முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாஸ்டன் நகரில் குண்டு வெடிப்பு: 3 பேர் பலி

செவ்வாய்க்கிழமை, 16 ஏப்ரல் 2013      உலகம்
Image Unavailable

பாஸ்டன், ஏப். 17 - அமெரிக்காவில் பாஸ்டன் நகரில் அடுத்தடுத்து நடந்த இரு குண்டுவெடிப்புகளில் 3 பேர் பலியாயினர். மேலும் நூற்றுக்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளனர். மசாசூசெட்ஸ் மாகாணத்தில் உள்ள பாஸ்டன் நகரில் நேற்று நடந்த மாரத்தான் போட்டியைக் குறி வைத்து இந்தத் தாக்குதல் நடந்தது. மாரத்தான் போட்டி முடிவடையும் இடத்தில் இந்த இரு குண்டுகளும் வைக்கப்பட்டிருந்தன. இந்த மாரத்தான் போட்டியில் சுமார் 16,000 பொது மக்கள் பங்கேற்றிருந்தனர். பாஸ்டன் தெருவில் இந்தப் போட்டி முடிவடைந்த நிலையில், அங்கு மக்கள் குவிந்திருந்த போது அடுத்தடுத்து இரு குண்டுகள் வெடித்தன. 

இதில் ஒரு 8 வயது சிறுவன் உள்பட 3 பேர் பலியாகி விட்டனர். மேலும் 137 பேர் படுகாயமடைந்துள்ளனர். இதல் 17 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இதையடுத்து போலீசார் அங்கு நடத்திய சோதனையில் மேலும் 2 குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டன. அவை உடனடியாக அங்கிருந்து அகற்றப்பட்டு வெடிக்கச் செய்யப்பட்டன. பாஸ்டன் குண்டுவெடிப்பு சம்பவம் குறித்து எப்.பி.ஐ. அதிகாரிகள் சவுதியைச் சேர்ந்த 20 வயது வாலிபர் ஒருவரிடம் விசாரணை நடத்தியுள்ளனர். 

குண்டு வெடிப்பு சம்பவம் நடந்த இடத்திற்கு அருகே படுகாயம் அடைந்த சவுதியைச் சேர்ந்த 20 வயது வாலிபர் ஒருவர் பிரிக்ஹாம் அன்ட் உமன்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரை போலீசார் தங்கள் காவலில் எடுத்து விசாரணை நடத்தினர் என்று கூறப்படுகிறது. 

மேலும் மாஸ், ரெவியரில் உள்ள அந்த நபரின் அபார்ட்மென்ட்டில் எப்.பி.ஐ. மற்றும் மாநில சட்ட அமலாக்க பிரிவு அதிகாரிகள் சோதனை நடத்தினர். ஆனால் சோதனையில் எதுவும் சிக்கியதா என்று தெரியவில்லை. மருத்துவமனையில் அந்த வாலிபரின் உடைகள் பரிசோதிக்கப்பட்டது. அவரிடம் நேரடியாக எந்த கேள்விகளும் கேட்கப்படவில்லை என்றும் சம்பவம் நடந்த பகுதியில் என்ன செய்தீர்கள் என்பது போன்ற பொதுவான கேள்விகளே கேட்கப்பட்டது என்றும் கூறப்படுகிறது. 

அந்த நபர் குண்டுவெடிப்பு சம்பவம் நடந்ததற்கு அரை மைல் தூரத்தில் உள்ள பாஸ்டன் ப்ருடன்ஷியல் சென்டரில் நேற்று முன்தினம் இரவு சாப்பிட்டுள்ளார். மேலும் மாரத்தான் முடியும் இடமான கோப்லி பிளாசாவுக்கு போட்டியைக் காணச் சென்றுள்ளார். இதை அவரே அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளார். யாராவது இறந்து விட்டார்களா என்று அவர் கேட்டுள்ளார். அவரது செயல்கள் சந்தேகத்திற்கு இடமாக இருந்ததால் தான் அவர் கைது செய்யப்பட்டார் என்று சம்பவ இடத்தில் நின்றிருந்த ஒருவர் தெரிவித்தார். 

அமெரிக்காவின் பாஸ்டன் நகரில் அடுத்தடுத்து நடந்த இரு குண்டுவெடிப்பு சம்பவங்களிலும் செல்போன் வெடிகுண்டுகள் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. மாரத்தான் போட்டி நடைபெற்ற போது பிற்பகல் 2.45 மணிக்கு இயக்கப்பட்டிருக்கிறது. இதைத் தொடர்ந்து 50 அல்லது 100 மீட்டர் தொலைவுக்குள் 2 வது குண்டு வெடிக்கச் செய்யப்பட்டிருக்கிறது. 

இந்த அடுத்தடுத்த தொடர் சம்பவங்களானது தொலைவில் இருந்து கொண்டு செல்போன் மூலம் வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்வதாக இருந்தது. இதை உறுதிப்படுத்தும் வகையில்தான் குண்டுகள் வெடிக்கத் தொடங்கிய உடனே பாஸ்டன் நகரில் செல்போன் இணைப்புகள் சேவை துண்டிக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகின. ஆனால் அதிகாரப்பூர்வமாக செல்போன் சேவையை துண்டிக்கவில்லை என்றும் ஒரே நேரத்தில் மாரத்தான் போட்டியில் பங்கேற்ற பல்லாயிரம் பேர் செல்போன்களை பயன்படுத்தியதால் நெட்வொர்க்கில் நெருக்கடி ஏற்பட்டது என்றும் கூறப்படுகிறது.

இருப்பினும் செல்போன் சேவைகளை துண்டித்ததன் மூலம் இதர செல்போன் வெடிகுண்டுகளை போலீசாரால் கண்டுபிடிக்க முடிந்தது என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இது பற்றி ராணுவ ஆய்வாளர் ஒருவர் கருத்து தெரிவிக்கையில், 

பொதுவாக ஒரு செல்போனை வாங்கி 30 நிமிடத்துக்குள் வெடிகுண்டுகளை பொருத்திவிடக் கூடிய அளவுக்கு தொழில்நுட்பம் வளர்ந்திருக்கிறது.. அந்த வகையான செல்போன் வெடிகுண்டுகளே பாஸ்டன்நகரிலும் பயன்படுத்தப்பட்டிருக்கலாம். என்கிறார் அவர். இந்த குண்டு வெடிப்பு சம்பவத்திற்கு இதுவரை யாரும் பொறுப்பேற்கவில்லை. முஸ்லீம் போராளிகள் அல்லது அமெரிக்க அரசுக்கு எதிரானவர்கள் யாராவது இதை செய்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. விசாரிக்கு சி.ஐ.ஏ. எப்.பி.ஐ. குண்டுவெடிப்பு சம்பவம் பற்றி சி.ஐ.ஏ. எப்.பி.ஐ. மற்றும் தேசிய தீவிரவாத தடுப்பு மையம் ஆகியவை விசாரணை நடத்தி வருகின்றன.

எம்பயர் பில்டிங், டைம்ஸ் சதுக்கத்தில் பாதுகாப்பு அதிகரிப்பு பாஸ்டன் சம்பவத்தையடுத்து எம்பயர் கட்டிடம், டைம்ஸ் சதுக்கம் உள்ளிட்ட அமெரிக்காவின் பல்வேறு இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. லாஸ் ஏஞ்சல்ஸ், வாஷிங்டன், சான்டியாகோ, லாஸ் வேகாஸ், டெட்ராய்ட், அட்லாண்டா, கலிபோர்னியா உள்ளிட்ட முக்கிய நகரங்களில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ்ஈடுபட்டுள்ளனர். உஷார் நிலையில் அதிபர் மாளிகை பாஸ்டன் குண்டுவெடிப்பை அடுத்து அதிபர் ஒபாமா தங்கியிருக்கும் வெள்ளை மாளிகையில் போலீசார் உஷார்படுத்தப்பட்டுள்ளனர். 

போலீசார் தீவிர கண்காணிப்பில் ்ஈடுபட்டுள்ளனர். வரும் ஞாயிற்றுக்கிழமை லண்டனில் மாரதான் போட்டி நடக்கிறது. பாஸ்டன் மாரத்தானை குறிவைத்து வெடிகுண்டு தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளதால் இங்கிலாந்து போலீசார் லண்டன் மாரதானுக்கு செய்யப்பட்டிருக்கும் பாதுகாப்பு ஏற்பாடுகளை மறுபரிசீலனை செய்கின்றனர். பேஸ்புக், டுவிட்டர் கண்காணிப்பு குண்டுவெடிப்பு சம்பவத்தை அடுத்து பேஸ்புக், டுவிட்டர் போன்ற சமூக வலைதளங்களை தீவிரமாக கண்காணிக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

பாஸ்டன் நகரில் நிகழ்ந்த குண்டு வெடிப்பு சம்பவத்திற்கு இந்திய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, பிரதமர் மன்மோகன்சிங் உள்ளிட்ட உலக தலைவர்கள் பலரும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். பாஸ்டன் குண்டு வெடிப்பு சம்பவத்தில் உயிர் இழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்து பிரதமர் மன்மோகன் சிங் அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமாவுக்கு கடிதம் எழுதியுள்ளார். இது குறித்து பிரதமர் ஒபாமாவுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது, 

இந்த குண்டு வெடிப்பு சம்பவம் அமெரிக்கா மற்றும் இந்தியா போன்ற நாடுகளில் பயங்கரவாதத்தின் அச்சுறுத்தல் இன்னும் இருந்து கொண்டுதான் இருக்கிறது என்பதை நினைவுபடுத்துகிறது. இந்த குண்டு வெடிப்பு சம்பவத்துக்கு இந்திய நாட்டு மக்கள் சார்பில் எனது கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கும், காயமடைந்தவர்களுக்கும் எங்களது ஆழ்ந்த அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த குண்டு வெடிப்பு குறித்து விசாரணை நடத்த இந்தியா முழு ஆதரவையும் அளிக்கும் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.

பிரான்சு, சீனா, இங்கிலாந்து, ரஷ்யா ஆகிய நாடுகளின் தலைவர்களும் குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony