முக்கிய செய்திகள்

ஸ்பெக்ட்ரம் விவகாரம் - இழப்பை கணக்கிட சி.பி.ஐ. கோரிக்கை

செவ்வாய்க்கிழமை, 22 பெப்ரவரி 2011      இந்தியா
2G Scam

 

புது டெல்லி,பிப்.22 - ஸ்பெக்ட்ரம் அலைவரிசை வழங்கியதில் அரசுக்கு ஏற்பட்ட இழப்பு அளவை கணக்கிடும்படி தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்திற்கு சி.பி.ஐ. கோரிக்கை விடுத்துள்ளது. இதில் கடந்த 2001 ம் ஆண்டு முதல் 2008 ம் ஆண்டு வரையான காலத்தில் அரசுக்கு ஏற்பட்ட இழப்பு தொகையை கணக்கிடுமாறு கேட்டுக் கொண்டுள்ளது. 

கடந்த 2008 ம் ஆண்டு அலைக்கற்றை ஒதுக்கீட்டில் நடைபெற்ற முறைகேட்டால் அரசுக்கு ரூ. 1.76 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டதாக தலைமை கணக்கு தணிக்கை துறை அதிகாரி குறிப்பிட்டிருந்தார். இந்த வழக்கை சி.பி.ஐ. விசாரித்து வருகிறது. 2001 ம் ஆண்டு முதல் 2008 ம் ஆண்டு வரை அலைக்கற்றை ஒதுக்கீடு தொடர்பாக அரசுக்கு ஏற்பட்ட இழப்பு அளவு குறித்து நிபுணர் குழு கண்டறிந்து அளிக்குமாறு கேட்டுக் கொண்டதாகவும், அதன் மூலம்தான் இத்தகவலை நீதிமன்றத்தில் ஆதாரத்துடன் சமர்ப்பிக்க முடியும் என்றும் சி.பி.ஐ. அதிகாரிகள் தெரிவித்தனர். 

சி.பி.ஐ. விவகாரம் கோரியுள்ளதாகவும், அதை நிபுணர் குழுவுக்கு அனுப்பி உள்ளதாகவும் விரைவிலேயே அறிக்கை கிடைக்கும் என்று டிராய் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அறிக்கை கிடைத்தவுடன் அதை சி.பி.ஐ. க்கு அனுப்பப் போவதாக அவர்கள் மேலும் கூறினர். ஏப்ரல் 1, 2010 முதல் 6.2 மெகா ஹெர்ட்ஸ் அலைக்கற்றை லைசென்ஸ் கட்டணத்தை நிர்ணயித்து டிராய் பரிந்துரை செய்ததை தொடர்ந்து இழப்பு தொகையை மதிப்பீடு செய்யுமாறு சி.பி.ஐ. கேட்டுக் கொண்டதாக தெரிகிறது. 

இதற்கு முன்பு லைசென்ஸ் கட்டணம் ரூ ஆயிரத்து 658 கோடி மட்டுமே. இந்தியா முழுவதுக்குமான கட்டணத்தை ரூ 4 ஆயிரத்து 751.87 கோடியாக டிராய் நிர்ணயித்துள்ளது. இந்த கட்டணம் தொலைத் தொடர்பு பிராந்தியத்துக்கு பிராந்தியம் மாறுபடும். ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் அரசுக்கு ரூ 22 ஆயிரம் கோடி இழப்பீடு ஏற்பட்டதாக சி.பி.ஐ. முன்னர் தெரிவித்து இருந்தது. பின்னர் இழப்பீட்டு தொகை ரூ 50 ஆயிரம் கோடி அளவுக்கு இருக்கும் என அமலாக்கப் பிரிவு தெரிவித்தது. 

இதனால் 2001 முதல் 2008 ம் ஆண்டு வரையான காலத்தில் அலைக்கற்றை ஒதுக்கீட்டால் அரசுக்கு ஏற்பட்ட இழப்பை சி.பி.ஐ அதிகாரிகளாள் கணக்கிட முடியவில்லை. இதையடுத்தே இழப்பை மதிப்பிட்டு அறிக்கை தருமாறு டிராயிடம் சி.பி.ஐ. கோரியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்: