சேப்பாக்கம் மைதானத்தில் போட்டி நடத்த அனுமதி

செவ்வாய்க்கிழமை, 14 மே 2013      விளையாட்டு
Image Unavailable

 

சென்னை, மே.15 - சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் கிரிக்கெட் போட்டி நடத்த கோர்ட் அனுமதி அளித்துள்ளதால் திட்டமிட்டபடி போட்டி நடைபெறும். சென்னை ஐகோர்ட்டில் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் கவுரவ செயலாளர் விசுவநாதன் தாக்கல் செய்த மனுவில் கூறி இருப்பதாவது:-

சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் விளையாட்டு மைதானத்தை எங்கள் சங்கம் சார்பில் பராமரித்து வருகிறோம். அங்கு சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் நடக்கிறது. தற்போது ஐ.பி.எல். போட்டிகள் நடந்து வருகிறது.

மொத்தம் 8 ஐ.பி.எல் போட்டிகளை நடத்த தற்காலிக அனுமதியை சென்னை போலீஸ் கமிஷனரிடமும், தமிழ்நாடு பொதுப்பணித்துறை அதிகாரிகளிடமும் பெற்றுள்ளோம். இதில் 7 போட்டிகள் நடந்து முடிந்து விட்டது. 8-வது போட்டி இன்று (நேற்று) நடக்க உள்ளது. 

இந்த நிலையில் பொதுப்பணித்துறை அதிகாரி நேற்று (முன்தினம்) எங்களுக்கு ஒரு கடிதம் அனுப்பி உள்ளார். அதில் மைதானத்தில் உள்ள கட்டிடத்தின் உறுதிச் சான்றிதழை வழங்கி இருந்தோம். அப்போது சி.எம்.டி.ஏயிடம் இருந்து சான்றிதழ் சமர்ப்பிக்கவில்லை. எனவே கிரிக்கெட் போட்டி நடத்த உறுதி சான்றிதழை ரத்து செய்கிறோம். நீங்கள் புதிதாக விண்ணப்பித்து சான்றிதழ் பெறலாம் என்று கூறியுள்ளனர். இந்த நோட்டீசை ரத்து செய்யவேண்டும். 8-வது ஐ.பி.எல் போட்டிக்காக ஏற்கனவே 30 ஆயிரம் பேருக்கு டிக்கெட் வழங்கியுள்ளோம். எங்களுக்கு எந்த விளக்கமும் தராமல் அனுமதியை ரத்து செய்து பொதுப்பணித்துறை என்ஜினீயர் உத்தரவிட்டிருப்பது சட்ட விரோதமாகும்.

இந்த உத்தரவு உள்நோக்கத்துடன் பிறப்பிக்கப்பட்டு உள்ளது. எனவே பொதுப்பணித்துறை நோட்டீசை ரத்து செய்து போட்டி நடத்த அனுமதிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் மனுவில் கூறி இருந்தார்.

இந்த மனுவை அவரச வழக்காக விசாரிக்க வேண்டும் என்று மனுதாரர் வக்கீல் பி.எஸ்.ராமன் ஐகோர்ட்டு பதிவாளரிடம் கோரிக்கை மனு கொடுத்தார். இதையடுத்து இந்த மனுவை நீதிபதிகள் எம்.வேணுகோபால், என். கிருபாகரன் ஆகியோர் நேற்று மதியம் விசாரித்தனர்.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் பொதுப்பணித்துறையின் சான்றிதழ் ரத்துக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவு பிறப்பித்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்: