முக்கிய செய்திகள்

தூத்துக்குடியில் மாவட்ட தி.மு.க. துணைச்செயலாளர் படுகொலை

தூத்துக்குடி, மே - 1 - தூத்துக்குடியில் திமுக மாவட்ட துணைச்செயலாளர் நேற்று காலை மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.
தூத்துக்குடி சாமுவேல்புரத்தை சேர்ந்தவர் ஏ.சி.அருணா (வயது 52).தூத்துக்குடி மாவட்ட திமுக துணைச்செயலாளராகவும், திமுக பொதுக்குழு உறுப்பினராகவும் இருந்து வந்த இவர் காண்டிராக்ட் தொழிலும் செய்து வந்தார். இவர் தினமும் காலையில் வாக்கிங் செல்வது வழக்கம். அது போல நேற்றும் காலையில் முருகன் என்பவருடன் வாக்கிங் சென்றார். தூத்துக்குடி மாணிக்கபுரம் மெயின்ரோட்டில் உள்ள சி.எஸ்.ஐ மருத்துவமனை முன்பு சென்ற போது அவர்களை ஒரு கார் வழிமறித்தது. அதிலிருந்து இறங்கிய 5 க்கும் மேற்பட்ட கும்பல் அருணாவை அரிவாளால் சரமாரியாக வெட்டியது.பின்பு அந்த கும்பல் தாங்கள் வந்த காரிலேயே தப்பி சென்றது. மர்ம கும்பல் அரிவாளால் வெட்டியதில் உடல் முழுக்க படுகாயமடைந்த அருணா சம்பவ இடத்திலேயே ரத்தவெள்ளத்தில் பலியானார். அருணாவுடன் சென்ற முருகன் என்பவர் அதிர்ச்சியடைந்து தப்பி ஓடிவிட்டார்.ஆள் நடமாட்டம் மிகுந்த இடத்தில் இந்த சம்பவம் நடந்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
சம்பவம் பற்றி அறிந்ததும் சம்பவ இடத்துக்கு தூத்துக்குடி ஏ.டி.எஸ்.பி. ராஜராஜன், டி.எஸ்.பி. ஜெயக்குமார் மற்றும் போலீசார் வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அருணா கொலைக்கான காரணம் என்ன என்பது குறித்து துப்பு துலக்க டி.எஸ்.பி.ஜெயக்குமார், இன்ஸ்பெக்டர் ஜெயசீல் ஆகியோர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி புதிய பஸ்நிலையம் மற்றும் பழையபஸ்நிலையத்தில் சைக்கிள் ஸ்டாண்டை ஏலம் எடுப்பது தொடர்பாக அருணாவுக்கும், மற்றொரு தரப்புக்கும் இடையே தகராறு இருந்துள்ளது. மேலும் அருணா மீது ஒரு கொலை வழக்கும் இருந்துள்ளது. ஆனால் தற்போது அந்த வழக்கும் முடிந்துவிட்டது. தொழில்போட்டி காரணமாகவோ, முன்விரோதத்தாலோ கூலிப்படையினரால் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர். மேலும் அருணாவுடன் உடன் சென்ற முருகனிடம் போலீசார் விசாரணை நடத்தியபோது அவர் தனக்கு எதுவும் தெரியாது என்று கூறியுள்ளார்.இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்களை பிடிக்க பல்வேறு கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கொலை செய்யப்பட்ட அருணாவுக்கு ராஜம் என்ற மனைவியும், லட்சுமிகாந்த் என்ற மகனும், செல்வி பிரியா, சாந்தினி என்ற இரு மகள்களும் உள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்: