சூதாட்டம்: வாரிய தலைவரின் மருமகனுக்கு தொடர்பு

புதன்கிழமை, 22 மே 2013      விளையாட்டு
Image Unavailable

 

மும்பை, மே.23 - ஐபிஎல் கிரிக்கெட் சூதாட்டத்தில் இந்திய கிரிக்கெட் வாரியத் தலைவர் சீனிவாசனின் மருமகன் குருநாத்துக்கும் தொடர்பு இருப்பதாகத் தெரிகிறது. இதனையொட்டி அவரிடம் விசாரணை நடத்த போலீஸார் முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது. மேலும் சென்னையில் உள்ள குருநாத் வீட்டில் நேற்று சோதனை நடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.

6-வது ஐபிஎல் கிரிக்கெட் போட்டி இறுதிக் கட்டத்தை நெருங்கிக்கொண்டிருக்கிறது. விளையாட்டுப் போட்டியைவிட சூதாட்டம்தான் மும்முரமாக நடந்துகொண்டிருப்பது அம்பலமாகி உள்ளது. இதனையொட்டி சூதாட்டத்தில் சம்பந்தப்பட்டுள்ளதாக ஸ்ரீசாந்த், அங்கித்சவான், அஜித்சாண்டிலா மற்றும் பல தரகர்கள் கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. 

மேலும் பிரபல மல்யுத்த வீரர் மறைந்த தாராசிங்கின் மகனும். திரைப்பட நடிகருமான விண்டு தாராசிங் நேற்று முன் தினம் கைது செய்யப்பட்டுள்ளார். இவருக்கும், சென்னை சூப்பர் கிங்ஸ் உரிமையாளரும், கிரிக்கெட் வாரியத் தலைவருமான சீனிவாசனின் மருமகன் குருநாத்துடன் நெருக்கமான தொடர்பு இருந்து வந்ததுள்ளது. இதை நிரூபிக்கும் வகையில் பல ஆதாரங்கள் கிடைத்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. 

இதனையொட்டி குருநாத்தின் வீட்டில் மும்பை போலீஸார் நோட்டீஸ் ஒட்டினர். மேலும் குருநாத்தின் வீட்டில் போலீஸார் சோதனையும் நடத்தினர். சோதனையின்போது  முக்கியத் தடயங்கள் சிக்கி இருப்பதாகத் தெரிகிறது. பிரபல தொழிலதிபரான குருநாத் பிரபல திரைப்பட தயாரிப்பாளர் ஏவிஎம் சரவணனின் சகோதரர் பாலசுப்பிரமணியனின் மகன் ஆவார். குருநாத்திடம் விசாரணை நடத்த போலீஸார் முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது.   

                                

 

 

ஸ்பாட் பிக்ஸிங்: சீனிவாசன் மருமகன்  கைதாவாரா?

 

ஐபிஎல் ஸ்பாட் பிக்ஸிங் தொடர்பாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி உரிமையாளரும், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய தலைவருமான சீனிவாசனின் மருமகனும், அணியின் சிஇஓவுமான குருநாத் மெய்யப்பனிடம் மும்பை போலீசார் விசாரணை நடத்தவிருக்கின்றனர்.

ஐ.பி.எல். சூதாட்டம் தொடர்பாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரர் ஸ்ரீரீசாந்த், அஜித் சாண்டிலா, அங்கீட் சவான்  மற்றும் சில தரகர்கள் கைது செய்யப்பட்டனர்.  தரகர்கள் கைதுசெய்யப்பட்டதைத் தொடர்ந்து நாடு முழுவதும் போலீசார் தீவிர சோதனை நடத்தி சூதாட்டக் கும்பலை கைது செய்து வருகின்றனர்.

மும்பையில் நேற்றுமுன்தினம் கைது செய்யப்பட்ட நடிகர் விண்டு தாராசிங்கிடம் போலீசார் விசாரணை நடத்தியதில் பல முக்கிய தகவல்கள் கிடைத்துள்ளன. அதன்படி பி.சி.சி.ஐ. தலைவர் சீனிவாசனின் மருமகன் குருநாத் மெய்யப்பனிடம் விசாரணை நடத்த மும்பை போலீசார் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறத

கைது செய்யப்பட்ட தரகர்களில் ஒருவரான ரமேஷ் வியாஸ் அளித்த தகவலின்படி மறைந்த பாலிவுட் நடிகர் தாரா சிங்கின் மகன் வின்து தாரா சிங்(49) நேற்று கைது செய்யப்பட்டார். விசாரணையில் ஸ்பாட் பிக்ஸிங்கில் ஈடுபட்டதை அவர் ஒப்புக் கொண்டார். மேலும் தனக்கும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி உரிமையாளரும், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய தலைவருமான சீனிவாசனின் மருமகனும், அணியின் சிஇஓவுமான குருநாத் மெய்யப்பனுக்கும் தொடர்பு உள்ளது என்றும் தெரிவித்துள்ளார். அவரது செல்போனில் இருந்து மெய்யப்பனுக்கு அடிக்கடி கால் செய்து பேசியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும் அவர் மெய்யப்பனிடம் பேசிய பிறகு வியாஸிடம் போனில் பேசியதாக போலீசார் தெரிவித்தனர். ஆனால் தற்போது மெய்யப்பனும், தானும் நண்பர்கள் என்றும், சொந்த விஷயமாக அவருடன் போனில் பேசியதாகவும் விண்டு தெரிவித்துள்ளார். இருப்பினும் மெய்யப்பனிடம் விசாரணை நடத்த மும்பை போலீசார் தீர்மானித்துள்ளனர்.சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் அணி தலைவர் மற்றும் தலைமை செயல் அதிகாரியாக குரு மெய்யப்பன் செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. 

ஐபிஎல். போட்டிகளின் போது குறிப்பாக சென்னை சூப்பர் கிங்ஸ் போட்டிகளின் போது விண்டூ தாரா சிங் மிக சுலபமாக வி.ஐ.பி. பாக்சில் உட்கார்ந்தார். மேலும் ஆட்டம் முடிந்தவுடன் நடைபெறும் விருந்துகளிலும் விண்டு மிக எளிதாக கலந்து கொண்டுள்ளார்.இது குறித்து மேலும் விசாரணையில் தகவல்கள் வரும் வரையில் எதுவும் கூற முடியாது என்று போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

குரு மெய்யப்பன் சூதாட்ட தரகர்களுடன் தொடர்பு வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டால், அதன்பின்னர் அவரை கைது செய்து விசாரணை நடத்தப்படும் என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்: