவங்களில் தமிழ் மாதமாம் கார்த்திகையில் கொண்டாடப்படும் பிரம்மோற்சவமே மிக சிறப்பானதாகும். இத்திருவிழா பத்து நாட்கள் கொண்டாடப்படுகிறது. இதில் பத்தாம் நாள் திருவிழாவே கார்த்திகை தீபத் திருவிழா ஆகும்.

இந்த பத்தாம் நாளன்று காலை கோவிலில் பரணி தீபம் ஏற்றப்படும். பின்பு மாலை அண்ணாமலை என அழைக்கப்படும் மலையின் உச்சியில் நெய்யினால் தீபம் ஏற்றப்படும். இந்த தீபமானது தொடர்ந்து 11 நாட்கள் எரியும்.

இந்த நிலையில் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நேற்று (24.11.12) மகா தேரோட்டம் நடந்தது.  இதனை முன்னிட்டு ரதத்தில் பொருத்தப்பட்ட ஹைட்ராலிக் பிரேக்கை தொழில்நுட்ப பொறியாளர்கள் ஆய்வு செய்தனர்.

கார்த்திகை தீப திருவிழாவை முன்னிட்டு ஆறாம் நாள் திருவிழாவில், பகலில் வெள்ளி மூஷிக வாகனத்தில் விநாயகர், வெள்ளி யானை வாகனத்தில் சந்திரசேகரர் வீதி உலாவும், தொடர்ந்து 63 நாயன்மார் சிலைகளின் ஊர்வலமும் நடைபெற்றது. நேற்று 63 அடி உயரமுள்ள மகா ரத தேரோட்டம் நடைபெறுகிறது.

இதனை முன்னிட்டு அதிகாலை 3:00 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு பஞ்சமூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜை நடைபெற்றது. மேலும் தேரோட்ட விழாவில் கலந்து கொள்ள தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்